Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

இரண்டாம் உலகம்

$
0
0

இரண்டாம் உலகம் தமிழில் அரிதாக அவ்வப்போது வரும் உலகப்படங்களில் ஒன்றாகும். இந்த வகைப்படங்களெல்லாம் சாதா ஆடியன்ஸுக்கு அவ்வளவாக புரியாது என்பதால், ஸ்பெஷல் சாதாவான நான் கொஞ்சம் சிரமம்பார்க்காமல் கதையை விளக்க முற்படுவது வழக்கம். குருவி, யாருக்கு யாரோ ஸ்டெப்னி, ஆழ்வார், நையாண்டி போன்ற முந்தைய உலகப்படங்களுக்கும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிவீர்கள்தானே! ஆகவே இதுவரை படம் பார்க்காத, இனி பார்க்கும் எண்ணமுள்ளவர்கள், முன்னதாக சஸ்பென்ஸ் விடுபட விருப்பமில்லாதவர்கள், சொந்தமாக கதையைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் சக்தி படைத்தவர்கள் ஆகியோர் மேற்கொண்டு இதைத் தொடரவேண்டாம்.



முதலில் நம் உலகம், அதாவது பூமி. இங்கொரு ஆர்யா. மிக மிக நல்லவர். சாந்த சொரூபி. திடுமென விறுவிறுப்பாக ஓடியாடி வேலை செய்கிறார். திடுமென சொங்கி மாதிரி அமைதியாக இருக்கிறார். ஆனால், அனுஷ்கா காதலைச்சொல்ல வந்தால் பேந்தப் பேந்த விழிக்கிறார். அனுஷ்கா, பரவாயில்லை என்று சொல்லிவிட்டுப்போய் வேறு மாப்பிள்ளைக்கு ஓகே சொன்னவுடன் இவருக்கு காரணமே இல்லாமல் காதல் வந்துவிடுகிறது. அனுஷ்காவை ஃபாலோ செய்கிறார். அவர் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போய், ஒன்றும் பேசாமல் மண்டையை அங்குமிங்கும் திருப்பி லூசு மாதிரி நிலத்தை உற்றுப்பார்க்கிறார், பின் மூஞ்சியை உற்றுப் பார்க்கிறார். திடுமென, லவ்வர் பாயாக மாறி, பின்னாடியே போய் ஜாலியாக சீண்டி விளையாடுகிறார், மெடிகல் கேம்ப் எனப்படும் டூர் இந்தப்படத்திலும் வருகிறது. பாட்டுப்பாடுகிறார். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு மீண்டும் இவர் மீது காதல் வந்துவிட்டதோ, நாம் பிழைத்தோமா! அந்தோ பரிதாபம், அப்போதுதானா அனுஷ்கா கால் தடுக்கி விழுந்து மண்டையைப் போடவேண்டும்! ஸோ ஸேட்! 

மீண்டும் ஒரே திக்கையே வெறித்து உட்கார்ந்தவரை ஒரு நாய் வந்து எங்கோ கூட்டிப்போகிறது. பின்னவீனத்துவவாதிகளால் மாய யதார்த்த, இணைக்கனா, இச்சாலோகம், ஃபேண்டஸி என்றெல்லாம் கணிக்கப்படும் உலகுக்குள் போகப்போகிறோம் என கொஞ்சம் இடுப்புப் பெல்டை இறுக்கிக்கொண்டால் ஊஹூம், இல்லை. அதன்பின்பு, நோய்வாய்ப்பட்ட தந்தை ப்ரிஸ்க்காக ஸ்கூட்டரில் வந்து ’அனுஷ்கா எங்கும் போகவில்லை, இங்கேதான் இருக்கிறார், நன்றாகத் தேடு’ என்று குறியீடுகள் நிறைந்த ஒரு அறிவுரையைச் சொல்லும் போதாவது போய்விடுவோம் என்று பார்த்தால் அப்போதும் நிகழவில்லை. இப்படித்தான் சாதா ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் இதில் நிகழ்வதே இல்லை. (இலக்கியப்படம், உலகப்படம், பின்னவீனத்துவபடம் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருமே உங்களுக்கு!). அதன்பின், பூகம்பம் போல ஏதோ ஒன்று வர, நல்ல மழையில் இவர் ஒரு காரை எடுத்துக்கொண்டு எதற்காகவோ, எங்கோ ஒரு மலையுச்சிக்குப் போகிறார்.

நிற்க.

