முந்தைய‘கலைஞர் 90’ பதிவைப் படித்த நண்பர்களில் இரண்டு பேரிடமிருந்து அழைப்புகள். எங்கோ துவங்கி, பேச்சு வேறெங்கோ சென்றாலும் அவர்களின் அழைப்பின் நோக்கம் ஒன்றுதான். ’உங்களைப் போன்ற பொதுவான நண்பர்கள் ஏன் இது போன்ற சாயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? தவிர்த்திருக்கலாமே.. அதோடு கலைஞர் இப்படியான புகழுக்குத் தகுந்த நபர்தானா?’ -என்பதுதான் அது.
எனது ரசனையின் தளம் விரிவானது என நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பல்வேறு விஷயங்களையும் துய்க்க விரும்புகிறேன், பகிர விரும்புகிறேன். ஆகவே, எனக்கு இது போன்ற குழு அடையாளங்களுக்குள் சிக்கிக்கொள்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை. அதனால்தான் அரசியல் கட்சி சார்ந்து விரிவான எனது கருத்துகளை, ஏற்புகளை, மறுப்புகளை நான் பொதுவில் பேசியதில்லை. பேச விரும்புவதுமில்லை, அது என் தனிப்பட்ட விஷயம். ஆயினும் அதற்காக என்னால் முற்றிலுமான ஒரு முகமூடியை அணிந்துகொள்ள முடியாது. இந்த எண்ணம்தான், ஆங்காங்கே பெரியார் மீதான, கலைஞர் மீதான எனது எண்ணங்கள் இயல்பாக வெளியாவதை வலுவில் தடுக்காமல் செய்கிறது.
‘ட்டாக்டர் க்கலைஞர்.. வாழ்க!’ என தொண்டை வறளக் கத்தப்படும் கோஷ ஒலியாக என் குரல் இருப்பதை எப்போதும் நான் விரும்பியதில்லை. அந்தக் கட்டுரை கலைஞர் எனும் தனிப்பட்ட மனிதர் மீதான, அவரது தமிழ் எனக்குள் ஏற்படுத்திய ஆர்வத்தின் காரணமாக எழுந்த அன்பில் விளைந்த ஒன்றே! அந்தக் கட்டுரையில் கூட சமூக விழிப்புணர்வு, மறுமலர்ச்சி, தமிழியக்கம் போன்ற பாராட்டப்படவேண்டிய விஷயங்களுக்கு தனி மனிதராக அவரை மட்டுமே முழு காரணகர்த்தாவாக்கிவிடாமல், அதற்குக் காரணமான அண்ணன்மார்களில் முக்கியமான ஒருவராகவே அவரைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறேன். அவரை விடவும் கருத்துச்செறிவும், சமூக அக்கறையும், தமிழுணர்வும் மிக்க படைப்புகளை தர இங்கு ஆளேயில்லை என்பது அறிவீனமாகும். ஆயினும், கலைஞர் மீது நான் கொண்டது, பசுமரத்தாணி போல இளமையில் ஏற்பட்ட உணர்வு. அப்போது, அது.. எனக்குக் கிடைத்தது, நாணயம் சுண்டப்பட்டபோது பூ விழுந்தது, அவ்வளவே! இதில் வியக்க ஒன்றுமில்லை. அதனால் எல்லாம் அவரின் அரசியலை எந்த எதிர் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளும் மடமையை பெரியாரோ, தி.மு.கவோ எனக்குக் கற்பிக்கவில்லை.
தனியொருவர் என்ற முறையில் பார்த்தால், 1950களில் துவங்கி சமீப காலம் வரை, தமிழகம் கலைஞரின் பேச்சுக்கும், எழுத்துக்கும், நாடகம், சினிமா முதலான கலைப்படைப்புகளுக்கும் கட்டுண்டு, மயங்கியிருந்தது. இந்தக் கட்டுண்டிருந்தது, மயங்கிக்கிடந்தது என்பதே ஒரு அலங்காரம் கருதி எழுதப்படும் பிழைதான். அவரின் பேச்சும், எழுத்தும் சமூகத்தின் மொத்த சிந்தனையை பீடித்திருந்த தளையை உடைக்க உதவின என்றுதான் கூறவேண்டும். ஆகவேதான் ஆட்சிக்கட்டிலில் அவரை தமிழகம் அமரவைத்தது என நான் எண்ணுகிறேன். தனி மனிதனாகச் சரி, ஒரு ஆட்சியாளராக கலைஞர் எவ்வாறானவர்? அதைப் பற்றி உன் கருத்தென்ன? சரி, ஒரு நீண்ட விமர்சனத்தைத்தான் வைப்போமே, வேண்டாம் எனினும் தொலைபேசியில் அழைத்தாவது ’அதைப்பேசினால், இதையும்தான் பேசவேண்டும்’ என்று குட்டுகிறார்களே என இதை எழுதத் துவங்குகிறேன். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை, கலைஞருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு?
