Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

அரைக்காப்புடி டம்ளரும் அதீத அன்பும்

$
0
0

ராஜலிங்கம் எனும் ராஜு சித்தப்பா, என் அப்பாவுடன் பிறந்தவர் இல்லை. ஆனால், எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். அப்பாவுடன் பிறந்தவர்களுக்கோ, அம்மாவுடன் பிறந்தவர்களுக்கோ இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை அவருக்கு இல்லை என்பதால் இன்னும் நெருக்கம். எங்கள் குடும்பத்தில் ஆறு நபர்கள், அவர் குடும்பத்தில் ஐந்து நபர்கள். ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை இங்கிட்டு இருந்து அங்கிட்டு போனாலோ, அங்கிட்டு இருந்து இங்கிட்டு வந்தாலோ சேர்மாதேவிக்கும், கல்லூருக்கும் இடையே யாராவது ஒருத்தர், இன்னொருத்த‌ர் மீது மோதிக்கொள்ளத்தான் வேண்டும்.

அன்புத் தம்பியான‌ ராஜுவுக்குத் தெரியாமல் யாதொன்றும் செய்ப‌வராய் என் அப்பா இல்லை. 'மேல வயாவ‌க் கொடுத்துட்டு கிழக்கால கருங்கொளத்துப் பக்கமா ஒண்ணு வருது, அத வேங்கிர‌லாம்னு பாக்கேன் தம்பி'என்பது போன்ற முக்கிய விஷயமாக இருந்தாலும் சரி, 'நேத்து இப்பிடித்தாம் ரிமோட் கீழ உளுந்து சுச்சி அமுங்கிப்போச்சி'என்பது போன்ற சில்லறை விஷயமானாலும் சரி, ராஜு சித்தப்பாவின் காதுக்குப் போய்விடும். 'இந்த மோட்டரை கழத்தி போடணும் தம்பி, ஒயாம ஏர் வாங்கிட்டு கிடக்கிது கழுத, தண்ணி ஊத்தி முடியல..'என்பார். சித்த‌ப்பா மோட்டரை கழற்றி எடுத்து பழுதுநீக்கும் விற்பன்னரும் இல்லை, அதை வெளியே எடுத்துச்சென்று சரிபார்க்கப்போவதும் இல்லை, என்ற போதிலும்.

ராஜுவும், அண்ணாச்சியைக் கலக்காமல் வீட்டிலிருக்கும் கொசுவிரட்டியைக் கூட மாற்றமாட்டார். பிள்ளை எந்த காலெஜில் சேரவேண்டும் என்றாலும் அப்பாதான். வாழைக்கு என்ன உரத்தைப் போடணும் என்றாலும் அப்பாதான். 'தோட்டத்து மரத்துல புளிய இன்னைக்கு உலுப்பிறவா, இன்னும் ஒரு வாரம் செல்லட்டுமா?'என்றாலும் அப்பாதான். 


இந்த ஜோடியை விட ஒரு படி மேலான‌, இவர்களே தேவலாம் என்பது போல இருக்கும் இன்னொரு ஜோடி சித்தியும் என் அம்மாவும். 'என்னத்த மாயப்புளிக்கொழம்ப வைக்கப்போற, எடுத்து வைச்சிட்டு பேசாம இங்க வந்துரு.. வடக்க அயிர துள்ளுதாம். சீக்கிரமா வா, இல்லைனா நா ஒத்தையில ஆயணும். 4 மணி காருக்கு பிள்ளையளுக்கும் எடுத்துட்டுப் போயிரலாம்'என்பார் அம்மா. 'வடக்க அயிர துள்ளுதாம்'என்றால், எங்கள் ஊருக்கு வடக்கே உள்ள கருக்குளத்துக் கண்மாயில் அயிரை மீன் விழுந்துகொண்டிருக்கிறதாம், அதை வாங்கி வர ஆள் அனுப்பப்போகிறேன் என்று அர்த்தமாகும். 'உங்களுக்கென்ன நினைச்சா அயிரை மீன் சாப்பிடலாம்'என நகரவாழ் நண்பர்கள் சொல்லும்போது பெருமைக்காக நான், "ஊம்"கொட்டினாலும் உண்மை அதுவல்ல. கண்மாயில் அயிரை வருடம் பூராவும், தினமும் துள்ளிக்கொண்டிருப்பதில்லை. பொங்கல் சமயத்தில் குளம் நிரம்பி கண்மாய் ததும்பும் அரிய சில நாட்களில்தான் அயிரை துள்ளும். அதுவும் அயிரையே மனது வைத்தால்தான் நடக்கும். நாக்கு ஊற எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தால் கெண்டையும், கெழுத்தியும்தான் துள்ளும். பிறகென்ன.. புளிக்கொழம்புதான். அதனால் அயிரை துள்ளினால் அது எங்களுக்கும் மிக முக்கியமான விஷயம்தான்.

