’அழகு குட்டி செல்லம்’ படத்தைப் பற்றிய விமர்சனமாக எனது முந்தைய பதிவும் அமைந்திருந்தாலும், பின்வரும் இந்தக்கட்டுரை, அப்படம் குறித்தவொரு விரிவான பார்வையாகும். மார்ச் மாத ‘படச்சுருள்’ இதழில் இது வெளியாகியுள்ளது. (நன்றி: படச்சுருள்)
********
அழகுக்குட்டிச் செல்லம்: குழந்தைகள் கொண்டுவரும் நம்பிக்கை
********
அழகுக்குட்டிச் செல்லம்: குழந்தைகள் கொண்டுவரும் நம்பிக்கை
“பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், இப்பூமிக்குப் புதியதொரு நம்பிக்கையைக் கொண்டுவருகிறது”
-பிறப்பால் ஒவ்வொரு குழந்தையையுமே, இறைபாலனோடு ஒப்பிட்டுப்பெருமை சேர்க்கும் இயக்குநரின் இந்தப் பார்வையே, படத்தின் மேன்மையானஉள்ளடக்கத்தை அழகுறச் சொல்லிவிடுகிறது.
இன்றைய சமூக அமைப்பில், வேகமான சூழலில் மனிதர்களிடையே இடைவெளி அதிகரித்துக்கொண்டேபோகிறது. யாருக்கும், யாருடனும் நின்று பேச நேரமில்லை. ரத்த உறவுகளுடன் தொலைபேசியில் உரையாடுவது கூட அரிதாகிவிட்டது. மனைவியுடன் செலவழிக்க வேண்டிய நேரத்தைக்கூட முன்பே திட்டமிடவேண்டியதாக இருக்கிறது. ஆயின், எல்லாவற்றையும்விட அதிக கவனம் செலுத்தப்படவேண்டிய குட்டி மனிதர்களைக் நாம் கவனிக்கிறோமா என்பதுதான் கேள்வி. நம் எதிர்வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதில் கூட நம் கவனமில்லை, ஆயின், நம் குழந்தைகளின் இயல்பை, ஆளுமையை வடிவமைக்கும் அவர்களது பள்ளிச்சூழல், நட்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய நமக்கு நேரமில்லை. குழந்தைகள் வாழும் வீடு எப்படியானதாக அமையவேண்டும்? அவர்கள் எதைப் பார்க்கிறார்கள், எதைக் கேட்கிறார்கள், எதைப் பேசுகிறார்கள்?
குழந்தைகளின் உள்ளம் பேரழகானது. தொடர் ஓட்டத்தில் சற்று நேரமே நம் வசமிருக்கும் ‘பெடானை’ப் போன்றது இந்த சமூகம். நாம் கைப்பற்றுகையிலிருந்த அதே பொறுப்போடு, எவ்வித மாசுமின்றி அதை நாம் நம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், இதைத்தான் நீங்களும், நானும் எத்தனை தூரத்திற்குப் பாழ்படுத்தி வைத்திருக்கிறோம்?
அறியாமை, அவசரம், ஆணவம், அரவணைப்பின்மை, அரசியல்! பாழ்படுத்தும் எத்தனையோக் கூறுகளில் இவையும் கொஞ்சம்!
ஓர் ஆண் மகவு தம் வாழ்க்கையை முழுமைப்படுத்திவிடும் எனும் ஒரு நம்பிக்கை. அறியாமையில் விளைந்த நம்பிக்கை! அது எப்படியான ஒரு இழப்பிற்கு எளிய மனிதனான ஓர் ஆட்டோ ஓட்டுநரைக் கொண்டுசெல்கிறது.?
பாலின ஈர்ப்பைக் காதலெனக் கொள்ளும் அவசரம் ஓரிளம் பெண்ணுக்கு. அதனால் மெல்லுணர்வுகள் வாடிப்போகும் எத்தனைச் சிக்கலான சூழலுக்கு அவள் தள்ளப்படுகிறாள்?
தன்முனைப்பின் ஆணவத்தில், விட்டுக்கொடுப்பது என்பதற்கு மாற்றாய் அன்பை விட்டுக்கொடுத்துவிட்டு ஒரு சிறுவனை பரிதவிக்கவிடும் ஒரு பெற்றோர். துயரோடு வழியும் அவனது கண்ணீருக்கு என்ன பதில்?