எதையெதையெல்லாம் எழுதவேண்டும்? எங்கு துவங்கலாம்?
முதல் கேள்வி, கலைஞரின் பேச்சும், எழுத்தும், படைப்புகளும் தமிழ்ச்சமூகத்தின் மொத்த சிந்தனையை பீடித்திருந்த தளைகளை உடைத்தனவா? இல்லையா? அதற்கான பரிசுதான் மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்ததா? இல்லை, பின்பு எம்.ஜி.ஆர் நிகழ்த்தியதைப் போன்ற ஒரு கவர்ச்சி, மாய பிம்பத்தைத்தான் அப்போதைய அவரின் பேச்சும், எழுத்தும் மக்களிடையே அவருக்கு உருவாக்கித்தந்ததா? அந்த விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் முன்னோடிதான் கலைஞரா? அதற்காகத்தான் எம்.ஜி.ஆரைப் போலவே அவருக்கும் ஆட்சி வாய்ப்பு எனும் மரியாதை வழங்கப்பட்டதா? கலைஞரின் எழுத்தும், பேச்சும் மக்களைக் கவர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மட்டுமே உருவானதா? அல்லது அதில் சமூக விழிப்புணர்வும், விடுதலையும், வளமான எதிர்காலம் நோக்கிய கனவும் மட்டுமே நோக்கமாக இருந்ததா? அல்லது இரண்டுமேவா? எது சரி? ஆட்சி வாய்ப்பு வழங்கப்பட்டதும் சுயமரியாதை மிக்க, வளமான தமிழ்ச்சமூகம் என்ற கொள்கை அவருக்குப் முக்கியமாக இருந்ததா? இல்லையா? அல்லது முதலில் இருந்து பின்னர் தேய்ந்ததா? இருந்ததாயின், இன மான உணர்வையே நோக்கமென கொண்ட அவரை இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை வழங்கச்செய்து, தமிழரின் மானத்தை விலைபேசச் செய்த காரணி எது? இதெல்லாம் இல்லை, அவரது நோக்கம் கடல் கடந்தும் கடாரம் வென்ற பழம் சக்கரவர்த்திகளுக்கு இணையாக, பன்னெடுங்காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, புகழ் குன்றாமல் வாழ்ந்த செங்கோலன் எனும் பெயர் மட்டுமேதான் எனலாமா? அது சரியா? சரியெனின், வரலாறெங்கும் அவ்வாறான தலைவர்கள் இருந்திருக்க, அந்த எண்ணம் முற்றிலும் தவறானதா? தமிழ்ச்சூழலில் நல்லாட்சி என்பதென்ன? அதை எப்படியெல்லாம் வரையறுக்கலாம்? இந்திய மேலாண்மையின் ஒரு பகுதியான மாநிலத்தின் ஒரு முதல்வர் என்னென்னவெல்லாம் செய்யமுடியும்?
உண்மையான விவசாய மலர்ச்சி, உட்கட்டமைப்புப் பெருக்கம், அறிவியலோடு இயைந்த வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்புப் பெருக்கம், உற்பத்திப்பெருக்கம், கட்டுக்குள்ளிருக்கும் விலைவாசி, மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அண்டை மாநிலங்களோடு நல்லுறவு, மத்திய அரசோடு நல்லுறவு, நீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வளங்களைப் பேணுதல் மற்றும் அவற்றை தடையறத்தருதல்.. இவை முதலாக இன்னும் நீளும் ஓர் பட்டியலைத் தயார் செய்யலாமா? இதைக் கலைஞர் அரசு கசடறச் செய்ததா? இல்லையா? அல்லது பின் வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அரசுகளாவது செய்தனவா?
முதல் கேள்வியில் தளைகள் எனப்பட்ட சாதி முன்னிறுத்தும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மலிந்த மூடநம்பிக்கைகள், முதலாளித்துவம், கல்வியின்மை போன்ற காலத்தால் முந்தைய முக்கியப் பிரச்சினைகளுக்காக போராடியவர்கள் யாவர்? அவர்களுள் கலைஞரின் பங்கு யாது? அவரைப் பாராட்டுகையில் அதை எந்த அளவில் கருத்தில் கொள்ளவேண்டும்? அப்படியான விஷயங்களைக் காலத்தால் முந்தைய அவலங்கள் என நான் குறிப்பிடுவதைப் பார்த்து, ‘அடேடே.. அப்படி இல்லை தம்பி!’ என என்னை நோக்கிச் சிரிப்பவர்கள் யாரார்? நன்மை செய்யாவிட்டாலும் தவறில்லை, அமைதியாகவேனும் இருக்கலாமே என்று கூட இல்லாமல் அவ்வாறான சாத்தானின் குட்டிகளை மரணிக்கவிடாமல் பேணிப் பாதுகாத்து, அவற்றுக்கு அவர்கள் மட்டுமின்றி, நம்மையும் நாளை துடிக்கத் துடிக்க உணவாகத் தரக் காத்திருப்போர் யாரார்?
