Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

கமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்

$
0
0
நடப்பு நவம்பர் ’15, ‘அந்திமழை’ இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரையின் முழு வடிவம் இங்கே. அந்திமழைக்கு நன்றி!

***********

கமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்
-ஆதிமூலகிருஷ்ணன்


எவ்வளவு நாள்தான் அமைதி காப்பது? கொஞ்சம் பேசலாமே கமல்ஹாசன் குறித்தும்.

சமீபத்தில் ஒருநாள், இப்படித்தான் பாரதிதாசனின் குடும்பவிளக்கை வாசித்துவிட்டு ஒரு நண்பரை போனில் அழைத்து, ஏதோ ஜோக் புத்தகம் படித்துவிட்டு, பகிர்ந்து, சிரித்து மகிழ்வதைப்போல சிரித்துக்கொண்டிருக்க நேர்ந்தது. குடும்ப விளக்கு ஒன்றும் ஜோக் புத்தகம் இல்லை எனினும் அந்தச் சிரிப்பு, உண்மையில் தமிழ் தந்த சுகம் பெற்ற மகிழ்ச்சியால் வந்ததாகும்.

குடும்ப விளக்கில், அதிகாலையில் கண்விழிக்கும் தலைவியானவள், இரவு துயில் கொள்ளப்போகும் வரை கைக்கொள்ளும் பொறுப்புகளாக விவரிக்கப்படும் பட்டியல் இன்றைய பெண்களுக்கு தலைசுற்ற வைக்கும் ஆயினும் காலத்துக்கேற்ப அவற்றுக்குப் பொருள் கொள்ளவேண்டியது நம் கடன். அது ஒரு புறமிருக்க, அதில், அந்தத் தலைவியானவள், மதியப் பொழுதில் மகள் வீட்டுக்கு விருந்தாடிச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மாமனாரையும், மாமியாரையும் வரவேற்கும் காட்சி ஒன்று வரும். அந்த மாட்டு வண்டியிலே எண்ணிக்கையிலே அடங்கா ஏராளமான பொருட்களையும் அவர்கள் ஏற்றி வந்திருக்கின்றனர். 

வாணிபக்குடும்பமாயிற்றே! தலைவியோ, மாமியாருக்கு வணக்கம் கூறி வரவேற்றுவிட்டு ஆச்சரியமாகக் கேட்கிறாள்,

‘இவையெல்லாம் வண்டிக்குள்ளே இருந்தனவென்றால், அந்த அவைக்களம் தனிலே நீவிர் எங்குதான் அமர்ந்திருந்தீர்? சுவைப்புளி அடைத்துவைத்த தோண்டியின் உட்புறத்தே கவர்ந்துண்ணும் பூச்சிகட்கும் கால்வைக்க இடமிராதே?’

அதற்கு மாமி சொல்வாள்: ‘இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார். என் தலைநிமிர வண்டி மூடிமேல் பொத்தலிட்டார்; உன் மாமன் நடந்து வந்தார், ஊரெல்லாம் சிரித்தது’
அதற்கு அந்த மாமன் சொல்லும் பதிலோ இன்னும் நகை. அன்பும், ஆரோக்கிய சூழலும், நல்வாழ்வியலும் நற்றமிழால் விவரிக்கப்படும் இடத்தே சற்று நகைச்சுவையும் கலந்திட்டால்? அதுதான் பாரதிதாசன். சிரிக்காமல், மகிழாமல், நிறையாமல், பகிராமல் நான் என்ன செய்வது? தாசனே இப்படியாயின், முன்னவன் பாரதி?

தேனும் வேம்பாகத்தோன்றும் பள்ளிப் பாடத்திலே பாரதியையும், அவர்தம் தாசனையும், குறளையும் விட்டு வந்த பிறகு மீண்டும் அவர்களை நான் அடைந்ததெப்படி?

எனக்கு ஒரு கமல்ஹாசன்தான் வரவேண்டியிருந்தது. மகாநதி படம் வந்த ஆண்டு 1993. அப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தேன். பதினெட்டு வயது. செயற்கையான சினிமாக்களுக்கிடையே ஓர் அழகிய கிராமத்தையும், குடும்பத்தையும், ஒரு மனிதனுக்கு நிகழவேக் கூடாத உச்சபட்ச மனத்துயரை சந்திக்கும் ஒரு நல்லவனையும் காண்பித்து, இதுதான் உலகம் எனும் பிரமிப்பையும், பயத்தையும் எனக்கு அறிமுகம் செய்தது மகாநதி. பல வகைகளில் தொடர்ந்து சிந்திக்க, வாசிக்க, கற்க வைத்த படம் அது.