தாய்மை சுரக்கத்துவங்கிவிட்ட உள்ளத்தை அரவணைக்கும் சுற்றம் இல்லையெனில், ஆயிரம் குழந்தைகள் சூழ வளையவரும் சூழலிலும், குழந்தையின்மையால் தவிக்கும் ஆசிரியையின் கனவுகள் எத்தனை வலி நிரம்பியதாய் இருக்கும்?
தன் பச்சிளம் குழந்தையை அரசியலின் விளைவான போருக்குப் பலி தந்துவிட்ட, ஓர் ஆறாத தாயுள்ளத்துக்கு, எப்படியான ஆறுதலை நாம் தரமுடியும்? அவளது ஓலம் எப்படியிருக்கும்?
இத்தனைத் துயரையும் துடைக்குமா ஒரு சின்னக் குழந்தையின் வரவு.?
இப்படியொரு அழுத்தமான, சுவாரசியமான கதைப்பின்னல், இந்த ஒவ்வொரு கிளைக்கதையையும் கோர்க்கும் ஐந்து சிறுவர்கள், அத்தனைக்கும் ஆதாரமாய் ஒரு சின்னக் குழந்தை! படம், பார்க்கப் பார்க்கவே நம்முள் ஒரு உணர்வுக் கொந்தளிப்பும், உற்சாக ஊற்றும் பெருக்கெடுக்கிறது. சிறுவர்களையும், குழந்தைகளையும் மையமாகக்கொண்டு சுழலும் கதை அதன் மூலமாக பெரியவர்களிடம் நிறையக் கேள்விகளை முன்வைக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் இத்தனைக் கதைகளையும் அதன் ஜீவன் தொலையாது சொல்லிவிட, மிகத்துணிவும், நம்பிக்கையும், திறனும் வேண்டும். இந்தப்படத்தின் இயக்குநருக்கும், அவர்தம் குழுவுக்கும் அவை இருந்திருக்கின்றன.
பார்வையாளனுக்கு எந்தச் சிரமமுமின்றி மிகச்சுருக்கமாக, மிக வேகமாக கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக, அந்தக் கதைகள் சார்ந்து சொல்லாமல் விடுபட்டவற்றை கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரத்தைத் தந்து, நமது பங்களிப்பையும் கோருகிறது படம். காட்சியியல் தரும் அதே அனுபவத்தோடு, வாசிப்பு தரும் சுதந்திரத்தையும் இந்தப் படம் தருகிறது என்றால் அது மிகையில்லை.
எளிய மனிதனான ஓர் ஆட்டோ ஓட்டுநர், தன் மனைவியை நான்காவது பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான், முந்தைய மூன்று பெண் குழந்தைகளும் வீட்டில் இருக்கின்றனர். அவனது ஆசை, ஓர் ஆண் குழந்தை. இந்தச் சமூகமும், அவனது குடும்பமும் அப்படியான ஒரு ஆசையை அவன் மனதில் விதைத்திருக்கின்றன. அவனது தந்தையார், சகோதரர்கள் உட்பட ஆண்வாரிசு இல்லாதவர்களே இல்லை. அதைத் தன் நியாயமான ஆசையாகக் கருதுகிறான். ஒவ்வொரு பெண்குழந்தை பிறக்கும் போதும் தன் ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டே வந்தவனுக்கு, நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்த சேதி சொல்லப்படுகிறது. மிகுந்த துயரமும், ஏமாற்றமும், குழப்பமும் கவிய மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறான் அவன். தனித்து விடப்பட்ட மனைவி என்ன செய்கிறாள்? அதுநாள் வரை, அவளது மனநிலையை, உடல்நிலையை கருத்தில் கொண்டவனில்லை அவன். இந்தக் கதையில், அவன் தன் நான்காவது குழந்தையை இழக்கும் சூழல் மிகவும் துயரம் தருவதாய் அமைகிறது. ஆயினும் எந்த புறத்தூண்டுதலுமின்றி, அவன் தன் பிரச்சினையை, மனமாற்றத்தை தன்னிலிருந்தே கண்டுகொள்கிறான். தன் மனைவியின் மனநிலையை, தன் பெண் குழந்தைகளின் மீதான அன்பை, தன் அறியாமையை என ஒவ்வொன்றையும் சிந்திக்கிறான். ஒரு எளிய மனிதனுக்கும் கூட அது சாத்தியமான ஒன்றுதான்.