அந்த இணையான இன்னோர் உலகம்! அப்படின்னா? ரொம்ப சிம்பிள்தான். இங்கு நம் உலகில் வானம் நீல நிறம், காடுகளும், மரங்களும் பச்சை நிறமாக இருக்கிறதல்லவா? அங்கு, இவையெல்லாமே ஜிங்குச்சா ஜிங்குச்சா மல்டி கலர். மஞ்சள், ஊதாப்பூ கலர்கள் சற்று தூக்கலாக இருக்கும், அவ்வளவுதான். அங்குமொரு ஆர்யாவும், அனுஷ்காவும் வாழ்கிறார்கள். கூடவே ஒரு ராஜா, மந்திரி, ஒரு இளம் சாமியாரிணி, கொஞ்சம் சிப்பாய்கள், ஒரு எதிரி ராஜா, அவருக்கும் கொஞ்சம் சிப்பாய்கள். மந்திரியின் மகன்தான் ஆர்யா. 

இனிமேல்தான் சிக்கலான இடம் வருகிறது, கதையைக் கவனமாகக் கேளுங்கள். அந்த ஊரில் காதல், அன்பு, பூக்கள் இவையெல்லாம் கிடையாது. இவையெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, இவையெல்லாம் நமக்கு மட்டும் எதற்கு என இயக்குனர், நம்மைப் பார்த்து ஒரு தத்துவார்த்த கேள்வியையும் எழுப்புகிறார் எனவும் கொள்ளலாம். சரி, இங்குள்ள இரண்டாம் ஆர்யாவுக்கு வருவோம். பார்க்க ஆஜானுபாகுவாக இருந்தாலும் அவர் ஒரு சொங்கி என அப்பா உட்பட, ஊருக்குள் ஒருவரும் மதிப்பதில்லை. அவருக்கோ, அனாதையாக சுற்றித்திரியும், ஆண்களை வெறுக்கும் அனுஷ்கா மீது மோகம். அடைய முயற்சிக்கிறார். முடியவில்லை. ஏனெனில் அவர் இவரைவிட ஆஜானுபாகுவாக இருப்பதாலும், சண்டைக்கலையில் தேர்ந்திருப்பதாலுமாகும். இந்த சமயத்தில் ராஜாவும், அனுஷ்காவைப் பார்த்து மையலாகிவிட அனுஷ்கா அதற்கும் ஒப்புக்கொள்ளாததால் சிறைப்படுகிறார். அவரை விடுவிக்க, ஆர்யா, யாருமே இதுவரை வென்றிராத, ஒரு பெரிய பறக்கும் சிங்கமொன்றை வேட்டையாடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. 

பிற உயிரினங்கள் என்று பார்த்தால், அந்த ஊரில் அந்த சிங்கத்தைத் தவிர லாங்ஷாட்டில் பறக்கும் சில டைனோ பறவைகள் மட்டும்தான் இருக்கின்றன. சரி, அந்த சிங்கத்தை வேட்டையாடுவது எப்படி? அதொன்றும் பிரச்சினை இல்லை, ஐந்து ஆனை பெரிசுக்கு, ஒரு டைனோசர் மாதிரி இருக்கும் அந்த சிங்கம், தவக்கா மாதிரி இங்குமங்கும் குதித்துக்கொண்டுதான் இருக்கும், கடிக்கவெல்லாம் செய்யாது. ஒரு குட்டிக் கத்தியை வைத்து அதை குத்திச் சாய்த்துவிடுகிறார் ஆர்யா. அனுஷ்கா விடுதலையாகிறார். அட, இன்னும் அனுஷ்காவுக்கு அவர் மீது அபிப்பிராயம் வந்தபாடில்லை, காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார். அதுவாவது பரவாயில்லை, அந்த ராஜாவுக்கும், மற்ற மக்களுக்கும் கூட இவர் வீரத்தின் மீது மரியாதை வந்ததா என்றால் அதுவுமில்லை. சில படைவீரர்கள், ஒரு பெரிய மலையைக் காட்டி இதுதான் சாமி மலை, இதன் மீது யாருமே இதுவரை ஏறியதில்லை, அதன் மீது ஏறினால்தான் நீ வீரன் என்று ஒப்புக்கொள்வோம் என்கின்றனர். அவரும் டக்கென்று ஏறிவிடுகிறார்.

நிற்க.

