அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, காதலி, நண்பர்கள் என எத்தனை உறவுகள் அவனுக்கு, நம்மைப் போலவே. எனக்கு சில மாதங்களாகத்தான் தெரியும் அவனை. அவனைப்போல ஒரு வேலையாள் கிடைப்பது அரிதிலும் அரிது. சொன்ன வேலையை கச்சிதமாக, விரைவாக முடிப்பான். அதுவும் எங்கள் வேலையோ திட்டமிட்டபடி செய்யப்படும் வேலையாக இல்லாமல், நேரும் விதம்விதமான சிக்கல்களை சமயோஜிதமாக சமாளித்து, கிடைக்கும் விதம் விதமாக சூழலைப் பொறுத்துக்கொண்டு, இருப்பதைக்கொண்டு முடிக்கவேண்டிய அவசியம் உள்ள பணி. அதில் இப்படியொரு கச்சிதமான ஒரு நபரை இந்த 15 ஆண்டுகால என் அனுபவத்தில் நான் பார்த்ததேயில்லை.
ஓரிரு தடவைகள் வெளியூர் பணிகளில் அவனோடு பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்த போது அவன் இன்னும் என் மனதுக்கு நெருக்கமாகிப்போனான். பணியைத் தாண்டியும் அவன் ஒரு சுவாரசியமான ஆளாக இருந்தான். நிறைய சினிமா பார்ப்பான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரவுகளில் வாக்கிங் போகலாம் சார் என நச்சரிப்பான். அவன் மொழியில் வாக்கிங் என்பது மதுவருந்தச்செல்வது. குடித்தால் நிறைய பேசுவான். நானும்தான். அதிலிருந்து என் மீது இன்னும் அதிக மரியாதையைக் காட்டினான்.
அந்த நீண்ட சாலையில் தனியே நின்றுகொண்டிருந்தான் அவன்.
"என்ன சார் முழிக்கிறீங்க.. அந்த 2 எச்பி மோட்டார் போர் பண்றதுக்குள்ள முக்கியிருக்குமே.. நாந்தான் சொன்னேன்ல.."
நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் முன்னாடி போறேன். நீங்க ஆபீஸ் வேலையை முடிச்சிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் போகும் போது காற்றில் புகை கலைவதைப் போல அவன் உருவமே மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போனது.
அதிர்ந்து விழித்தெழுந்தேன்.
சில நாட்களுக்கு முன்பு அவன், சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, வழுக்கி, அருகே சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி ஒரு சில நொடிகளில் இறந்துபோய்விட்டான்.
நெருங்கிய ஒரு உறவு இறந்ததைப் போல நொறுங்கிப்போனேன். மனித உடல் இரும்பிலே செய்யப்படவில்லை. உயிருக்கு இன்னொரு வாய்ப்பே கிடையாது. ஒரு கொசு இறந்துபோவதைப் போல மனிதன் ஒரு நொடியில் இறந்துபோவான் என்ற உண்மை என் மனதை மிகவும் படுத்திக்கொண்டிருக்கிறது.
அவன் பாதி திறந்துபோட்டிருந்த அந்த 2 எச்பி மோட்டாரின் கியர்பாக்ஸ் திறந்தபடியே கிடக்கிறது என் அலுவலக அறையில்.
.