‘பிறர்வாடப் பல செயல்கள் செய்து நரைமூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’

அத்தகைய சூழலிலும் தன்னம்பிக்கையையும், கர்வத்தையும் தருகின்ற அந்தக் கவிதை வரிகளை கமல்ஹாசன் பகிர்கையில் கல்வெட்டுப் போல பதிந்தது எனக்குள். நான் நிச்சயமாக அந்த வேடிக்கை மனிதனாக இருக்கவே கூடாது, இருக்கவே மாட்டேன் என படபடத்தேன். யாருடைய கவிதை இது? யாராவது வைரமுத்தா? இல்லை கமல்ஹாசன்தானா? பாரதியைப் பள்ளிப் பாடமாக மட்டுமே விட்டுவிட்டு வந்த என்னைப் பார்த்து சிரித்தார் கமல்ஹாசன். ஓடிப்போனேன் என் தாத்தனிடம்! இப்போது பாரதி பள்ளிப் பாடமில்லை. காதலானேன். பின்னாளில் என் பிள்ளைக்கு பாரதி என பெயர் தந்த போது, அதற்கு பாரதி மட்டுமே காரணமில்லைதானே? பாரதி பெருமலையெனில், பாரதிதாசன் ஓர் ஊழிக்காற்று.

அதற்கும் முன்னதாக 1986ல் விக்ரம் எனும் படம் வெளிவந்தது. அப்போது நான் விகடனில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்புச் சிறுவன். அந்தப் படம் ஸ்பை, கம்ப்யூட்டர், கோடிங், ராக்கெட் எனும் புதுவகையான கதையை, அந்த வயதை ஈர்க்கக்கூடிய கதையைச் சொன்னதால்தான் விழுந்தடித்துக்கொண்டு ராஜேஷ்குமாரையும், சுபாவையும், தமிழ்வாணனையும் நோக்கி ஓடினேன். அதைச் செய்திருக்காவிட்டால் அதைத் தொடர்ந்த பிற வாசிப்பேது?

’சினிமாவும், எழுத்தும் இணைய வேண்டும், மலையாளம், பெங்காலியெல்லாம் உலகத்தரமான சினிமாக்களை உருவாக்கக் காரணம் எழுத்தாளர்கள்தாம். ஆகவேதான் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளர்களோடு பணிபுரிய ஆசைகொள்கிறேன்’ என்றெல்லாம் ஏதேதோ காதில் விழுந்தது. சினிமாவை விட எழுத்து என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்றுதான் ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில், நம் சினிமா சமூகத்தில் அது நியாயமான ஆச்சரியம்தானே! விகடன், குங்குமத்தில் சுஜாதாவை படிக்கும் போது, ‘தெரியுமா? இது சுஜாதாவாக்கும்!’ என்று எனக்கு நானே பெருமைப் பட்டுக்கொள்வேன். சட்டென ஜெயமோகனிடமும், சாருநிவேதிதாவிடமும் வந்துவிட இயலாதுதானே! அதன் முந்தைய படிகளை செவ்வனே கடந்து வந்திருக்க வேண்டும். பயிற்சி வேண்டும். வாசிக்கும் வழக்கம் வேண்டும். ரசனை வேண்டும். ரசனையை கமல்ஹாசன்தான் தந்தார் எனக்கு.

“அப்போதெல்லாம் தனியே போட்டோஷூட் கிடையாது. விளம்பரம் உட்பட்ட பல விஷயங்களுக்கும் தேவைப்படும் புகைப்படங்களை ஷூட்டிங்கின்போதே நாங்கள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்..” என்று துவங்கிய ஒரு பிரபல சினிமா புகைப்பட நிபுணரின் பேட்டி ஒன்று விகடனில் வெளியாகியிருந்தது. அதில், அந்த புகைப்படக்காரர் ஒன்று சொல்கிறார்.

“நடனமாடுகையில் கமலை போட்டோ எடுக்க முயன்றுகொண்டிருந்தேன். கண நேரம், புகைப்படத்துக்கான எழிலை அவ்வப்போது தரும் திறமைசாலி அவர். அதைக் கண்கொத்திப்பாம்பாய் நாங்கள்தான் கவனித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ரசிகனின் கலைஞர் அவர். அப்படியும் இந்த அழகான படத்தில் அவரிடம் தோற்றேன்..” என்று வியந்திருந்தார். காற்றிலே துள்ளிய நிலையில் கமல்ஹாசனின் முழு தோற்றம் பதிவாகியிருக்க, அவரது வலது கை மட்டும் அந்த போட்டோவுக்கு வெளியே போயிருந்தது. அவரது துள்ளலில், உருநிலையில் அவரது கைகள் எங்கேயிருக்கும் என்று கணிக்கத்தவறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நிபுணர்கள் வியக்கும் கலைஞர் கமல்ஹாசன். அதில், நுணுக்கம் என்பதன் பாடம் அழகாயிருந்தது எனக்கு.

