மனிதனின் காலடிகள் இன்னும் பதிந்திரா காங்கோ மலைக் காடுகளிலும், சஹாரா பாலைகளிலும் இப்போதும் பொழிந்துகொண்டிருக்கிறது ஒரு மென்மழை!
நான் மதுரைக்குப் போயிருந்த அந்த ஒரு மாத காலத்தில்தான் நீ வேறாகிவிட்டாய். உன்னை என்னால் பார்க்கவே முடியவில்லை. வெட்கத்தால் தவித்தேன். எனக்கு வெட்கமே புதிது. நீ வேறு புதிதாய் இருந்தாய். என் மீது மூடிப் படர்ந்திருந்த இலையும் அப்போதுதான் விலகி உதிர்ந்தது.
மனிதன் பால்வெளியை கற்க விழைந்ததைப் போலத்தான், நீ என் காதலை ஏற்க விழைந்ததுதும். உனக்கான கோடி டெரா பைட்டுகள் தகவல்களிலிருந்து, சில கிலோ பைட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டாய். நான் இன்னும் உன்னை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
இன்னும் சற்று நேரம் இருப்பாயாக, உன்னைப் பார்த்துக்கொள்கிறேன், என் கண்கள் நிறையட்டும் என்பதாய் என் வலக்கையைப் பிடித்து நிறுத்திய அன்றைக்கும் நீ நீல நிற தாவணியைத்தான் அணிந்திருந்தாய். பெட்ரோலும், காற்றும் கலந்த கலவை வெடிப்பதற்கு முந்தைய மைக்ரோ கணத்தில் இருப்பதைப் போலவே நான் இருந்தேன். அந்த அழுத்தத்தைத் தாங்குமளவு மனிதன் வடிவமைக்கப்படவில்லை. நீ சற்றுத் தள்ளி நின்றுகொண்டாய்.
பெருகி வரும் வியப்பு, ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி, சாரல் தொட்டெழுப்பும் சிலிர்ப்பு, மின்னல் அருகில் இறங்குவதாய் ஒரு அதிர்வு.. இத்தனையையும் சரிவிகிதமாய் கலந்தொரு உணர்வு! இதை பின்னெப்போதோ தந்தாய்!
படுக்கையிலிருந்து, முகம் முழுக்க எதிர்பார்ப்புடன் உதடுகள் குவித்து, கைகளை நீட்டி அலைபாய்ந்து, என்னைத் தூக்கிக்கொள் என பரிதவித்த குழந்தையை நீ தூக்கிக்கொள்ளவேவில்லை. உதடுகள் கோணி அது அழத்துவங்குமுன் பனித்துத் துளிர்த்த கண்ணீரை அதன் கண்களில் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நீ பால் கொணரத்தான் சென்றாய். ஆயினும் உனக்கு கல்மனது.
உன் கண்கள். அன்று அதிலிருந்த ஏற்புதான் இன்றைக்கு நான் கனவைப் போன்ற இந்த என் உலகை கட்டியெழுப்ப முடிந்தது. அதற்காக நான் சொல்லவேண்டுமா இன்னொரு நன்றி?
என்னதான் வேண்டுமென்று இரைந்து கத்துகிறாய் இப்போது நீ!
ஒரு தாயைப்போல தழுவு, அது போதுமென்கிறேன் நான்!
-பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எஸ்ஜி, கேகேவிடமிருந்து அன்புடன்!