Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

விக்கிரமசிம்ஹா -கோச்சடையான்லு

$
0
0

மோஷன் கேப்சரிங், மற்றும் அதன் மேம்பட்ட தொழில்நுட்பமான பர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் போன்றன இன்று மிகச்சிறப்பான நிலையை அடைந்துவிட்டிருக்கின்றன. எனினும், இன்னும் ஹாலிவுட்டில் கூட நிஜ மனிதர்களின் பிரதியான, அனிமேட்டட் மாடல்களை உருவாக்கிப் பயன்படுத்தும் நிலைமை பரவலாக இல்லை. பர்ஃபாமன்ஸ் கேப்சரிங் மிக அவசியமான ஒன்றுதான். ஆனால், நிஜ நடிகர்களின் மாடல்களுக்கு அவசியம் என்ன?அவற்றை கசடற உருவாக்க‌ இன்றைய தொழில்நுட்பத்தின் திறன் போதுமானதா? போன்ற கேள்விகள் நம்முன் எஞ்சி நிற்கின்றன.

நிஜ மனிதர்களின் அசைவுகளையும், முகபாவங்களையும் உருவாக்கும் தேவை சில வகை கம்ப்யூட்டர் கேம்களுக்கான அத்தியாவசியமாகிட, கேமிங் துறையே இவ்வாறான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முதலில் அடிக்கோலிட்டன. இந்தத்துறை, இந்த நுட்பத்தை தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்தே பயன்படுத்தத்துவங்கி, தொடர்ந்து வளர்ச்சியுற்று, இன்று ஒரு தேர்ந்த நிலையை அடைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான 'தி லாஸ்ட் ஆஃப் அஸ்', 'பியான்ட்: டூ ஸோல்ஸ்'போன்ற கேம்கள் இவ்வகையின் லேட்டஸ்ட் வளர்ச்சியை பறைசாற்றுகின்றன. இவ்வாண்டின் இறுதியில் வரவிருக்கும், 'கால் ஆஃப் டூட்டி: அட்வான்ஸ்டு வார்ஃபேர்'‍‍ கேமில் ஒரு காரெக்டரில் தோன்றியிருக்கும் பிரபல நடிகர் கெவின் ஸ்பேஸியின் பிரதியை இந்த இணைப்பில் உள்ள விடியோவில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=sFu5qXMuaJU

Kevin Spacey
இந்த விடியோவின் 57வது விநாடியில் க்ளோஸப்பில் கிடைக்கும் கெவினின் உருவமும், முகபாவமும்தான் இன்றைய சூழலில் உண்மைக்கு மிக நெருக்கமான பர்ஃபாமன்ஸ் கேப்சரிங் அனிமேஷனாக இருக்கலாம். இது வருங்காலத்தில் இன்னும் மேம்படக்கூடும்.

Kevin in Call of Duty
ஹாலிவுட் சினிமாவை எடுத்துக்கொண்டால், கேம்களைப் போலவே நீண்டகாலமாக‌ இந்த நுட்பம் பயன்பாட்டிலிருக்கிறது. ஆனால் அவை நிஜ மனிதர்களை பிரதியெடுக்கும் வேலையில் பெரும்பாலும் ஈடுபடவில்லை. 'டெர்மினேட்டர் சால்வேஷன்'படத்தில் ஒரு காட்சியில் வரும் 'அர்னால்ட்', 'போலார் எக்ஸ்ப்ரஸ்'படத்தின் சில காட்சிகளில் வரும் 'டாம் ஹேங்க்ஸ்'போன்று ஆங்காங்கே நிஜ மனிதர்கள் பிரதியெடுக்கப்பட்டிருந்தாலும் முழு நீளப் படங்கள் என்று பார்த்தால் ஃபைனல் ஃபேன்டஸி, பியோவுல்ஃப் போன்ற மிகச்சில படங்களே தென்படுகின்றன. பியோவுல்ஃபில் ஏஞ்சலினா, ஆன்டனி ஹாப்கின்ஸ் போன்றோர் பிரதியெடுக்கப்பட்டிருந்தனர்.