வேலை, வேலை என எந்நேரமும் தம்மை பிசியாக வைத்துக்கொள்ளும் தம்பதியருக்கு, தங்களின் ஒரே இளம்பெண்ணுடன் அமர்ந்து ஒரு நேர உணவை எடுத்துக்கொள்ளக்கூட நேரமில்லை. அவர்கள் சேர்க்கும் செல்வமெல்லாம் யாருக்கு? ஏற்றப்படாத விளக்கினால் இருளை எப்படி அகற்றமுடியும்? சூழல் கூடிவரும் பொழுதொன்றில் தன் தோழனுடன் கூடுகிறாள் நிலா. அங்கே அந்த உறவை ஏற்கும் வயதோ, மனமோ இல்லாத அந்த இளைஞன் மட்டுமே தவறு செய்தவனாவானா? என்ன அதிர்ந்து என்ன பயன்? கண்ணீர்தான் மிச்சம் அந்தப் பெற்றோருக்கும், அவளுக்கும். வயிற்றிலே அசையும் குழந்தையைக் கைத்தொட்டு உணர, தன் தாயை அவள் அழைக்கும் காட்சி நெகிழ்வானது. கணவனோடு களிக்கவேண்டிய இதைப்போன்ற, எத்தனை உணர்வுப்பூர்வமான தருணங்களை அவள் இழக்கிறாள்? ஒரு தவறு, எத்தனை வேதனையான நிகழ்வுகளுக்குத் தொடக்கமாக அமைந்துவிடுகிறது? அந்த வயதிலும் தாய்மையைத் துணிவுடன் ஏற்க முன்வரும் நிலா, தன் தவறுகளிலிருந்தே, தன்னை மிக உறுதியான பெண்ணாக கட்டமைத்துக்கொள்கிறாள், அன்புக்காகத் தன் குழந்தையையே தத்து கொடுக்கும் அளவுக்கு!
தன்முனைப்பு எத்தனை தூரத்துக்கு ஒரு தம்பதியைக் கொண்டுசெலுத்தும்? அறிவையும், அன்பையும் தொலைத்துவிடச் செய்யுமா? எதுவும் புரியாத இளம்பிள்ளைகளுக்கு நேரும் துயரம் ஒருவகையெனில், புரிந்தும், புரியாமலும் தவிக்கும் வளரிளம் சிறார்களின் துயரம் இன்னும் சிக்கலானது. பெற்றோரிடையே நித்தமும் ஒரு சண்டையென இருக்கும் வீடு, பிள்ளைகளுக்கு எதைத் தரும்? வெயிலுக்கும், மழைக்குமான ஒரு நிழலை மட்டுமேவா? விட்டுக்கொடுத்தலின்றி உறவுகளென எதுவுமே இருக்கமுடியாது, அந்த விட்டுக்கொடுத்தல் பதிலை எதிர்பார்க்காத, அன்பின்பாற்பட்டு நிகழவேண்டும். ஒரு தம்பதிக்குள் இவை இல்லாவிட்டாலும் கூட தம் தேவைக்காக, தாம் உயிராய்க் கருதும் பிள்ளையின் நலனுக்காகவேனும் விட்டுக்கொடுத்தல் நிகழவேண்டும். அல்லாது, மணமுறிவுதான் விடியல் என்று முடிவுசெய்துவிட்டால், அது அவர்தம் பிள்ளையின் இருளில்தான் துவங்கும். அப்படியான பெற்றோருக்கிடையே நாட்களைக் கடத்திவருகிறான் ஜெயன் எனும் சிறுவன். அவனுக்கான தீர்வு என்ன?
மருத்துவம் கைவிட்ட சூழலில், தாய்மை சுரக்கும் மனதோடு பிள்ளையின்றித் தவிக்கிறாள் ஆசிரியை அருணா. அவளைச் சுற்றித் தினமும் ஏராளமான பிள்ளைகள். ஒருமுறை பிள்ளைகளுக்கு நாடகத்தைப் பயில்விக்கையில், கர்ப்பிணியான மரியாளின் தளர்நடை எப்படி இருக்கும் என்பதை அவள் செய்து காண்பிக்க நேர்கிறது. செய்துவிட்டு ஒதுங்கி அமர்ந்திருக்கும் அருணாவின் கண்ணீருக்கு அர்த்தமென்ன? வாழ்க்கை இப்படியான முரண்பாடுகளைத்தான் எங்கெங்கும் செய்துவைக்கும். பிள்ளைகள் இல்லாதவளை அரவணைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் அல்ல நாம்! இயல்பான நிகழ்வுகளுக்கும் கூட துயரின் சாயத்தைப் பூசி வைத்திருக்கும் சமூகம் இது. மனித மனம் மிக எளிமையானது, ஒப்பீடுகளிலேயே தன் வாழ்வை எடைபோடும். அதுவும் அன்புக்கான துயர் எனில் அது அதீதம்தான்! தத்தெடுக்கும் வழிமுறையைப் பகிரும் கணவனின் முடிவை ஏற்காது மனதோடு போராடும் அவளும் கரைந்துபோகிறாள், ஒரு குழந்தையைக் கையிலேந்துகையில்!