தன் பணி என நடிப்பை மட்டும் கருதாது, ஒரு சிறந்த கலைஞனாக, டெக்னீஷியனாக இருக்கிறார். ஒரு கலைஞன், அவன் தொழில் சார்ந்த டெக்னீஷியனாகவும் இருப்பது ஒரு சுகம், ஒரு அனுபவம். அதனால்தான் இன்றைய எனது பொறியியல்துறைப் பணியிலும் ஒரு டெக்னீஷியனாக என்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அது ஒரு நற்போதை!

அபூர்வ சகோதரர்கள் 1989ல் வெளியானது. கமல்ஹாசனின் மசாலாப் படங்களில் கூட ஊடே கிடக்கும் கலைத்துண்டுகளைத் தனியே அள்ளிச் சேகரிக்கலாம். அதில், சில விநாடிகளே வந்தாலும், ஜனகராஜைப் பார்த்து கண்ணடிக்கும் ஓர் அனிமேஷன் துண்டு என்னை வியப்பிலாழ்த்தியதில் வியப்பேதுமில்லை. இப்படியான முதல் முறைகள் கமல்ஹாசன் படங்கள் அனைத்திலுமே காணக்கிடைப்பவைதானே! உலகெங்கிலுமிருந்து கதைகளைத் தழுவியவர் என அவரைத் தேடித்தேடி நாம் குறை சொல்கையிலேயே, அந்த அறிவுக்கும், விசாலத்துக்குமான விதை அவர் போட்டது என்பதை மறந்துபோகிறோம். கதைகளின் தழுவல் அவரது போதாமையாக இருக்கலாம். ஆனால், ஒரு நல்ல டெக்னீஷியனாக தமிழ் சினிமாவுக்கு, மேலை நாடுகளிலிருந்து, திரவியங்கள் கொண்டு வந்து சேர்த்தவர் அவர். ஒரு டெக்னிக்கை வேறு யாராவது செய்யட்டும், பொறுத்திருந்து அதன் வெற்றியை நாம் பயன்படுத்திக்கொள்வோம் என்றெண்ணாது, களத்தில் முன்னோடியாய் செல்பவர். பணமே பிரதானமான சினிமா எனும் படுகளத்தில் முன்வரிசை வீரனாக களம்புகுவதை என்னென்பது? அதுதான் ரசனை. நம்மாலும் ஆகும் என சக கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டியவர்.

2001ல் ஆளவந்தான் வந்தபோது எனக்கு 26 வயது. அப்போதுதான் பல ஆங்கிலப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டு பார்க்கத்துவங்கியிருந்தேன். அந்தப்படம் பல சிறப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், குறிப்பாக நந்து பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் கண்டு நீண்ட சிந்தனைக்குள்ளிருந்தேன். பிரமிப்பூட்டும் நந்துவின் கவிதைகள் தந்த த்ரில் இன்னும் நினைவிலுள்ளது. இன்னொரு விஷயமும் என்னை உறுத்திக்கொண்டிருந்தது. ‘கவனிச்சியா? உம்.?’ என என்னையே கேட்டுக்கொண்டிருந்தேன் பல தடவை. அதுநாள் வரை இரண்டு வேடங்கள் புனையப்பட்ட படங்களிலிருந்து அது முற்றிலும் வேறாக இருந்ததை யாரும் சொல்லாமலேயே கண்டுகொண்டேன். ஆனால், பிற்பாடுதான் அந்த நுட்பத்தின் பெயரை அறிந்துகொண்டேன். 

அது நாள் வரை இரண்டு கமல்ஹாசன்கள் வரும் காட்சிகளில் அசையாமல் நின்றுகொண்டிருந்த காமிரா, முதல் முறையாக, ‘மோஷன் கண்ட்ரோல்’ கணினி நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு கமல்ஹாசன்களைச் சுற்றி வந்தும், அவர்களோடு ஓடிப்பிடிக்கவும் செய்தது. சிறைக்கம்பிகளுக்கு இருபுறமும் இருவரும் அமர்ந்திருக்க, கைகள் கட்டப்பட்ட நிலையில், நந்து சிமெண்ட் காரையைப் பற்களால் கடித்து, விஜயை நோக்கித் துப்பிக் காயப்படுத்தும் காட்சி இன்னும் மனதில் நிற்கிறது. முன்னதாகவே ஜுராசிக் பார்க் படம் ஏற்படுத்திய தாக்கத்தில், கணினி வரைகலை பற்றி ஆர்வம் கொண்டு நிறைய வாசித்து வைத்திருந்தபடியால் பறக்கும் அந்தக் காரைத்துண்டும், விஜயின் நெற்றியில் ஏற்படும் ரத்தக்கீற்றும் CGI என கணிக்க முடிந்தாலும் விஜயின் பின்புறத்திலிருந்து, நந்துவின் தோளுக்குப் பின்பாக ஓடிவரும் காமிரா தந்த வியப்பு என்றைக்கும் மறக்காது.

