நன்றாக ஞாபகமிருக்கிறது, ’நாத்திகம் காத்தல்’என்ற ஒரு கட்டுரை இந்தத் தளத்திலேயே மிக அதிக பார்வைகளைப் பெற்ற ஒன்றாகும். மிக அதிக விமர்சனங்களையும், பின்னூட்ட விவாதங்களைப் பெற்றதும் கூட அதுவே. அந்த இடுகைக்குப்பின் என் மனதைப் பாதித்த இன்னொரு பொருள் குறித்து ‘கன்னிமை காத்தல்’ என்ற தலைப்பில் நீண்டதொரு பத்தியை எழுதி, திருப்தியின்றி, நீண்ட நாட்கள் ட்ராஃப்டிலேயே வைத்திருந்து பின்பொரு நாள் அழித்திடவும் செய்தேன்.
சுசீந்திரனின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற இந்தப் படத்தைப் பார்த்தபோது அந்த அழிக்கப்பட்ட கட்டுரைதான் ஞாபகம் வந்தது. அஃதொன்றும் பிரமாதமாக எழுதப்பட்ட கட்டுரை இல்லையாயினும், இந்தப் படம் அந்தப்பொருளைப் பற்றி ஆணித்தரமாக பேசும் ஒரு பிரமாதமான படமாக அமைந்துவிட்டது.
ஆண், பெண் பழக்கங்கள், பாலின ஈர்ப்பை காதலாகக் கொள்ளும் அவசரம், நற்காதலேயாயினும் கூட காமத்துக்கான காத்திருப்பின்மை, அதிலும் கூட பொறுப்பின்மை, அதனால் தொடரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் என இன்றைய இளைஞர்களின் போக்கைப் பார்க்க நேர்கையில், நட்பு வட்டாரங்களில் நிறைய கதைகளைக் கேட்க நேர்கையில், சமீப வருடங்களில் ஒரு பெரிய கலாச்சார மாற்றமே நிகழ்ந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ’கிழ போல்டு’ என என்னை நீங்கள் கருதினாலும் பரவாயில்லை, இந்தக் கலாச்சாரத்தின் மீது கொஞ்சம் வருத்தமும், அதிர்ச்சியும் கூட இருக்கிறது எனக்கு.
முன்னெப்போதையும் விட (முன்பு வெளியே தெரியாதிருந்தது, இப்போதைய அவசர உலகில் விஷயம் வெளியே தெரிகிறது, எப்போதும் இதன் விகிதம் ஒன்றுதான் என்ற மாற்றுக்கருத்தும் உலவுகிறது. நான் அதை ஏற்கவில்லை) இப்போது உடலுறவு என்பது மிக எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. கல்யாணம் வரை காத்திருக்கும் பொறுமையும் கூட காதலர்களுக்குள் இல்லை. அது கட்டுப் பெட்டித்தனமாகவும் கூட பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு வெளியேயான, திருமணத்துக்கு முன்னதான உடலுறவுகள், தோழமைக்குள்ளே நிகழும் உடலுறவுகள் என மிக அதிகம் கேள்விப்பட நேர்கிறது.
செக்ஷுவல் சுதந்திரம் என்பது என்ன? எது வரையில் அது இருக்கலாம்? அது எல்லை மீறும் போது இச்சமூகத்தில் நிகழப்போவதென்ன? என்றெல்லாம் ஆய்வுக்குள் செல்ல நான் விரும்பவில்லை, அதற்கான மேதைமையும் எனக்கில்லை. ஆனால், காதலுணர்வைப்போல, காம உணர்வையும் ஒரு அழகியலாக நான் காண்கிறேன். அன்பைப்போல அதைக் கைக்கொள்ளவும் ஒரு அடிப்படை நேர்மையும், ரசனையும் வேண்டும் என எண்ணுகிறேன். மரத்திலேயே கனியும் கனியைப்போன்றது அது! அப்படியான உறவுக்குப் பின்னால் கிடைக்கும் நிறைவு என்பதே ‘நிறைவு’!
சில காலம் முன்பு வரை, இருக்கிறது என நான் உணர்ந்த ‘கன்னிமை காத்தல்’ இன்றைய இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ‘அவுட் ஆஃப் ஃபேஷன்’ ஆகிவிட்டதா? என நான் எண்ணியதுண்டு.
‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற இந்தப்படமும் இதைச்சார்ந்த ஒரு கதையைத்தான் பேசுகிறது.