Arnold back to his 20s in Terminator: Salvation

Angelina Jolie in Beowulf

(ஆனால், அதன் பிரதான காரெக்டரான பியோவுல்ஃபுக்கு நடிப்பை வழங்கிய நடிகர் 'ரே வின்ஸ்டனி'ன் உருவம் அந்தக் காரெக்டருக்காக பிரதியெடுக்கப்படவில்லை. முற்றிலும் வேறான ஒரு உருவத்துக்கு அவர் தன் நடிப்பை வழங்கியிருந்தார். இதுவே இந்த நுட்பத்திலிருக்கும் இன்னொரு பலமான அம்சம். ஒரு நடிகரின் உருவம் 3டியில் ஸ்கேன் செய்யப்பட்டு அந்த உருவுக்கு முற்றிலும் வேறான ஒரு நடிகரின் நடிப்பை வழங்கிவிடமுடியும். கோச்சடையான் படத்தில் நாகேஷை மீண்டும் திரையில் தோன்ற வைக்கமுடிந்தது இப்படித்தான்) 

Ray winstone as Beowulf
ஆக‌, நடிகர்கள் பிரதியெடுக்கப்படுவது குறைவாகவே இருந்தாலும் பர்ஃபாமன்ஸ் கேப்சரிங் நுட்பம் நீண்டகாலமாக தொடர்ந்து பல படங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. லார்ட் ஆஃப் தி ரிங்ஸில் 'கோல்லும்'கேரக்டர் ஒரு பிரபலமான உதாரணம். மனிதர்கள் அல்லாத கற்பனை உருவங்களை உருவாக்கவும், அவற்றை செழுமைப்படுத்தவுமே இந்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர் ஹாலிவுட் இயக்குனர்கள். இதனால் இதன் குறைகள் மறைக்கப்படுகின்றன. 'அட்வென்சர் ஆஃப் தி டின்டின்'படத்தின் அனிமேஷன் காரெக்டர்கள் இதுவரையில்லாத அளவு மனித அசைவுகளை மிகத்துல்லியமாக கொண்டிருந்ததைக் கண்டு வியந்தோம். ஆனால் அந்த உருவங்கள் நிஜ மனிதர்களின் அனாடமியை கொண்டிருக்கவில்லை. 'அவதாரி'ல் நவி மக்கள் வாழும் பன்டோரா எனும் புது உலகே அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்தது. நவிக்கள் மனிதர்களைப் போலவே இருந்தாலும் அவர்களின் முக வடிவமைப்பு, விலங்குகளைப் போன்ற பழுப்பு நிற பெரிய கண்கள், மெலிந்த உடல், உயரம், குறிப்பாக தோலின் இருவேறு நீல நிறங்கள் என அவர்கள் நிறைய வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள். கதை அதற்கேற்ப இசைந்திருந்தது. இதனால் தொழில்நுட்பக் குறைபாட்டை நாம் கண்டுகொள்ளமுடியாதபடி/ அல்லது அதற்கு அவசியமில்லாதபடி செய்யப்பட்டது. ஆனாலும் பர்ஃபாமன்ஸ் கேப்சரிங்கை துல்லியமாக பதிவு செய்ததில் இன்றுவரை அவதாருக்கே முதலிடம் தரலாம். ஜோ ஸல்தானா, நேய்த்ரிக்கு தந்த முகபாவங்கள் அற்புதமான ஒன்று.

Zoe saldana as Neyitiri
கதை தீர்மானிக்கிறதோ, தொழில்நுட்பத்தின் போதாமையோ, பட்ஜெட்டின் போதாமையோ மில்லியன் டாலர்களில் புரளும் ஹாலிவுட் இன்னும் நிஜ மனிதர்களைப் பிரதியெடுத்து காரெக்டர்களை உருவாக்கும் வேலையில் முனைப்பாக இறங்கவில்லை.

அதனால் நமக்கென்ன‌ போச்சு என தைரியமாக நிஜ நடிகர்களின் பிரதியை உருவாக்கி தமிழில் படம் ஒன்றை உருவாக்கிய‌ சௌந்தர்யாவை பாராட்டுவதா, அல்லது படத்தின் ஆக்கத்தைப் பார்த்துவிட்டு பேமுழி முழிப்பதா என்றுதான் எனக்குத் தெரியவில்லை. தமிழில் இன்னும் உருப்படியாக ஒரு அனிமேஷன் படம் கூட வரவில்லை, அதற்குள்ளாக‌ பர்ஃபாமன்ஸ் கேப்சரிங், அதற்கும் மேலாக நிஜ மனிதர்களின் மாடல்கள்! இதற்குப் பெயர்தான் ஆர்வக்கோளாறு என்பதா? ஆனால், ஏற்கனவே மோஷன் கேப்சரிங் நுட்பம் தமிழில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதுதான், நல்ல வேளையாக அதுவும் ரஜினியின் படம்தான். எந்திரன்! ரோபோவின் அசைவுகளுக்காக சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தகுந்தவை அவை!

