கடலை நேசிக்கும், கடலிலேயே வாழும் ஒரு கடற்புறத்து இளைஞன். அவனக்கொரு அழகிய காதலி. அவளது கடனுக்காக, கடலைப் பிரிய மனமில்லாது இரண்டாண்டுகள் தூரதேசம் போகவேண்டிய சூழல். அந்த தேசத்தில் உள்நாட்டு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு, காதலியை அடைய அவன் மேற்கொள்ளும் போராட்டம். இறுதியில் அவளை அடைகிறான்.
இந்தக் கதை, படிக்கிறப்போ எவ்வளவு அழகா இருக்குல்ல.. ஆனால் கதறக்கதற மொக்கை போட்டு அனுப்புகிறார் இயக்குனர் பரத்பாலா. பரத்பாலாவின் துவக்க கால விடியோ ஆல்பங்களை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ஏன் சினிமாவுக்கு வருவதில்லை என எண்ணியது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
இது மரியானுக்கும், பனிக்கும் இடையிலான காதல் கதையா? சூடான் தேசத்தின் உள்நாட்டு போராட்டத்தின் கதையா? என்பதிலேயே இயக்குனருக்கு தெளிவில்லை போலிருக்கிறது. இது காதல் கதைதான். ஆனால் இடைவேளை வரை நீளும் காதல் காட்சிகளில் அழுத்தமான காதல் இல்லை. இது சூடான் தீவிரவாதக் கதை இல்லைதான். ஆனால் இரண்டாம் பகுதி முழுக்க டுப்டுப் என துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இலக்கில்லாமல் ஜீப்பில் அலையும் தீவிரவாதிகள்தான்.
ஹீரோயிஸம் இல்லாத இலக்கியக்கதை போலிருக்கு, அதான் உதை வாங்கிக்கொண்டு அடைந்தே கிடக்கிறார் மரியான் என்றால், அதுவும் இல்லை, கிளைமாக்ஸ் வரும் வரை சும்மா இருந்துவிட்டு பின்பு, ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுதான் தப்பிவருகிறார். அதெப்படி தீவிரவாதிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி? அதெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, அது அப்படித்தான்!
சிறுத்தைகள் கற்பனை, மீன் குழம்பு கற்பனை, தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தி மரியானை ஆடிப்பாட வைக்கும் பாடல் (?! நீங்கள் திருதிருவென முழிப்பது தெரிகிறது) என உணர்வுப்பிரவாகமாக இருக்கும் என இயக்குனர் நினைத்த காட்சிகளெல்லாம் படத்தில் காமெடிக் காட்சிகள் இல்லாத குறையைத் தீர்ப்பதாக அமைந்தது பரிதாபம்.
பாடல்களெல்லாம் பொருத்தமில்லாத இடங்களில் வந்து மிக செயற்கையான ஒரு உணர்வைத் தருகின்றன. நிகழ்வுகள் இம்பாக்ட் செய்யாத போது பின்னணி இசையும் பொருந்தாமல் நெளியச்செய்கிறது. தனுஷ், பார்வதியின் நடிப்பு, பரத்பாலா என்றால் விஷுவல்ஸ் என்ற எதிர்பார்ப்பை வீணடிக்காத அற்புதமாக விஷுவல்ஸ் மற்றும் அதன் ஒளிப்பதிவு என எல்லாமே விழலுக்கிறைத்த நன்னீராய்ப் போகின்றன.
குறிப்பாக பார்வதியின் அழகும், நடிப்பும் தனிப்பட்ட முறையில் என்னை அசத்திய விஷயங்கள். அவ்வளவு எக்ஸ்ப்ரஸிவான முகம், உணர்வுகளைக் கடத்தும் கண்கள் என அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வு. (இதுக்குப் பேர்தான் ஜொள்ளா?) அதுவும் அழுத்தமில்லாக் காட்சிகளில் பொருந்தாமல் வீணாய்ப்போவது சோகம்!
மரியானை, சமீபத்திய பெரிய ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும்!