'புதிய அலை'இயக்குனர் வரிசையில் இன்னொரு நபராய் அருண்குமார். (எத்தினி வாட்டிதான் பீட்சா, ந.கொ.ப.கா, சூது கவ்வும், மூடர் கூடம்னு லிஸ்ட் போடுறது. பொதுவா இப்படி ஒரு பெயர் வைச்சிகிட்டா நல்லாயிருக்கும்ல.. அதான் இந்த புதிய அலை!). அருண்குமாருக்கு இந்த இடம், அவர்களின் அதே சிறப்புகள் இவரிடமும் இருந்ததால் மட்டுமல்ல, அவர்களிடமுள்ள அதே பிரச்சினையும் இருப்பதால்தான் கிடைக்கிறது.
ஒரு புதிய கதை. ஒரு காரெக்டருக்கு, ஒரு பொருளின் மீது ஏற்படும் ஈர்ப்பை மையமாகக்கொண்ட கதை தமிழுக்குப் புதிதுதானே! கூடவே அழகான பாத்திரப்படைப்பு, முடிந்தவரை இயல்பான காட்சிகள். வெறுப்பேற்றும் குத்துப்பாடல்களுக்கும், வெற்று சண்டைக்காட்சிகளுக்கும், திடுக்கிடும் திருப்பங்களுக்கும் ஒரு நோ! இது போதுமே பாராட்டை ஓடிவந்து பெற்றுக்கொள்வதற்கு. ஆக, ஒரு வார்ம் வெல்கம் அருண்குமாருக்கு!
கதைச்சூழலுக்கு தேவைப்படுவதால் ஒரு 30 வருடங்களுக்கு முன்பு பயணிக்கும் பீரியட்! இன்னும் சிரத்தை மேற்கொண்டிருந்தால் இந்த விஷயத்தில் ஒரு கிளாஸிகல் தரத்தைத் தொட்டிருக்கலாம். பரவாயில்லை, அவர்கள் நோக்கமும் அதுவல்ல.
ஒரு காரின் மீதான ஒரு பண்ணையாரின் காதல், அதற்கு ஏற்படும் ஊறு, அதற்கான முடிவு என மொத்தக்கதையுமே கடைசி அரை மணி நேரத்தில்தான் நிகழ்கிறது. குறும்படத்தின் கதை சினிமாவுக்குத் தகுதியானதா என்பதை இன்னும் கொஞ்சம் கூட ரூம் போட்டு சிந்திக்கலாம் நம் நண்பர்கள். அதையொட்டி எழுப்பப்படும் பிற காட்சிகளைத் தாங்கும் வலிமை பிரதான கதைக்கு வேண்டும். அங்கேதான் இந்தப்படமும், மற்ற முந்தைய புதிய அலையைப் போலவே சறுக்குகிறது.
பண்ணையாரைப் போலவே காரை நேசிக்கும் அவரது பிரதான ட்ரைவர் முருகேசனின் காதல் எந்த விதத்திலும் கதையையோ, நம்மையோ பாதிக்கவில்லை. குறைந்தபட்சம் சுவாரசியம் கூட இல்லாமல் போனது துரதிருஷ்டம். போலவே, பண்ணையாருக்கும், அவர் மனைவிக்குமான முதிர்பருவக் காதலும் கூட வலிந்து காரோடு ஒட்டப்பட்டிருக்கிறது. அதிலும் சலிப்பூட்டும் நிலை வரை தைரியமாக பயணித்திருக்கிறார்கள். இருப்பினும் ஓரளவு படத்தைக் காப்பாற்றுவது அந்தக் காதல்தான்.
துவக்கம் முதல் ஆங்காங்கே சில மனிதர்களையும், சூழல்களையும் வில்லனாக்குவது போல டெம்ட் ஏற்றி, உடனேயே விக்ரமன் பாணியில் லாலாலா பாடி சுபமாய் முடித்துவைக்கிறார்கள். எப்படியோ ஒருவகை டெம்போவை படம் நெடுக நீடிக்க வைத்திருந்த வகையில் வெற்றிதான். வலிந்து திணிக்காத, சூழலோடு இயைந்த, மெல்லிய நகைச்சுவை படத்துக்கு பலம். பீடை காரெக்டர் அந்த வகையில் பலம்தான்!
அனைத்து நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பெனினும், பண்ணையாரின் மனைவி காரெக்டரில் துளசி அனைவரையும் ஒருபடி விஞ்சுகிறார். பின் ஜெயப்பிரகாஷ், பின்பு சேதுபதி. விஜய் சேதுபதி இப்படியான அடக்கி வாசிக்கும் இயல்பான ஹீரோ காரெக்டரில் இருக்கும் வரை அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது. ஐஸ்வர்யாவுக்கு படத்தில் பஞ்சாலை வேலையைத் தவிர்த்து வேறு வேலையே இல்லை.
ஒரு சில குறைகள் இருந்தாலும், நிச்சயம் பார்க்கவேண்டிய, வரவேற்க வேண்டிய முயற்சிதான்!
.