புலம்பெயர்ந்து வாழும் கனடாவிலிருந்து, இங்கே தன் தமக்கையைக் காண தம் மனைவியுடன், சிரிப்பும் கேலியுமாய் வந்து சேர்கிறான் ஒரு தம்பி. அந்தத் தம்பதியின் கேலிப்பேச்சுக்கும், சிரிப்புக்கும் உள்ளேதான் எத்தனைப் பெரும் வரலாற்றுத்துயரம்? உற்சாகம் எனும் பெயரில் கடைகடையாகச் சென்று உணவருந்தியும், பொருட்களை வாங்கியும் திரிகிறார்கள் அவர்கள். ஒருமுறை அவன், தன் அக்கா மகன் திலீபனிடம் சொல்கிறான், “இவள் எம்பஸியில் இந்தியாவுக்கெண்டு விஸா கேக்கயில்ல, பாண்டிபஸார் எண்டுதான் விஸா கேட்டவள்” அந்தக் காட்சியில் மனம்விட்டுச் சிரித்தேன் நான். பெருந்துயருக்கு ஊடே பயணிக்கும் ஒரு சிரிப்புக்கு வேறு பரிமாணங்கள் உண்டு. என் ரத்த உறவொன்றை இழந்த நிலையில், கண்ணீர் வற்றி, ஈமச்சடங்குக்காக நான் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் என் நண்பன் ஒருவன் சொன்ன நகைச்சுவைக்காக நான் சத்தமாகச் சிரித்த நிகழ்வு, இப்போது என் நினைவுகளில் வந்துபோகிறது. உடைகள் வாங்க ஒரு துணிக்கடைக்குச் செல்லும் திலீபனின் அத்தையின் கண்களில்படும் இளஞ்சிவப்பு ஆடை ஒன்று ஏற்படுத்தும் தாக்கம் நம்மை உறையச்செய்கிறது. அவளது அந்த ஓலம் இப்போதும் என்னை விட்டகலவில்லை, எப்போதும் அது அகலாது!
விழியில்லாதோருக்கு ஒலிகளால் நிரம்பியது உலகம். இதை நம்மால் எளிதாகச் சொல்லிவிட முடியலாம், ஆனால், அதை உணரமுடிவது அத்தனை எளிதானதா? குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு ஒரு நல்மனிதனால் வளர்க்கப்பட்ட சிறுவன் முருகு. துள்ளலும், குதூகலமுமாய்த் திரியும் முருகுவின் உள்ளத்தைப் படம்பிடிக்க நம்மால் முடியுமா? முருகுவை எடுத்து வளர்த்த அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் காப்பாளர் ஒரு தடவை சொல்லுகிறார். “பச்சைக்குழந்தையா ரோட்டோரத்துல அழுதுகிட்டு கிடந்தான், நான் கொடுத்த கொஞ்சப் பாலுக்கே, என் முகத்தைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சான்”. அப்போது முருகுவின் அந்தப் புன்னகையைக் காணும் ஆவல் தோன்றுகிறது நமக்குள்.
ஜெயன், முருகு, திலீபனுடன் பிரியா, ஜெனிபர் எனும் இரு பெண் பிள்ளைகளுமாக ஒரு குழு உருவாகிறது, ஒரு நோக்கத்துக்காக!