அந்த மலைதான், இந்த மலை. மலை மலை, மருத மலை! காரில் மலை மீது முதலில் ஏறிய முதல் ஆர்யா, மாய மனநிலையில் காரோடு மலை மீதிருந்து கீழே விழும் தருவாயில் இரண்டாமவர், அவரைக் காப்பாற்றி இரண்டாம் உலகுக்கு அழைத்துவருகிறார். (இப்போதாவது, மற்றவர்கள் இவரை வீரர் என்று ஒப்புக்கொண்டார்களா என்று ஞாபகமாக கேட்கிறீர்களா? அட போங்கங்க, உங்களுக்கு ரொம்பதான் ஞாபக சக்தி!). இரண்டாம் ஆர்யாவைப் பார்த்ததும் மனமகிழும் சாமியாரிணி, நம் உலகுக்கு காதல் எனும் உணர்வை ஒருவன் கொண்டுவந்துவிட்டான், பூக்கள் பூக்கப்போகின்றன, சற்று நாட்களில் முதல் காதல் மலரப்போகிறது என்கிறார். சொன்னபடியே, அவ்வளவு நாட்கள் மொட்டாக இருந்த பூக்கள் பூக்கின்றன. மக்கள் எல்லாம் தேமேவென அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பார்த்து அந்த வில்லன் ராஜா, இந்த புனிதத் தன்மைகள் நிறைந்த சாமியாரிணியை கடத்திக்கொண்டு போக முயற்சிக்க, வழி மறிக்கும் ஆர்யா, சுமார் 50 பேர் கொண்ட அந்தப்படையை ஒற்றையாளாக, மதுவருந்தியபடியே, ஒற்றைக்கையால் துவைத்து எடுத்து சாமியாரிணியைக் காக்கிறார். (துணைக்கு காட்டிலிருந்து அனுஷ்காவும் வந்து சண்டை போட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் போய்விடுகிறார்). நம் ராஜாவும், படைவீரர்களும் தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பாடி, இப்போதாவது ஆர்யாவின் வீரத்தை எல்லோருக்கும் தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வந்ததே என நாம் நினைத்தால், அடக்கடவுளே, இப்போதும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதன்பின்பும் அவரைத் தூற்றுகிறார்கள். இரண்டாவது முயற்சியாகவும், பெரும்படையோடு அந்த வில்லன் கும்பல் வந்து சாமியாரிணியை கடத்திவிடுகிறார்கள். இந்த முறையும் ஆர்யா மட்டும் பின்னாடியே ஓடிப்போய் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவரை, குதிரையில் கயிறு கட்டித் தரதரவென இழுத்துப்போகிறார்கள். 

இரண்டாம் ஆர்யாவைப் பார்த்ததும், அனுஷ்காவுக்கும் உள்ளுக்குள் பூ ஏற்கனவே மலர்ந்துவிட்டிருந்தது. அதனால், அந்த ஆர்யா எஃபெக்டில், கொஞ்சம் லேட்டானாலும் அவரது இரண்டாம் உலக ஆர்யா மேல் ஒருவழியாக லவ் வந்துவிடுகிறதோ, கிளைமாக்ஸ் வந்துவிடுகிறதோ. நாம் பிழைத்தோம்! 

அவர்கள் ஆர்யாவையும் பிடித்துக்கொண்டு போய்விட்டதால், இப்போது அனுஷ்கா அவரை மீட்க கிளம்புகிறார். உடன் யாரும் வராததால், நம் ஆர்யா துணைக்குப் போகிறார். இவர்கள் பெரும் மலைக்காடுகள், பனிப்பிரதேசம் எல்லாம் கடந்து செல்வதற்குள், இரண்டாம் உலக ஆர்யா, சாமியாரிணியைக் காப்பாற்றிக்கொண்டு எதிரே வந்துவிடுகிறார். வேலை மிச்சம்! எப்படிக் காப்பாற்றினார் என்று கேட்கவில்லையே! அந்தம்மாவை அவர்கள் ஒரு அறையில் போட்டுவைத்திருக்க, வாசலில் ஒரு 50 பேர் காவல். ஆர்யாவை அவர்கள் எங்கும் போட்டு அடைத்துவைக்கவெல்லாம் இல்லை, சும்மாதான் திரிந்துகொண்டிருக்கிறார். இவர் அந்த அறைக்குப் பக்கத்தில் போகவும், வாசலில் இருந்த காவலாளிகள், ‘உங்கக்காவுக்கு உடம்பு சரியில்லைல்ல, வா, பாத்துட்டு வந்துடுவோம்’, ’வாயேன், ரெண்டு வடை தின்னுட்டு வருவோம்’, ‘உங்க மாமா ஊர்லயிருந்து வந்திருக்காரா? அவரப்பாத்து நாளாச்சே! வா போலாம்’ என்று சொல்லிவிட்டு வரிசையாக இரண்டிரண்டு பேராக கிளம்பிவிடுகின்றனர். சாமியாரிணி எஃபெக்ட் என நாம் நினைத்துக்கொள்ள வழியிருக்கிறது. ஆக, இவர் எளிதாக போய் கூப்பிட்டுக்கொண்டு வந்துவிடுகிறார். இதற்கு ஏன் இவர் வேலைமெனக்கெட்டு போகவேண்டும்? அவரேதான் வந்துவிடலாமே என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். 