குருதிப்புனல் எனும் பெயரைக்கேட்டதும்தான் இந்திரா பார்த்தசாரதியை அறிமுகம் செய்துகொள்ள நூலகத்துக்கு ஓடினேன். அப்போது எனக்கு 21 வயது இருக்கும். நூலக அலமாரிகளைத் துழாவி அந்தப் புத்தகத்தை எடுத்தது கூட நினைவிலுண்டு. அந்தக் கதைக்கும், படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனினும் வாசிப்பைத் தேடி ஓடவைத்தது கமல்ஹாசன்தான். அந்த வயதில் குருதிப்புனலின் கிளைமாக்ஸை ஏற்க முடியாமல் ஒரு நடிகனின் ரசிகனாக என் மனம் வாடியது. ஆனால் அப்போதே நான் நடிகனின் ரசிகனாக அல்லாது சினிமாவின் ரசிகனாக மாற தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.

எனது ஓவியக் கண்களை முதலும், கடைசியுமாக ஏமாற்றியது யார் என்றால் அது அவ்வை சண்முகி மட்டும்தான். விகடனின் அட்டைப்படத்தில் குறுக்காக (முன் பின் அட்டைகள் சேர்த்து) முழு தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது சண்முகியின் படம். யார் இந்தப் பெண்மணி? அதுவும் இப்படி அதிகமாய் மேக்கப் போட்டுகொண்டு? இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், இந்த விகடனுக்கு வேறு வேலை இல்லையா? என்றுதான் முதல் பார்வையில் நினைத்தேன். பின்பு அது கமல் என்று தெரியவந்தபோது புதியவற்றை முயற்சிக்கும் அவர் மீது பிரியம் வராமல் எப்படி இருக்கும்?

காந்தியார் என்பவர் இன்னொரு பள்ளிப்பாடம். வரலாறு சற்றே சோம்பல் தரும் விஷயமாகயிருந்தது. ஒரே நாளில்தானே விடுதலை கிடைத்தது, அதற்கும் முன்பாக ஒரே நாடாகத்தானே கூடியிருந்தோம்? ஏனிந்த தொடரும் பிரிவினைக் காட்சிகள், சண்டைகள் என சலிப்போடு பாகிஸ்தானைக் கவனித்ததோடு சரி, அதன் பின்னணியை தெரிந்துகொள்ள யாருக்கு நேரம்? அது யார் கதையோ? நமக்கென்ன?
அது நம் கதை. உனது, எனது கதை என்று எனக்குச் சொன்னவர் எந்த எழுத்தாளரும் இல்லை, கமல்ஹாசன்தான். வரலாற்றைத் தெரிந்துகொள்ளாதிருப்பதும் குற்றமே. ”வரலாற்றின் துயரங்களை மறந்தால், அதிலிருந்து பாடங்களை கற்க, ஏற்க மறுத்தால், அதை அனுபவித்து மீண்டும் அறிந்துகொள்ள அது மீண்டும் நிகழும்” என்றொரு எச்சரிக்கைச் சொல்லாடல் இருக்கிறது. ஹேராம்தான் என்னை ‘சத்திய சோதனை’யை வாசிக்கச் செய்தது என்றால் நம்புவீர்களா? காந்தியாரை, மகாத்மாவாகப் போற்றி ஒதுக்கி வைத்திடாதீர்கள் என கமல்ஹாசன் சொல்லும் போது முதலில் சற்றே அதிர்ந்து, பின்பு அவரும் நம்மில் ஒருவர்தான், அவரைப்போல நம்மாலும் சத்தியஜோதியாக ஒளிரமுடியும், அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்ற தொடர்ச்சியைக் கண்டுகொண்டு ஏற்றேன்.

