ஒரு நண்பர் என்றாலே பேசித்தான் ஆகணும். அதிலும் இதில் ஒன்றல்ல, இரண்டல்ல எனது மூன்று நண்பர்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
கேபிள் சங்கர்
விஜய் ஆம்ஸ்ட்ராங்
கார்க்கி பவா
மூவருமே தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பர்களாவர். மிக நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் இயக்குனராகும் தனது இலக்கை அடைந்திருக்கிறார் கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் படத்தின் மூலமாக. ஒளிப்பதிவாளராக விஜய் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இது ஐந்தாவது படம். உதவி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் தனது பங்களிப்பைச் செய்து திரையுலகில் நுழைந்திருக்கிறான் கார்க்கி. சினிமாவில் ஒரு நண்பர் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்தாலே ஓரமா நின்னு ஷூட்டிங் பார்க்கலாம். இதில் மூன்று பேர். கேட்கவும் வேண்டுமா? ஃபீல்டுக்குள் நிற்கிறோமா? வெளியே நிற்கிறோமா என்று தெரியாத அளவுக்கு கேமராவுக்கு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாயிற்று. ஷூட்டிங் மட்டுமல்லாது இயன்ற அளவுக்கு முற்தயாரிப்பு, பிற்தயாரிப்பு என பணிகள் என அனைத்தையும் பார்த்தேன். என்னவா? வேடிக்கைதான்!
ஒரு கட்டத்தில், “என்னபா எல்லாம் ஒழுங்கா போகுதா?” என்று தயாரிப்பாளர் ரேஞ்சுக்கு இவர்களை விசாரிக்காத குறைதான். :-))
பண்ணின இம்சைக்கெல்லாம் சேத்துவைச்சி நான் வெளியூரில் இருக்கும் சமயமாப் பார்த்து ப்ரிவியூ வைச்சு பழிவாங்கிட்டான்கள். :-((
ஆனால், ஒரு வகையில் அது நல்லதுதான். இந்தத் த்ரில் மிச்சமிருக்காது. அதோடு ஷூட்டிங், பிற்தயாரிப்பு, க்ளிப்பிங்ஸ்னு தலையும், வாலுமா பார்த்து பார்த்து, இப்போ படத்தை கதையோட்டத்துடன் முழுதாக திரையில் பார்க்க மிக ஆவலாக இருக்கிறது. முதல் பாதியில் கார்க்கியின் கலகல கவுண்டர் டயலாக் வசனங்களும், அழகான காதல் காட்சிகளுமாக இருக்கும் படம். தொடர்ந்து ஹீரோயின் சூழல் காரணமாக ஒரு சிக்கலில் வலியப் போய் மாட்டிக்கொண்டு தவிக்க, இரண்டாம் பாதியில் ஹீரோ அவரை மீட்கப்போராடும் ஆக்ஷன் காட்சிகளுமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு க்ளீன் எண்டர்டெயினருக்கு நான் கேரண்டி என்கிறார் கேபிள்சங்கர். ஆம்ஸ்ட்ராங் பாண்டிச்சேரியில் சேஸிங், ஆக்ஷன் காட்சிகளை ஹெலிகேம் உட்பட பல ஆங்கிள்களில் மிகச்சிரமத்துடன் படமாக்கியதை நேரில் பார்த்தேன். அவை படத்தில் எவ்வாறு வந்திருக்கின்றன என்று காணும் ஆவலும் உண்டு.
நாளை (23.01.15) ’தொட்டால் தொடரும்’ ரிலீஸாகும் இவ்வேளையில் அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்து மகிழ/ நண்பர்களை முயற்சியை ஆதரிக்க நினைவூட்டுகிறேன். விமர்சனம் செய்ய அனைவரும் பேனாவும் கையுமாகவோ, மொபைலும் ஃபேஸ்புக்குமாகவோ போனாலும் மகிழ்ச்சிதான். அந்த விஷயத்திலும் கேபிள் த்ரில்லிங்காக காத்துக்கொண்டுதான் இருப்பார் என நினைக்கிறேன்.
படம் பெருவெற்றியடைய நண்பர்கள் மூவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்!
.