தங்கள் பள்ளியின் விழா ஒன்றில் ‘ஏசு பிறப்பு’ நாடகத்தை நடத்த மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின், ஃபாதரிடமிருந்து அனுமதி பெறுகிறது இந்தச் சிறார் குழு. கண்டிப்பு நிறைந்த ஃபாதர், இவர்களுக்குப் போட்டியாக நிற்கும் மாணவர்கள், விழாவுக்கு வரும் விருந்தினர் ஒருவரால் முக்கியத்துவம் கூடிவிடும் நாடகம் என அவர்களுக்கான நெருக்கடிக்குக் குறைவில்லை. அவர்களின் பிரதான தேவை ’குழந்தை ஏசு’வாக மேடையில் தோன்ற ஒரு குழந்தை. ஐவரில் ஒருவரான பிரியாவின் வீட்டிலிருக்கும் அவளது அக்காவின் குழந்தையைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு, அனுமதியும் வாங்கிவைத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் அங்கே நிகழ்கிறது ஒரு மாற்றம். இந்தச் சிறுகதைகளுக்கூடே வரும் ஒரு குறுங்கதை. அத்தனைப் போராட்டமான உறவுச்சிக்கல்களை ஒரு தொடுதலில் தீர்த்துவைக்கும் இன்னொரு குழந்தையின் கதை அது. தன் தாயின் துயர்.துடைக்க, தன்னைத் தவிக்கவிட்ட தந்தையின் கைகளிலேயே, அந்தக்குழந்தை, சுகமாகத் தஞ்சமாகிவிடுகிறது. எனில், நம் சிறுவர்களின் நிலை?
ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, குப்பைமேட்டில் கைவிடும் அவளது நான்காவது பெண்குழந்தையைக் கைப்பற்றுகிறது சிறுவர்கள் குழு. குழந்தையை நினைத்துப் பதறுகிறோம் நாம். ஆயினும், ஒரு நல்ல போலீஸ்காரரின் உதவியோடு, அந்தக்குழந்தை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் சென்று ‘ஆதரவற்றோர் இல்லத்தை’ அடைகிறது. ஆனால், அது முருகுவின் இல்லமாயிற்றே! வேறு வழியே இல்லாமல், குழந்தையைக் கடத்திவிட திட்டமிடுகிறது குழு. மீண்டும், அவர்களின் சாகசப்பயணம் தொடர்கிறது. பள்ளிக்குள் வந்தபின்பும், நாடகம் தொடங்கியபின்னும் கூட அது தொடர்கிறது. கடத்திவரப்பட்ட குழந்தை என அறியாமல் அவர்களோடு நிற்கிறாள் ஆசிரியை அருணா.
பார்வையாளர் வரிசையில் ஃபாதரோடு, பள்ளியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கும் சிறப்பு விருந்தினர், தனித்தனியே அமர்ந்திருக்கும் ஜெயனின் பெற்றோர். திலீபனின் மாமாவும், அத்தையும். மற்றொரு புறம் காணாமல் போன குழந்தைகளைத் தேடி ‘ஆதரவற்றோர் இல்லத்தின்’ நிர்வாகி! இந்த நாடகமும், இறுதிக்காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் குறிப்பிடப்படவேண்டியது! காட்சிகளை நடித்துக்கொண்டே சிறுவர்கள், குழந்தையைத் தேடும் பணிகளையும் பதற்றத்தோடு செய்வது அழகியல்! மரியாளின் பிரசவத்துக்காக அவளோடு இடம் தேடியலையும் ஜோசப், ஒவ்வொரு வீடாக இடம்கேட்டு வருகிறார். மாட்டுத்தொழுவத்தில் இடம் கிடைப்பதற்கு முன்பாக, ஒரு வீட்டுக்காரராக நடிக்கும் திலீபன் ‘எங்கள் வீட்டில் இடமில்லை ஐயா’ என்று சொல்லிவிட்டு ’குழந்தை என்னாச்சு டீச்சர்’ என்று கேட்டபடியே மேடைக்குட்புறமாக ஓடுகிறான். அந்தச் சிறார்களின் இயல்பு அழகு!
இடையே ஆட்டோ ஓட்டுநரும், அவரது மனைவியும் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் நிலாவுக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கிடையே மலரும் உன்னதமான ஒரு உறவும், நிலா கொள்ளும் உத்வேகமும் அங்கே ஒரு நிகழ்வாகிறது. தொலைத்துவிட்ட தன் பெண்குழந்தை, குழந்தை ஏசுவாகி அத்தனை பேருக்குள்ளும் ஒரு நெகிழ்வை ஏற்படுத்திவிட்டு, தாய்மைக்கு ஏங்கும் ஒரு ஆசிரியையின் கைகளில் தஞ்சமாகப்போவதை அறியாமல், அந்த ஆட்டோ ஓட்டுநர் தான் விரும்பியபடியே ஓர் ஆண் குழந்தையை மகனாக ஏற்கிறான். அன்புக்காக மனமுவந்து அதைச் செய்கிறாள் நிலா.