ஹேராம் படத்தின் காட்சியழகு அதற்கு முன்போ, அதன் பின்போ தமிழில் இன்று வரை பார்த்திராத ஒன்று. அப்படி ஓர் ஓவியமாக அந்தப் படம் திகழ்ந்தது. அதிலும் எத்தனை முதல்கள் இருந்தனவோ தெரியாது, அதன் கலையும், பின்னணி இசையும் அதற்கு முன்பு பார்த்தோ, கேட்டோ அறியாதது. அந்நாளைய ஆனந்த விகடனை கமல்ஹாசன் மாடியறையில் படித்துக்கொண்டிருக்கும் போது, வீதியில் சென்ற பஜனைக்குழுவின் பாடலோசை சத்யம் திரையரங்குக்கு வெளியே கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது.

சுய எள்ளலும், நகைச்சுவையுணர்வுமே நம்மை முழுமையாக்குகிறது. தலையாயது அது. கமல்ஹாசன் அதிலும் தேர்ந்தவர் என்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்குண்டு.

“கேள்வி கேக்குறது சுலபம் மாமா. பதில் சொல்லிப்பாத்தாதான் தெரியும்..” என நாகேஷிடம் சிக்கிக்கொண்டு அல்லாடும் பஞ்சதந்திரம் ராமும், அவனது நண்பர்களும் என்றும் எனது ஃபேவரிட். மும்பை எக்ஸ்ப்ரஸெல்லாம் அவரது கவனிக்கப்படாத சாதனைகள் என்பேன். 
“பழிக்குப் பழி, புளிக்குப் புளி” என்று ஆவேசத்தோடும், பதற்றத்தோடும் கிளம்பும் காமேஸ்வரனை யார்தான் மறந்திருக்கமுடியும்?

”அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன் என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்..” என்கிறார் பாரதி.

பாரதிக்கு எப்படியோ.. கண்ணன் பாத்திரம் எமக்குக் கடவுளைக் குறிப்பதல்ல. காதலாம் உணர்வுகளை, அன்பை கற்பனை செய்தே மகிழ பொருத்தமாய் உருக்கொண்ட ஒரு கதாநாயகன் கண்ணன். அவன் காதலி மீரா.

”பின்னிருந்து வந்து எனை பம்பரமாய் சுழற்றி விட்டு உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்.. இங்கு பூலோகம் என்றொரு பொருளுள்ளதை இந்தப் பூங்கோதை மறந்தாளடி..” என்கிறார் கமல்.

கவிஞன்தான் இல்லையா? என் வாயோடு வாய் பதிக்கத்தகுந்தவன் எவன் என ஒரு பூங்கோதை சிந்தித்தால் எப்படி இருக்கும்? என் காதலன் லேசுப்பட்ட ஆளில்லையம்மா.. இந்த உலகையே உண்ட பெருவாய் கொண்டவன், அவன்தான் என் வாயில் முத்தமிடத் தகுந்தவன். என்பதுதான் எத்தனைப் பேறு. அதைச் சொல்லிக்கொள்வதில்தான் எத்தனைக் கர்வம் அந்தக் காதலிக்கு?

“நீ பார்த்த பார்வைக்கும், நமைச் சேர்த்த இரவுக்கும் நன்றி. அயராத இளமையும், அகலாத நினைவும் சொல்லும் நன்றி” என்கிறார் கமல். நான் கவிஞனில்லைதான். ஆனால் காதலிப்பவன்தானே, உணர்வுகள் ஒன்றுதானே! காதலிகள் தரும் உணர்வைத்தான் என்னென்பது? எத்தனை வீச்சைத்தான் அந்த வயதில் நமக்குள் ஏற்படுத்திவிடுகிறார்கள். இந்த ஆளும் என்னைப்போலவே காதலிக்கிறான்யா.. என்பதான உணர்வு அவர்மேல் அன்பைப் பெருக்காது என்ன செய்யும்?

பெரியாரைப் பிழையாமை என்றொரு குறளதிகாரம் உண்டு. எனக்கு மிகப்பிடித்தது. ஆற்றல் மிக்கோரை, மூத்தோரை, ஆசிரியரை மதித்து நடத்தல் குறித்தது அது. ஆசிரியர் எனில் அது பள்ளி ஆசிரியர் மட்டுமன்று, மிகச்சிறியதாயினும் ஒரு கருத்தை, ஒரு பொருளை நமக்குப் புரியவைத்த, ஒரு சிறு நுணுக்கத்தை கற்பித்த எவராயினும் அது பொருந்தும். பள்ளி, வாசிப்பு, டெக்னிகல் பணி, வாழ்வு என அனைத்திலும் நான் பார்த்துக் கற்ற, வியந்த மனிதர்களுக்கென்று ஒரு தனியிடம் என் மனதில் எப்போதும் உண்டு.

நேரில் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது எனக்கேற்படும் டெக்னிகல் சந்தேகங்களை கேட்டுத்தெளிய டெல்லியில் இருக்கும் நண்பனை நினைத்துப்பார்க்கிறேன்.

