என்னைப் பொறுத்தவரையில் ஒரு சினிமா, அதன் கதையை விடவும் அதன் கதாபாத்திரங்களை முழுமையாக நிறுவுவதில்தான் சிறப்புப் பெறுகிறது என நம்புகிறேன். ஆனால், அது பெரும்பாலான படங்களில் அத்தனை எளிதாக அமைந்துவிடுவதில்லை. நிறைய நேரத்தையும், காட்சிகளையும் எடுத்துக்கொண்டும் கூட அர்த்தமில்லாமல் மிதக்கும் கதாபாத்திரங்களை பல படங்களிலும் நாம் எப்போதும் காண்கிறோம். ஆனால், அத்தனை நேரமெடுத்துக்கொள்ளாமலும், ஒரே காட்சியில், ஒரே ஷாட்டில், ஒரே வசனத்தில் கூட கதாபாத்திரங்களை நம் மனதோடு ஆழமாக நிறுவிவிடமுடியும். அது தேர்ந்த இயக்குநர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஒன்று.
இங்கே வசிக்கும் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் வேதனைக்கதை ஒரு காட்சியில் விரிகையில், பின்னணியில் அமர்ந்திருக்கும் ஒரு மூதாட்டியை நோக்கிக் கேமரா பயணிக்கும் அந்த ஒரு ஷாட், ஆழமான ஒரு சிறுகதையை கொண்டிருந்தது. இயக்குனர் சார்லஸுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது.
போலவே பல கதாபாத்திரங்களும் இப்படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கின்றன. காட்சியமைப்பு, அதன் ஒளிப்பதிவுக்கூறுகள், நடிகர்கள், இசை நான்கும் மிகச்சிறப்பாக ஒத்திசைந்திருக்கின்றன. விளைவு பல இடங்களில் தொண்டை விக்கித்துப்போகிறது. ஒரு சின்னக் குழந்தையின் ஆடை, ஒரு பெரும் வரலாற்றுச் சோகத்தை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி, தன் மனைவியின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டு, மருத்துவமனையில் தகறாறு செய்யும் ஆட்டோ டிரைவரின் பதறவைக்கும் முரட்டுத்தனம், தொடர் தவறுகளால் வாழ்வின் இக்கட்டில் சிக்கித்தவிக்கும் இளம்பெண் தன் தந்தையிடம் சீறும் காட்சி, குழந்தையின்மையின் வேதனையை மனமெங்கும் சுமக்கும் ஒரு ஆசிரியையின் கைகளில் தஞ்சமாகிப் பசியில் அழத்துவங்கும் குழந்தை என படமெங்கும் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் உலவுகின்றன.
அழகிய சிறுகதைகள், மிக அழகுடன் ஒரு புள்ளியை நோக்கிக் குவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. தேர்ந்த ஒளிப்பதிவு, நடிப்பு, இசை, குறிப்பாக மனமெங்கும் பரவும் ’எனதழகுக்குட்டிச்செல்லம்’ பாடல் என இப்படம் ஒரு கவிதானுபவத்தை வழங்குகிறது. மேலும், குறிப்பிடப்படவேண்டியது கருணாஸ், ரித்விகா, சிறார்குழுவின் நடிப்பு. கருணாஸ் மட்டுமல்ல, பல தேர்ந்த நடிகர்களையும் தமிழ் சினிமா தொடர்ந்து வீணடித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது என்பதை உணர்கிறோம். முதல் முறையாக, சற்று நேரமேயாயினும் ஒரு தமிழ் சினிமாவில், இலங்கைத் தமிழ் ஒலிக்கிறது. பேசப்படவேண்டிய பல அறம் சார்ந்த விஷயங்களைப் படம் தொட்டுச்செல்கிறது. விறுவிறுப்பிலும் திரைக்கதை குறைவைக்கவில்லை. இறுதிக்காட்சிக்கு முன்பான குழந்தையைக் கையாளும் சில காட்சிகள், எளிதில் ஊகிக்கமுடியக்கூடிய கதையோட்டம், மற்றும் கிளைமாக்ஸ் என்பதை ஒரு சிறு குறையாகப் பதிவு செய்யலாம்.
மொத்தத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ நிறைவையும், மகிழ்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் நம் மனதில் விதைக்கிறது. தவறவிடக்கூடாத படம்!