‘நான் மகான் அல்ல’என்றொரு படம். காதல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த ஒரு கமர்ஷியல் கதைதான். ஆனால் அதில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், இயல்புத்தன்மையும் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு, அப்படியொரு கமர்ஷியல் படத்துக்கு அழகியதொரு கலைத்தன்மை தரப்பட்டிருந்தது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் இயல்புக்கு மிக அருகில் இருந்தார்கள். அதைச் செய்தது சுசீந்திரன். அதுவே ஒரு படத்தின் அழகியலை நிர்ணயிக்கிறது என நான் நினைக்கிறேன்.
அதை விடவும் ஒரு பங்கு அதிகச் சிறப்புடன், ’ஆதலால் காதல் செய்வீரின்’ கதாப்பாத்திரங்களைப் புனைந்திருக்கிறார் சுசீந்திரன். இயல்பும், நேர்மையும், சமூகப்பொறுப்பும் கொண்ட ஒரு திரைக்கதை மற்றும் இயக்கம். இன்றைய சூழலில் பேசப்பட வேண்டிய ஒரு பொருள்!
சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றே நம்புகிறேன் நான். இங்கே சமூகத்தை மாற்றும், திருத்தும், உட்கார வைத்து ’உழக்கு நிறைய’ அறிவுரை கூறும் வேலைகளுக்கெல்லாம் இடமில்லை என்றும் கருதுகிறேன். ஆனால் நல்ல கதைகள் வாசகனுடன், ரசிகனுடன் பகிர்ந்துகொள்ள எப்போதும் தன்னகத்தே ஒரு செய்தியை, உணர்வை பொதிந்து வைத்திருக்கின்றன. அத்தகைய ’ஸ்டஃப்’ இல்லாத கதைகள் வெற்று ஜிகினாக்களாகவே மதிக்கப்படும், மறக்கப்படும். இந்தப்படமும் அத்தகைய ஒரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. உடலுறவைத் துச்சமாகக் கருதுபவர்களின் மனதில் ஒரு விநாடியாவது இந்தப்படம், ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு கல்லூரியின் மாணவ, மாணவிகள், பாலின ஈர்ப்புகள், எந்நேரமும் அவர்களின் பேச்சுக்குள், நடவடிக்கைகளுக்குள் நிறைந்திருக்கும் காதல், கலகலப்பு. அவர்களுக்குள் ஒரு காதல் ஜோடி, அவர்களின் குடும்பங்கள் எனத்துவங்கும் கதை, அவர்களுக்குள் நிகழும் எல்லை மீறல், அதன் பின் விளைவுகள், கதாப்பாத்திரங்களின் எதிர்வினைகள் என விரிகிறது. நல்ல படமா? போச்சுடா மெதுவே நகரும் சோகப்படமாக இருக்குமோ.. என்று நினைத்துவிடாதீர்கள்.. இந்தக் கதை சுவாரசியம் குன்றாமலும், இறுதி வரை விறுவிறுப்பாகவும் இந்தக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி தம் பாராட்டைத் தெரிவித்த நிகழ்வே இதன் சாட்சி!நிதர்சனமான, நெஞ்சைக் கனக்கச்செய்யும் முடிவு பலதரப்பட்ட எண்ணங்களை நமக்குள் ஏற்படுத்தி சலனப்படுத்துகிறது.
சிறந்த திரைக்கதை, இயக்கம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு என ஒவ்வொன்றும் நிறைவு. நடிக, நடிகையரின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டத்தோன்றுகிறது, கதாநாயக, நாயகியரின் பெற்றோராக வரும் நான்கு கதாப்பாத்திரங்களையும் ஏற்றிருக்கும் நடிகர்களின் பங்கு அற்புதமானது. இன்னும் விளக்கிக்கொண்டு போனால், அது ஸ்பாயிலராக அமைந்துவிடுமென்பதால் முடித்துக்கொள்கிறேன். கூடுதலாக முடிவுக்குப் பின்னுமொரு முடிவாய் வரும் கடைசிப் பாடலும், அதன் படமாக்கலும் ஏற்படுத்திய இம்பாக்ட் எதிர்பாராத ஒன்று, அதிரச்செய்யும் ஒன்று.
ஆக, ‘ஆதலால் காதல் செய்வீர்’தவறவிடக்கூடாதவொரு படம்.
’ராஜபாட்டை’க்கு நான் எழுதிய காட்டமான விமர்சனத்தில் மாற்றமில்லை எனினும், அந்த ஒரு படத்துக்காக சுசீந்திரனின் திறனையே சந்தேகித்து நான் எழுதியமைக்காக, அன்கண்டிஷனல் வருத்தத்தை இங்கே பதிவு செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. ஸாரி சுசி!
.