நேற்று, தமக்கு திருநெல்வேலி வட்டார வழக்கைக் கற்பித்த சுகாவாகட்டும், என்றோ குழந்தையாக தம்மை ஏற்றுக்கொண்ட அவ்வை டி.கே.சண்முகமாகட்டும் அவர் குருவாக ஏற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான நபர்களைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், முகம் மலர, அகம் மலர, “எனக்குக் கிடைச்ச குருமாரெல்லாம் அப்படியாப்பட்டவங்களாக்கும். அவர்களெல்லாம் சொல்லிக்கொடுத்தும் நான் இதைச் செய்யலைன்னாதான் ஆச்சரியம்..” என ஒரு குழந்தையைப் போல அவர் காட்டும் உற்சாகம் அழகானது. அந்த மரியாதை போற்றுதலுக்குரியது. ”சம்முகம் அண்ணாச்சி.. வின்செண்ட் மாஸ்டர்..” என்று வாய்நிறையத் துவங்கும் அவர் குரலிலேயே பணிவும், குழந்தைத்தனமான துள்ளலும் இருக்கும். விஸ்வரூபம் பட உருவாக்கக் காணொளி ஒன்றைக் காண நேர்ந்த போது, ’எப்போதோ எனில் பரவாயில்லை, இந்த 60 வயதைத்தாண்டிய வயதிலும், சாதனைகளை நிகழ்த்தி உயரத்தில் இருக்கும் போதும் இந்த மனிதனால் இது முடிகிறதா’ என வியக்க வைத்தார். ‘உன்னைக் காணாது..’ பாடலுக்கு நடனமைத்த அந்த நடனப் பண்டிதர், பிஜு மகராஜ் முதுமையால் நீண்ட நேரம் நிற்க இயலாது, ஒரு சோபாவில் அமர்ந்தபடி பாவனையை விளக்கிக்கொண்டிருக்க, தரையில் அமர்ந்தபடி, ஒரு காலை மடித்து ஒரு சிறுவனைப்போல ஆர்வத்துடன் பிஜுவின் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். கற்றலில் இதுவல்லவா அழகு என உவந்தேன். அந்தப் பாடலை திரையில் காண்கையில் என் கண்கள் தளும்பின. கதைச்சூழலில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சியோ, பாடலோ அதுவல்ல எனினும் ஏன் இந்த தளும்பல்? அதற்குப் பெயர்தான் நிறைவு.

நடிப்பு, ஆடல், இயக்கம், இசை, ஒப்பனை, எழுத்து, வாசிப்பு, கவிதை, கொள்கை என அனைத்துக்கும் அவருக்குக் கிடைத்த குருக்கள், நண்பர்கள் எல்லாம் லேசுப்பட்டவர்கள் இல்லை என்பது இன்னும் கூடுதல் சேதி.

சுய சிந்தனையும், சுய மரியாதையையும் கற்றுத்தந்த பெரியோரையும், அவர்தம் கொள்கைகளையும் காற்றிலே பறக்கவிட்டோம். அவர்தம் சீடர்தாமும் சூழலுக்காய் தம்மை மாற்றிக்கொண்டுவிட்டனர். கடவுளை மறுக்க, திரி தீர்ந்து மங்கிவிட்ட அறிவொளிச் சுடரை தூண்டிட கரங்கள் இல்லை. பேயாளும் அரசில், பிணம் தின்பது சாத்திரமாகிவிட்டது. தீச்சட்டி சுமந்து மொட்டையடித்து வேண்டுதல் நிறைவேற்றும் அமைச்சர்கள்தாம் நம் தலைவர்கள். மக்களரசின் நான்காம் தூண் ஊடகங்கள் என்ன செய்கின்றன என்றே புரியவில்லை. தலைக்கொரு கவர்ச்சிப்புத்தகத்தையும் போதாமைக்கு, தலைக்கொரு பக்திமலரையும் வெளியிடுகின்றன. பக்கங்களெங்கும் நட்சத்திரபலன்கள் எனும் புளுகுமூட்டைகள்தான். சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மகத்தான அறிவொளிப் பரவலுக்கு இதே ஊடகங்கள்தான் பெரும்பங்காற்றின என்பது இங்கே ஒரு நகைமுரண். காட்சி ஊடகங்களை விளம்பரப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது. எழுத்தாளர்களிலும் சத்தமாய் அறிவொளி பேசுவோர் இல்லை, நமக்கேன் வம்பு என்று. மீறிப்பேசுபவர்களின் முன்னால் இருக்கும் ஒலிபெருக்கி அணைக்கப்படுகிறது. யார்தான் ஐயா அதை உடைத்து வெளிவருவீர்கள்? யார்தான் ஐயா உரத்துப் பேசுவீர்கள்? யாரைத்தான் ஐயா நாங்கள் எதிர்பார்ப்பது? ஓரிருவராவது உள்ளீர்களா இல்லையா? சினிமாக்காரன் சொன்னாலாவது நாங்கள் உடனே காதுகொடுப்போம், ஆனால் அங்கும் ஆளில்லை.