கோச்சடையானைப் பொறுத்தவரை தமிழில் ஒரு நல்ல அனிமேஷன் முயற்சி என்பதோடு நாம் முடித்துக்கொள்வது நல்லது. எனக்கென்னவோ கோச்சடையான் ஒரு அவியல் மாதிரிதான் தெரிந்தது. சௌந்தர்யா, சுல்தான் தி வாரியர், ஈராஸின் ஒப்பந்தம், பட்ஜெட் என பல பிரச்சினைகள். ரஜினி ரசிகர்கள் படத்தை விட்டுக்கொடுக்காமல், எதைத் தேடிப்பிடிப்பது என முயற்சித்து கடைசியில் கே.எஸ்.ரவிக்குமாரை போட்டுப் பாராட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர் மாவும் விக்கணும், காத்தும் அடிக்குதுங்கிற கவனத்தோட ஏதோ ஒட்டுவேலைகளை முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முழுமையாவது ஒரு இயக்குனரின் கைகளிலேயே இருக்கிறது. காப்பி பேஸ்ட் ஆப்ஷன் இருந்ததோ, சௌந்தர்யாவின் அனிமேஷன் டீம் பிழைத்ததோ! வீரர்கள், குதிரைகள், அவர்களின் அசைவுகள் அனைத்தும் ஒரே மாதிரித் தோற்றம். அதிலும் குதிரையின் அனிமேஷன் எல்லாம் சிறுபிள்ளைத்தனம். 'லிட்டில் கிருஷ்ணா'வில் வரும் விலங்குகள் கூட அநாயசமாக இயங்குகின்றன. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரிடுவதைப்போன்ற காட்சிகளில், ஒவ்வொரு வீரனின் அசைவும் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதற்காக மேஸிவ் எனும் தனித்துவமான மென்பொருளே உருவாக்கப்பட்டதென்று படித்ததெல்லாம் தேவையில்லாமல் இங்கே ஞாபகம் வருகிறது.


ரஜினி ஒரு நல்ல என்டர்டெயினர். ஆனால், எல்லாவற்றையும் விட தயாரிப்பாளர்களின் தங்கம். விளைவுகள் தெரிந்தே படத்தின் விளம்பரத்துக்காக காட்சிகள் வைப்பது, ரசிகர்களின் டெம்போவை பொத்திப் பாதுகாப்பது, விளம்பர ஸ்டன்டுகள் அடிப்பது போன்றவற்றில் விற்பன்னர். அதனால்தான் அமிதாப், சிரஞ்சீவியெல்லாம் எங்கோ போயிருக்க, இன்னமும் ரஜினியின் இடம் அவரிடமே இருக்கிறது. ஆக, இந்தியாவிலேயே முதல் முறையாக பர்ஃபாமன்ஸ் கேப்சரிங், உசிலம்பட்டியிலேயே முதல்முறையாக 3டி, என்றெல்லாம் விளம்பரத்துக்காக இவர்கள் அடிக்கும் ஜல்லிகளையெல்லாம் தேவையென்றால் நம்பிக்கொள்ளுங்கள். தமிழகத்தில் ஒன்றும் பிரச்சினை இல்லை, நாம் ரஜினி கொட்டாவி விட்டால் கூட 'ஆகா எவ்ளோ பெரிய வாய்!'என்று வியக்கக்கூடியவர்கள். ஆனால், தெலங்கானாவில் 'ரஜினி படமா? சூப்பராயிருக்குமே..'என்று என்னுடன் ஆர்வமாக வந்த நண்பர், 'பக்கத்து தியேட்டரில் பாலகிருஷ்ணா விடும் பஞ்ச் டயலாக்கைக் கேட்கப்போயிருப்பேனே.. என்னாதிது..'என்று அலறியதைப் பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது!
.

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!