நாடக மாந்தர்களின் பார்வையில் உறவுகளை ஏற்பது, விட்டுக்கொடுத்தல், கல்வியும், ஏழமையும் கொண்டிருக்கும் உறவு, துயருக்கான விடுதலை என போகிற போக்கில் பல அரிய செய்திகள் எளிமையாகக் கடத்தப்படுகின்றன. அத்தனைச் சிறுகதைகளுக்குமான எளிய, அழகிய முடிவாக அந்த நாடகம் அமைகிறது. ஜெயனின் உயர்த்தப்பட்ட கைகளில் உயிரோட்டமாய் சிரிக்கும் குழந்தை இந்தக் கதையின் மாந்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்குள்ளும் ஒரு நம்பிக்கையை விதைத்துச் செல்கிறது.
படமெங்கும், முக்கியப் பெண்களின் கதாபாத்திரங்கள், படமாக்கப்பட்டிருக்கும் விதத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திருமணத்துக்கு முன்பே தாயாகும் நிலா, குழந்தையைப் போரில் இழந்த இலங்கையைச் சேர்ந்த இளம்தாய், நான்காவதாகவும் பெண்பிள்ளையைப் பெற்றுப் பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, கணவனோடு ஏற்பட்ட சிக்கலில் தாய்வீட்டிலேயே தங்கிவிட்ட பிரியாவின் அக்கா, குழந்தைப் பேறின்றித் தவிக்கும் அருணா டீச்சர், விவாகரத்துக்கிடையே மகனைத் தன்னுடன் வைத்துக்கொள்ளப் போராடும் ஜெயனின் அம்மா என ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகக்கவனத்துடனும், மிக அழகுடனும், தனித்துவமாகவும் படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்குமான காட்சி நேரம் மிகக்குறைவானது. அதற்குள்ளும் அவற்றை வெற்றிகரமாக நிறுவிவிடும் ஆளுமையுடன் செயல்பட்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக பிரியாவின் அக்கா கதாபாத்திரம். மற்றவற்றைவிடவும் குறைவாக, மிகச்சில நிமிடங்களே வரும் கதாபாத்திரம் இது. உண்மையில் பிரசவத்துக்குத் தாய்வீடு வந்தவள் என்றுதான் நாம் எண்ணிக்கொள்ளும் சூழல். பின்பொரு காட்சியில் கூட அவளது கணவன், ‘என் பெற்றோருக்குப் பிடிக்காதவர்கள் எனக்கும் பிடிக்காது’ என்பதாகத்தான் குறிப்பிடுகிறான். அவளுக்கும், அவளது கணவனுக்குமிடையே என்ன பிரச்சினை, அவளுக்கும் அவளது மாமியார், மாமனாருக்குமிடையே என்ன பிரச்சினை என்பது கூட நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. சொல்லப்பட்டது பிரச்சினை என்பது மட்டுமே! அதுவே போதுமானது இங்கே! அவளது கண்களில் சோகம் மட்டுமல்ல, ஏதோ தவறு செய்துவிட்ட குற்றவுணர்வும் கூட இருந்ததாகத் தோன்றியது எனக்கு. அப்படியான மெல்லியவுணர்வுகளைக் கூட கவனத்துடன் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
இயக்குநர் சார்லஸோடு இணைந்து, பின்னணியில் ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கும் முக்கியத் தொழில்நுட்பவியலாளர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் இந்தக் கட்டுரை நிறைவடையாது. பட்டுக்குழந்தைகளின் அழகை அள்ளிவந்திருக்கும் காட்சித்தொகுப்புகள், சிறார் குழுவின் ஓட்டம், உற்சாகம், பரபரப்பை மாற்றுக்குறையாமல் செய்திட்ட பதிவுகள், படத்தின் பிரதான கதாபாத்திரங்களான பெண்களின் உணர்வுகளைக் கச்சிதமாக கடத்தித்தந்தது என முன்னிற்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். ‘என் அழகுக்குட்டிச்செல்லம்’, ‘தாயிற்சிறந்த தயாபரனே’ எனும் பாடல்களாலும், பின்னணி இசையாலும் நம்மைப் படத்தோடு பிணைத்தவர் இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனம். இத்தனைச் சிரமமான ஒரு பின்னல் திரைக்கதையில் அடுத்து என்ன என்பதையோ, எதை விடுப்பது, எதைச்சேர்ப்பது என்பதையோ தீர்மானிப்பது அத்தனை எளிதான விஷயமல்ல, அதை பிசிறின்றிச் சாத்தியப்படுத்திய எடிட்டர் பிரவின் பாஸ்கர். இன்னும் அத்தனை பேருக்கும் நம் வாழ்த்துகளும், நன்றியும்!