இந்த விஷயத்திலும் ஊர் ஒதுக்கிவைத்த பிள்ளையாக, கருப்புச் சட்டை அணிந்த ஒற்றையாளாக கமல்ஹாசன் மட்டும்தான் இருக்கிறார். கஞ்சிக்கு வழியில்லாத ஊரில் பீட்சா கடை எதற்கு? நடிப்பெல்லாம் வேறு ஆள் பார்த்துக்கொள்ளட்டும். கொஞ்சம் கருப்புச்சிந்தனையை பரப்பும் தொழிலுக்கு வரமாட்டாரா இந்த ஆள்? என்று சில சமயம் எண்ணுவதுண்டு. அதுசரி, அவருக்குத் தெரிந்த தொழில் சினிமா, அதையாவது ஒழுங்காகச் செய்யட்டும். நமக்கு ஆளில்லை என்பதற்காக ஒருத்தரையே எவ்வளவுதான், எதற்குத்தான் எதிர்பார்ப்பது என்றில்லாமல் போய்விட்டது.

ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதுதான் எத்தனை அழகு, ரசனை மிக்க ஒன்று. ஆனால், பொருள் பிரதானமாகிப் போன வாழ்வினால் கல்யாணமெனும் ஒரு தளை கூடிப்போய்விட, அதனால் எத்தனை சிக்கலாக்கிவிட்டது இந்த வாழ்க்கை! சமயங்களில் அர்த்தமற்றதாகவும்!
அன்புதானே, நம்பிக்கைதானே நம்மைப் பிணைக்கவேண்டும்? ஒரு தாலியும், பத்திரப்பதிவுமா தீர்மானிக்க வேண்டும் நமது அன்பினை? இப்படியான கேள்விகளை உள்ளுக்குள்தான் வைத்துக்கொள்ள முடிகிறது இந்த இறுகிப்போய்விட்ட சூழலில்! அத்தனை உயரத்திலிருந்தும் குடும்பத்துக்காக, சூழலுக்காக என நிர்ப்பந்தங்களை உடைக்க இயலாமல் போய், அவர் செய்துகொண்ட திருமணங்கள் இறுதியில் உடைந்துதானே போயின? எல்லாவற்றையும் உதறி எழுந்து, மீண்டும் தன் முனைப்பில் கூடி வாழும் பேறு அவருக்கு அமைந்தது இன்னும் அழகு. சூழல், அவர் வாழ்வில் ஏற்றிவைத்த இன்னொரு திரு அது. இதிலிருந்து கற்கட்டும் இனிவரும் இளைய தலைமுறை அன்பால் கூடி வாழ்தலின் அருமையை, அழகை, ரசனையை!

நானெல்லாம் குணா காலத்துக்குப் பிறகுதான், அவ்வப்போது கலைசார் படங்களில் கமல்ஹாசன் நடிக்கத்தலைப்பட்டார் என வெகு நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், துவக்கத்திலிருந்தே தனக்குள்ளிருக்கும் ரசிகனுக்காகவும் படம் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறார் என்பதைப் பிறகுதான் அறிந்துகொண்டேன். 1977ல் நிற்க நேரமில்லாமல் கலர்ஃபுல்லாக பறந்துகொண்டிருந்தபோதே தப்புத்தாளங்களையும், வயநாடன் தம்பானையும் அவரால் பண்ணமுடிந்திருக்கிறது. அவர் கதாசிரியராக பணியாற்றிய படங்களில் பலவும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாகும். தேவர்மகன், ஹேராம், அன்பேசிவம், விருமாண்டி போன்றன மிகவும் குறிப்பிடத்தகுந்தவை.