நாரத்தையில் ஊறுகா போட்டாலும், வெயிலில் காய்ந்து வத்தல் ஊற்றினாலும் அப்பணி இரு வீட்டார் கூட்டணியில்தான் நடக்கும். நீள்விடுமுறைக்கெல்லாம் காத்திராமல் சனி, ஞாயிறு என்றால் கூட நான் உட்பட்ட எங்கள் வீட்டு சிறுசுகள் அங்கு செல்வதும், அங்குள்ளவை இங்கு வருவதும் சகஜமான ஒன்று. நாளு, கிழமை எனில் பிள்ளைகளோடு பெரியவர்களும், 'திருநாறு'பூசி, அப்பா வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புதிய பத்து ரூபா கரன்சியை வாங்கிச்செல்ல வந்துவிடுவார்கள். இன்றைய நாளில் அது சிறியவர்களுக்கு ஐம்பது ரூபாய் எனவும், பெரியவர்களுக்கு நூறு ரூபாய் எனவும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நான் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக் கதை 15 வருடங்களுக்கு முற்பட்டதாம். 
 
இப்படியான சூழலில் ஒரு நாள், என் அம்மாவுக்கு கொல்லைப்புற அங்கணத்தில் கால் வழுக்கி, லேசாக பிடித்துக்கொண்டது. சுளுக்கு. வலது பாதத்தின் மேல்புற‌த்தில் சிறிய வீக்கம். 

பொதுவாக கிராமங்களில் என்று சொல்வதா? அல்லது எங்கள் குடும்பங்களில் என்று சொல்வதா? யாருக்காவது ஒரு சாதாரண காய்ச்சல், தலைவலி என ஒரு நாள் படுத்துவிட்டால் போதும், இருக்கும் நேரடி சொந்தம் தாண்டி, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சொந்தங்கள் வரை சுமார் நூறு பேராவது அதைப்பற்றி விசாரித்து அவர்களது துயரில் பங்கெடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. இப்போதும் கூட இது இருந்து வருகிறது எனினும் சற்றே எண்ணிக்கை குறைந்துவருகிறதாம். அவ்வமயம், இத்தனை பேரையும் வரவேற்று, காப்பித்தண்ணி கொடுத்து அந்த பாழாய்ப்போன காய்ச்சல் எப்படி வந்தது? அதனால் எப்படி தாம் அல்லலுற்றோம் என்பதையெல்லாம் கண்கள் கசியும் படி பாதிக்கப்பட்டவர், விசாரிக்க வந்தவருக்கு எடுத்துரைக்க வேண்டும். சமயங்களில் இத்தனை நீண்ட நிகழ்வைச் சமாளிப்பதற்கு, அந்த காய்ச்சலே எவ்வள‌வோ தேவலாம் போன்ற சூழலும் நிலவும். ஒரு சாதாரண காய்ச்சலுக்காக முதல் சில நாட்களுக்கு விசாரிக்க வருபவர்களின் எண்ணிக்கை குடும்பம், குடும்பமாக‌ 20, 30 நபர்கள் வரை சாதாரணமாக இருக்கும். இதுவே ஒரு ஆபரேஷன், விபத்து மீளல் போன்ற உயர்ரக நோவாக இருப்பின் எண்ணிக்கை நூறைத் தொடும். இவர்களை காலை 8 மணிக்கு ஆரம்பித்து, மணிக்கு இத்தனை பேர் என நாம் எதிர்கொள்ளத் தயாராகவேண்டும். நாள் பூராவும் காப்பியைப் போட்டவண்ணம் இருக்க வேண்டும். காப்பிப் போட்டே காய்ச்சலில் விழும் சூழலும்கூட‌ காப்பிப்போடுபவருக்கு நேரலாம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்து விடுபட்டுப்போன அத்தாளநல்லூர் தாத்தா பத்து நாள் கழித்து வந்து பார்க்கும் போது காய்ச்சலில் கிடந்த நபர், தோட்டத்தில் கோடரி கொண்டு விறகு உடைத்துக்கொண்டிருப்பார். அப்படியும், கோடரியை சற்றே கீழே வைத்துவிட்டு அந்தக் காய்ச்சலை நினைவுகூர வேண்டும். சற்றே ஓய்வெடுத்தாப்போலவும் ஆயிற்று, தாத்தாவுடன் அளவளாவியது போலவும் ஆயிற்று, காய்ச்சலை நினைவுகூர்ந்து கொஞ்சம் பரிதாபத்தை சம்பாதித்தது போலவும் ஆயிற்று.