தவிர, இலவசங்கள், மது விற்பனையெனும் ஆட்சியின் ஆதாரம், மலிந்து பெருகிய ஊழல் போன்ற அருவருப்பான விஷயங்கள் தமிழகத்தில் எப்போது துவங்கின? எப்போது பெருகின? அதில் கலைஞருக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா?
கலைஞர் அவர்தம் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தித்தந்த அரசியல் வாய்ப்புகள் தவறானதா? எது வரையில்?
அவருக்கிருந்த வாய்ப்புகளிலிருந்து கலைஞர் இது வரை தந்த ஆட்சியிலிருந்து, முற்றிலும் வேறான நல்லாட்சியை வழங்கியிருக்க முடியுமா? அல்லது, அதே வாய்ப்புகளால் முற்றிலும் மோசமான ஆட்சியைக் கூட வழங்கியிருக்கக் கூடுமோ? போராடித்தான் அதைத் தவிர்த்தாரா? அல்லது, அவருக்கிருந்த கவர்ச்சிகரமான போட்டிகளை சமாளிப்பதிலேயே கணிசமான காலத்தை இழந்தாரா?
தமிழகம் இங்கே இத்தனை விஷயங்களுக்காகக் காத்திருக்க, அதனூடே நம் தலைவர்கள், ஈழத்துக்கு எதிரான இந்தியத்திருநாட்டின் பகுதியினராய் இருந்துகொண்டு, அருகிருந்தும் அந்நியமாகிப்போன நம் ஈழத்துக்காக என்னென்னவெல்லாம் செய்திருக்க முடியும்? யாரெல்லாம் என்னென்ன செய்தனர்? கலைஞர் செய்தது என்ன? அது போதுமானதா?
காமராசரைப்போல ஒரு சுயநலமில்லா முதல்வர் இனி சாத்தியமா? கலைஞரின் ஆளுமையோடு, அவ்வாறான சுயநலமின்மையும் இருந்திருந்தால் தமிழகம் இன்று சுபிட்ச பூமியாக இருந்திருக்குமா? அல்லது அதற்காக கலைஞரையும் நாம் காணாமல் போகச்செய்திருப்போமா? சமூக நன்மைக்காக அப்படிக் காணாமல் போனாலும் துன்பமில்லை என்பதுதானே தர்மம்? அந்த தர்மம் இன்று சாத்தியமான ஒன்றா? அல்லது எத்தனை தூரம் அதற்கு அருகில் ஒரு நிஜ முதல்வர் செல்ல இயலும்? ஒருவேளை கலைஞர் இருந்திருக்காவிட்டால், அந்த இடத்திற்கு, அப்படியான ஒரு தேவதூதனைக் நாம் கண்டடைந்திருப்போமா?
விமர்சனம் எழுத அமர்ந்தால் என்ன இது, இத்தனைக் கேள்விகள் எழுகின்றன? பலவற்றுக்கு பதில் தெரியவில்லை, சிலவற்றுக்காவது எனது எண்ணங்களைப் பதிலாக எழுத முடியுமாயினும் அது முழுமையாக இராது என இப்போது தோன்றுகிறது. அத்தகைய ஒரு நீண்ட கட்டுரையை தகுந்த தரவுகளோடு எழுத எனது வாசிப்பனுபவத்தால் நிச்சயம் இயலாது. பெரிய வாசிப்பு மட்டுமின்றி, அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழகத்தை அருகிருந்து அக்கறையுடன் பார்த்த அனுபவம், பொறுப்புணர்வு, சமூக நோக்கு, நல்லெண்ணம், ஆய்வறிவு, வரலாற்றறிவு, உளவியல் ஞானம், மொழியுணர்வு போன்ற பல்வேறு குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு அறிஞர்தான் இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதிலான கலைஞர் மீதான விமர்சனத்தை சரியான முறையில் வைக்கமுடியும் என நினைக்கிறேன்!
நிச்சயம் கலைஞர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லைதான், ஏற்கனவே சொன்னது போல.. ஆனால் அதைச்செய்ய நான் சரியானவனில்லை என்பதுதான் என்னுள் தோன்றிய இத்தனைக் கேள்விகள் சொல்கின்றன!
எந்த ஒரு சாமானியனுக்குமே அவனளவில் யார் மீதும், எதன் மீதும் விமர்சனம் என்ற ஒன்றுண்டு. அதைப் பகிராமல், ஒரு வியப்பை ஏற்படுத்தித் தப்பித்துக்கொள்ளும் மனோபாவம் இக்கட்டுரையின் நோக்கமில்லை. நிஜமாகவே ஏதோ ஒரு போதாமை எனைத் தடுக்கிறது என அந்த தொலைபேசி நண்பர்களும், அதே போன்ற ஒத்த சிந்தனை கொண்டவர்களும் நம்பினால் போதும்.
நன்றி.
.