கமல்ஹாசனை முந்திக்கொண்டு இன்றைய புதியதலைமுறை முன்செல்கிறது, அவர் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது உண்மையில் குற்றச்சாட்டு அல்ல, பாராட்டு. அவரே விரும்புவதும் அதைத்தான். என் திறன்மிக்க முன்னோர் போட்டுத்தந்த சாலையில் செல்லும் என் பயணம் அவர்களையும் விஞ்சியதாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். போலவே, புதிய தலைமுறை என்னையும் தாண்டித்தான்செல்வர், செல்ல வேண்டும் அதுவே உண்மையான வளர்ச்சி என்ற புரிதல் கொண்டவர் அவர். ஆகவே, இத்தனை மிக நீண்டகாலம் ஒரு முன்னேராக ஓடிக்கொண்டிருந்த சாதனை அவருடையது. அதை விஞ்சும் புதிய தலைமுறை மகிழ்வுக்கும், வரவேற்புக்கும் உரியது. அதோடு சலித்து ஓய்ந்திடாது, அவர்களோடும் முடிந்தவரை போட்டிக்களத்தில் நிற்பதால் கமல் இன்னும் மேம்பட்டுதான் நிற்கிறார் நம் மனதில்!

புதிய தலைமுறையுடன் இணைந்து பயணிக்க, குறிப்பாக புதிய இயக்குநர்களிடம் தம்மை ஒப்படைத்து இன்னும் தரமான படங்கள் தர கமல் முன்வரவேண்டும் என்பதாக ஒரு கருத்து உண்டு. இந்தக் கருத்தை சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், கமல் தன் ஈகோவை விட்டுத்தந்து அமீர், சசிகுமார் போன்றோருடன் இணைந்து பணியாற்ற வரவேண்டும் என்கிறார். அதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லையாயினும், ஐந்தே ஆண்டுகளில் அமீரும், சசிகுமாரும் எங்கு போனார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.

நம் சூழலில் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க, மகிழ, நெகிழ, கலங்க வைக்க எழுத்துகளால்தான் மட்டும்தான் முடியும். கி.ராவும், நாஞ்சில்நாடனும், ச.தமிழ்ச்செல்வனும் அந்த எழுத்துகளைத் தருகையில், அவர்களைச் சென்றடையும் பாதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இந்த சினிமாக்காரர்தான் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கேதும் தயக்கமில்லை. மேலும் அதே உணர்வுகளைத் தர தன் சினிமாவாலும் முடியும் என முயற்சித்துக் கொண்டிருப்பவரும் இந்த சினிமாக்காரர்தான். எழுத்துக்கான வாசகன் பூனையளவிலும், சினிமாவுக்கான பார்வையாளன் ஆனையளவிலும் இருக்கும் நம் சூழலில், இம்முயற்சியால் ஒரு எழுத்தாளரை விடவும் என் முன்னே இந்த சினிமாக்காரர், ஒரு படி மேலாகத்தான் நிற்கிறார்.

சகலகலாவல்லவனையும், காக்கிச்சட்டையையுமே அவர் பண்ணிக்கொண்டிருந்திருந்தால் இந்நேரம் கரையொதுங்கிப் போயிருப்பார். அஃதொன்றும் தவறில்லை, அது ஒரு தனிமனிதனின் விருப்பம். ஆனால், நான் எப்படி இருந்திருப்பேன் என்றுதான் தெரியவில்லை. வேலராமமூர்த்தியையும், வண்ணதாசனையும் யாரென்று எனக்குத் தெரிந்திருக்காது. அஜித், விஜய் படங்களுக்கு முதல் ஆளாய்ப் போய் விசிலடித்துக் கொண்டிருந்திருப்பேன். என் மனைவியை வேலைக்குப் போகச்சொல்லியோ, போகக்கூடாதென்று சொல்லியோ கட்டாயப்படுத்திக் கொண்டிருந்திருப்பேன். கூசாமல் லஞ்சம் தருபவனாக இருந்திருப்பேன், பதிலாக, எனக்கு ஏதும் லஞ்சம் கிடைக்க வழியுண்டா என ஆராய்ந்து கொண்டிருந்திருப்பேன். இந்த இஸ்லாமியர்கள் ஏன் எங்கு பார்த்தாலும் குண்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள், பேசாமல் அவர்களுக்கென ஒதுக்கித் தந்த நாட்டுக்குப் போய்விடவேண்டியதுதானே என சீரியஸாக சிந்திப்பதோடு மட்டுமல்லாமல், அதை ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் வாங்கியிருப்பேன். உச்சமாக, அருகில் மனைவியோ, ஒரு நண்பனோ டிவிடியில் ’லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்’ படத்தையோ, ;சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தையோ பார்த்துக்கொண்டிருக்கும்போது கொட்டாவி விடும் மாபாவத்தைச் செய்துகொண்டிருந்திருப்பேன். பாரதி சொன்ன வேடிக்கை மனிதனின் இலக்கணங்கள் என்னில் நிறைந்திருக்கும்..

ஆக, எனக்கு, கமல்ஹாசன் எனும் இந்த நிகழ்வு ஓர் அற்புதம்தான். இல்லையெனில் இந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாகிறது.

*  

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!