டிவி சீரியலுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம் எனினும் மகாபாரதம் ரொம்பவே ஸ்பெஷல். தவறவிடாமல், தவறவிட்டாலும் நெட்டில் தேடியாவது பார்த்துவிடுகிறேன் மகாபாரதம் சீரியலை!
அவ்வளவு நல்லாயிருக்கா சன் டிவி மகாபாரதம் என்கிறீர்களா? கெட்டது போங்கள்! நான் சொல்வது விஜய் டீவி சீரியலை!!
சன் டிவியில் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் மகாபாரதத்தை ஓரிரு வாரங்கள் பார்த்துவிட்டு மகாபாரதம் அல்ல, வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது எனக்கு. அவ்வளவு மகாமட்டமான மேக்கிங். எந்த ஒரு அடிப்படையிலும், அதில் பாராட்ட ஒன்றுமே இல்லை. இந்த சமயத்தில்தான் விஜய் டிவியில் திங்கள் முதல்-வெள்ளி வரை ஹிந்தியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட மகாபாரதம் ஒளிபரப்பாகத்துவங்கியது. அதை எப்படிச் சொல்வது? சிம்ப்ளி சூப்பர்!
பொருத்தமான நடிகர் தேர்வு, நடிப்பு, காஸ்ட்யூம், கலை, அருமையான ஒளிப்பதிவு, கச்சிதமான சிஜி வேலைகள், பின்னணி இசை.. முன்னதாக சின்னச்சின்ன புதுமைகள் புகுத்தப்பட்ட திரைக்கதை என அனைத்து அம்சங்களிலும் பிரமிப்பூட்டியிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் மொழியாக்கத்தையும், டப்பிங் குரல் தந்தவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும். காஸ்ட்யூம்ஸ் ஒரு புறம் எனில் நகை வடிவமைப்புக்கு இன்னொரு புறம் தனி குழுவே இயங்கியிருக்கவேண்டும். ஒவ்வொரு பாத்திரத்துக்குமான பிரத்யேகமான நகைகள், மணிமகுடங்கள் என கடும் உழைப்பை நல்கியிருக்கிறார்கள். சில முக்கியப்பாத்திரங்களுக்கென பிரத்யேக தீம் பாடல்கள் சிறப்பு சேர்க்கின்றன.
கிருஷ்ணர், பீஷ்மர், துரோணர், யுதிஷ்ட்ரன், அர்ஜுனன், துரியோதனன், கர்ணன், சகுனி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நடிகர்கள் மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு காரெக்டரும் தனித்துவமான காட்சியமைப்புகளில் மிளிர்கின்றனர்.
இதெல்லாவற்றையும் விட முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது இயக்கம். அவ்வளவு ரசனை!
ஒவ்வொரு காரெக்டருக்கும் பொருத்தமான பில்டப் காட்சிகள், கதையில் தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கும் எதிர்பார்ப்பு, ஒரு நிகழ்வுக்காக மெல்ல மெல்ல ஏற்படுத்தப்படும் டெம்போ என சகல வகைகளிலும் பின்னியிருக்கிறார்கள். இயல்பிலேயே மகாபாரதம் ஏராளமான திருப்பங்களையும், சுவாரசியங்களையும், கிளைக்கதைகளையும் கொண்டது. அதன் ஆதாரக்கதையில் பாதிப்பில்லாமல் இவர்களும் கதையில் நிறைய புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, சிசுபாலன், கிருஷ்ணனின் ஜென்மவிரோதி என்பதையும், சிசுபாலனின் நூறு தவறுகள் வரை பொறுமை காக்கவேண்டியது கிருஷ்ணனின் வரம் என்பதையும் நாம் அறிவோம். அதைச் சாக்காகக் கொண்டு பேச்சில் தொடர்குற்றமிழைக்கும் சிசுபாலன் தன் தவறுகளை கணக்கில் கொள்ள இடுப்பிலிருக்கும் மயிலிறகுகளை, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்றாக எடுத்து வீசுவது க்யூட்!
டெக்னிகல் விஷயங்களைப் பயன்படுத்தி மேக்கிங்கிலும் வியப்பூட்டியிருக்கிறார்கள். விற்போரில் சிறந்த அர்ஜுனன், கர்ணன் போன்றோர் வில்லை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதும், அம்பறாத்தூளியை முதுகில் கட்டிக்கொண்டு அம்பை எண்ணிக்கொண்டு அலையவேண்டாம். ஒவ்வொரு முறையும் தேவையான அம்புகள், கிராபிக்ஸில் உருவாகுவது அழகு. போலவே எந்நேரமும் கர்ணன் கவசத்தை அணிந்துகொண்டு அலையவேண்டியதில்லை. ஆபத்து வரும் தருணத்தில் அவரது மார்பில் கவசம் (சிஜி உதவியுடன்) பரவுவதாக அமைத்திருக்கிறார்கள். ஒரு தடவை, துரியோதனனுக்கு எதிரே யாரோ ஆயுதம் ஏந்துகின்றனர். கடமை உணர்ச்சியோடு கர்ணன், துரியோதனனுக்கு முன்னால் குறுக்கே வந்து நிற்பதும், மார்பில் கவசம் மெல்ல மெல்லப் பரவி மூடத்துவங்கியபோது அந்தக் காட்சியின் வீரியம், விறுவிறுப்பு அதனால் பன்மடங்காகியிருந்தது.
ஒரே குறையாக, சீரியல்களுக்கே உரிய சோதிக்கும் அதிக ரியாக்ஷன் டைம், சற்று இழுவையாக சில இடங்களில் இருந்து தொலைக்கிறது. இப்போது சில வாரங்களாக இந்த இம்சை இல்லை. பல இன்னல்களுக்குப் பின்னர் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் நகரை நிர்மாணித்து பொறுப்பேற்கும் சுவாரசியமான நிகழ்வுகள் போய்க்கொண்டிருக்கிறது. எப்படியானாலும் இப்போதைக்கு சண்டை வராது, கிளைமாக்ஸ் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று நமக்குத் தெரிந்தாலும், எந்நேரம் பாண்டவர்களும், கௌரவர்களும் முட்டிக்கொள்ளப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பிலேயே நம்மை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
தொடர்ந்து இதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் என் கூற்றை நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள், பார்க்காதவர்கள் இனியும் அதைத் தவறவிடாதீர்கள் என்று நினைவூட்டவே இந்தச் சிறு பத்தி!
.