நால்வரும் ஒரு படகில் ஊருக்குத் திரும்புகையில், நமது ஆர்யா வில்லனின் ஆயுதம் பட்டு தொபுக்கடீர்னு தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறார். இரண்டாம் உலகத்து ஆர்யாவும், அனுஷ்காவும் துடிக்க, சாமியாரிணியம்மா அர்த்தபுஷ்டியோடு அவர்களைத் தடுக்கிறார். அதாவது தண்ணீருக்குள் போன ஆர்யா மூன்றாம் உலகத்துக்குப் போய்விடுகிறார். அங்கும் அன்பு, காதல் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தவேண்டுமல்லவா? 

சுபம்! 

ஒருவேளை நமக்குதான் குறியீடுகள் புரியவில்லையோ, அன்புக்கு வரும் சோதனைகளையும், அன்பே உலகை ஆளும் என்ற தத்துவார்த்தத்தையும்தான் இரண்டாம் உலகத்து மனிதர்களின் ஒவ்வொரு டைப் டைப்பான நடவடிக்கைகளும் குறிப்பால் உணர்த்துகின்றனவோ என்றும் நாம் சந்தேகிக்கலாம். ஆனாலும். ஆர்யா, ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே முழுசா ஒரு நிமிஷம் கேப் எடுத்துகொண்டு வசனம் பேசுவதையெல்லாம் எந்த பின்னவீனத்துவ வகையில் சேர்ப்பது என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு 10 மணி நேர படத்தை 2.30 மணி நேரத்துக்கு கண்டமேனிக்கு கத்தரித்துக் கோர்த்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது எனக்கு. ஒரு கச்சிதமான படத்தின் எந்த ஒரு காட்சியை உருவினாலும், படம் அர்த்தமிழந்துபோகும் என்பார்கள். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியாக, எந்தக் காட்சியை எடுத்தாலும் படத்தைப் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே ஏதாவது புரிந்திருந்தால்தானே பிரச்சினை? உலகே ஒரு வெங்காயம் என்பது மாதிரி என்ற தத்துவத்தையும் நாம் இந்த எடிடிங் மூலமாக அறியலாம்.

பர்சனலாக எனக்குப் பிடிக்கவில்லை எனினும், முதல் படி இருந்தால்தானே அடுத்த படியில் கால்வைக்க முடியும்? இந்த சிஜி ஒர்க்கெல்லாம், தமிழில் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். அடுத்து அனுஷ்கா. வயது முதிர்ச்சியடைந்தாலும், சிலரின் க்யூட்னெஸுக்கு முதிர்ச்சியே கிடையாது. அதன்பின் ராம்ஜி. அற்புதமான ஒளிப்பதிவு. 

சமீபத்தில் முத்து காமிக்ஸ் தளத்தில் ஒரு விவாதம் நடந்தது. ஆக்‌ஷன், அட்வென்சர், காமெடி காமிக்ஸுகளுக்கு நடுவே, கிராஃபிக் நாவல் எனும் பெயரில், ஓரிரு வரலாற்றுப் பின்னணி கொண்ட சீரியஸ் காமிக்ஸ் புத்தகங்கள் சமீபத்தில் வெளியாயின. நமக்குக் கிடைக்கிற காமிக்ஸே கொஞ்சூண்டுதான். இதில் ஏன்யா எங்களை சீரியஸ் கதை சொல்லி அழவைக்கிறீங்க, எங்களுக்கு கமர்ஷியல் கதைகளே போதும் என ஒரு பக்கத்து வாசகர்கள் போர்க்கொடியெழுப்பினார்கள். அடப்பாவிகளா, உங்களுக்குப் புரியலைன்னா போச்சா, அற்புதம்யா அவை, ஆக, சீரியஸ் கதைகளும் வேண்டும் என இன்னொரு பக்கத்து வாசகர்கள் எதிர்விவாதம் செய்தனர். இரண்டாவது கோஷ்டியில் நான் இருந்தேன். அதை சற்றே இங்கும் நாம் பொருத்திப்பார்க்கலாம். உனக்குப் புரியலைன்னா போச்சா? எங்களுக்கு பல உள்ளீடுகள் புரிகின்றன ஐயா, நாங்கள் ரசிக்கிறோமே என்று ஒருசாரார் சொன்னால் அதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? 

சரிதான், ஒரு சாராருக்குப் புரியாத, இன்னொரு சாரார் உணர்ந்து அனுபவிக்கிற பின்னவீனத்துவம் என்று ஒன்று இருக்கிறதுதான். ஆனால், பின்னவீனத்துவமும், போலி பின்னவீனத்துவமும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவேதான் இருக்கும். எங்களுக்கு இரண்டுமே தெரியப்போவதில்லை, அதனால் பிரச்சினையில்லை. நீங்கள்தான் பாவம், பச்சைத் தண்ணீரைக்குடித்துவிட்டு பாயசம் குடித்ததாய் நினைத்துக்கொள்ள நேரிடும், ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்! வாழ்த்துகள்!


Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!