ரொம்பவே நாட்களாகின்றன, ஒரு விறுவிறுப்பான கம்ப்யூட்டர் கேமை விளையாடி.! தற்போதைய வேலை, குடும்பச் சூழலுக்கு கம்ப்யூட்டர் கேமை நிறையவே மிஸ் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் அவ்வப்போது அவற்றை நலம் விசாரித்துக்கொள்வதுண்டு.
ஒரு கேம் பிடித்துப்போவதும், பிடிக்காமல் போவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயம். டாப் செல்லராக, மிக பாப்புலராக இருக்கும் பல கேம்கள் எனக்குப் பிடிப்பதில்லை. கணினி வரைகலையின் வீச்சு, கதையம்சம், நிகழ்வுகள், கண்ட்ரோல்களின் பயன்பாடு என ஏராளமான அம்சங்கள் அதன் காரணமாக அமைகின்றன. எனது தேர்வு எப்போதும் கால் ஆஃப் ட்யூட்டி (Call of Duty), டோம்ப் ரைடர் (Tomb Raider), மெடல் ஆஃப் ஹானர் (Medal of Honor) போன்ற ஹை-எண்ட் கம்ப்யூட்டர் கேம்களாகவே இருக்கும். இவையே பிற அமசங்களை விட, அதிகபட்ச கிராஃபிகல் நுணுக்கங்களை துய்க்க விரும்பும் என்னைப்போன்ற ரசிகர்களின் பெரும்பாலான தேர்வாக அமைகின்றன. இந்த அனுபவத்தை எளிய வகை கேம்களான ப்ளாட்பார்ம் கேம்கள் தருவது சிரமமான விஷயம், அதை அங்கே எதிர்பார்ப்பதுமே கூட தவறான ஒன்றே!
ஆனால், மிராக்கிள்ஸும் எப்போதாவது நிகழத்தானே செய்கின்றன..
180 MB அளவே உள்ள ஒரு சிறிய ப்ளாட்ஃபார்ம் வகை கேம் உங்களை வியக்கச்செய்ய முடியுமா? ஆக்ஷன், அட்வென்சர், ஸ்டன்னிங் கிராஃபிக்ஸ், எளிமை, நுணுக்கமான ஸ்ட்ராடஜியை, சிந்தனையைக் கோரும் சவால்கள், மிக எளிமையான கண்ட்ரோல்கள், ஒரு அழகான கதையம்சம், அதற்கொரு க்யூட்டான முடிவு என, நீண்டகால பசிக்கு ஒரு பெரிய விருந்தாகவே அந்த கேம் அமைந்தது எனக்கு.
அது லிம்போ (Limbo).
பொதுவாக சிறிய வகை/போர்ட்/ப்ளாட்ஃபார்ம் வகை கேம்கள் குழந்தைகள் விளையாடத்தகுந்தவை என்ற என் எண்ணத்தையும் இது சிதறடித்தது. வெளியாகி இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், சமீபத்தில்தான் இதைக் கண்டெடுத்தேன். இவ்வளவுக்கும் இது ஒன்றும் இந்தத்துறை சார்ந்த லெஜண்ட் கம்பெனிகளுள் ஒன்றின் தயாரிப்பு அல்ல, டென்மார்க்கைச் சேர்ந்த புதிய குழுவின் (Independent Game Developers) தயாரிப்பு என்பது இன்னுமொரு ஆச்சரியம். இதன் வடிவமைப்பும், கேம் நிகழ்வுகளும், அந்த க்யூட் முடிவும் ஒன்றும் கேம் உலகுக்கு முற்றிலும் புதிதானவை அல்லதான். ஆயினும் அந்த பழகிய விஷயங்களுக்கு இவர்கள் தந்திருக்கும் முற்றிலும் புதிய பரிமாணம் நிச்சயம் ஒரு புதிய அனுபவம்தான். அதில்தான் லிம்போ டெவலப்பர்களின் புத்திசாலித்தனமும், தனித்துவமும் அடங்கியிருக்கிறது. ஆக, லிம்போ ரசிகர்களின் ஏகபோக வரவேற்பையும், கேம்களுக்கான ஏராளமான பரிசுகளையும், விருதுகளையும் அள்ளிக்கொண்டதில் எந்த வியப்பும் இல்லை.
ஹை-எண்ட் கேம்கள் விளையாட அவசியமான, காஸ்ட்லியான, மேம்படுத்தப்பட்ட கணினி உட்கட்டமைப்புகள் இதற்குத் தேவையில்லை என்பதால் எளிய கம்யூட்டர்களிலும் கூட விளையாட முடியும் என்பது சிறப்பு. வழக்கம்போல Xbox, PS வெர்ஷன்களும் இருக்குன்றன. ஆனால், இது குழந்தைகளுக்கானது அல்ல, கொஞ்சம் ஹாரர் எஃபெக்டும் நிகழ்வுகளில் இருக்கிறது.
கேம்களில் ஆர்வமும், அதே நேரம் சில பல காரணங்களால் தயக்கமும்,சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் துவங்க வேண்டியது இங்கேதான், லிம்போவில் உங்களோடு பயணிக்கக் காத்திருக்கிறான் குட்டிப்பயல்!
----------
எக்ஸ்ட்ரா:
பெரியவர்களுக்காக மட்டுமின்றி என்னைப்போன்ற குட்டிப்பசங்கள் ரசிக்கிற மாதிரி வேற குட்டி கேம்ஸ் எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், சமீபத்தில் கொஞ்ச நாட்கள் என்னை அடிக்ட் செய்த இன்னொன்றை சஜஸ்ட் செய்கிறேன். ரொம்பவே பிளானிங் தேவைப்படுகிற கலர்ஃபுல் அட்வென்சர் இது, குட்டீஸ்க்காக!
கார்டன் ரெஸ்க்யூ (Garden Rescue2 CE)
*