நான் சொல்ல வந்தது இதைய‌ல்ல, இப்படியாக ஒருவர் காய்ச்சலில் விழுந்தால் அது எப்படி மற்றவரின் காதுகளுக்கு முதலில் போய்ச்சேருகிறது என்பதைத்தான். அதுதான் இந்தக் கட்டுரையின் பிரதான சர்ச்சைக்குரிய விஷயமாகிறது. கூர்ந்து நோக்குவோமேயானால் இதில் சில வகைகள் இருக்கின்றன. ஆபரேஷன், விபத்து போன்ற பேரிடர்கள் ஓரிருவருக்குச் சொல்லப்பட்டு, அது மின்னல் வேகத்தில் செவிவழிப் பரவலாக அனைவரையும் சென்ற‌டைந்துவிடும். இதில் ஆட்கள் விடுபட்டுப்போவது அபூர்வமே. அப்படியே விடுபட்டாலும் பெரிய பின்விளைவுகள் இருக்காது. இருப்பினும், துவக்க நாட்களின் பரபரப்பு குறைந்தவுடன், யாருக்கேனும் தகவல் எட்டாது போயிருக்குமா என்று சிந்தித்துப் பார்த்து விடுபட்டுப்போயிருந்தால் சொல்லிவிடுவது நல்லது.
  
நடுவாந்திர நோய்களான காய்ச்சல், பல்வலியால் பல் பிடுங்கப்பட்டு முகம் வீங்கிக் கிடத்தல் போன்றவற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள்தான் முழுப்பொறுப்பு. அவர்கள்தாம் ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் இத்தகைய சோகத் தகவல்களை சேர்ப்பிக்க வேண்டும். இதில் அசட்டையாக இருந்து, பிற்பாடு நேரக்கூடிய பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடக்கூடாது. அதுவும் முதல் தர நேரடி சொந்தங்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. சொல்லாமல் விட்டால் அவர்கள் நம்மால் அவமதிக்கப்பட்டதாகவும், சொன்னபிறகு அவர்கள் வந்து பார்க்காவிட்டால் அவர்களால் நாம் அவமதிக்கப்பட்டதாகவும் திரிபுகள் ஏற்பட வாய்ப்புகள் இங்கே பிரகாசமாக உள்ளன.

மூன்றாவது வகையானது சிறிய வகை நோய்களான சுளுக்கு, தலைவலி, வயிற்றுவலி போன்றன. இதை பெரும்பாலும் நாம் பிறருக்கு பரப்பவேண்டிய அவசியமிருக்காது. ஆயினும் சில சமயங்களில் சுளுக்கு, காலில் முள் குத்தியிருத்தல் போன்றன உடனடி குணம்பெறாமல் தத்திச்செல்லும் நிலையை நமக்கு ஏற்படுத்திவிடக் கூடியவை. தத்திச்செல்லும் நிலை வந்தாலோ, அல்லது இவை குணமாக ஓரிரு நாட்களை விடுத்து ஓரிரு வாரங்களை எடுத்துக்கொண்டாலோ இவை இரண்டாம் வகையைச்சேர்ந்த நோய்களாக பதவி உயர்வு பெறுகின்றன. ஆயின், அது பரப்பப்படவேண்டியது மிக இன்றியமையாததாகும். இதைக் கணிக்கத்தவறினாலோ, எந்த நாளில் இது இரண்டாம் கட்ட நோயாக மாறுகின்றன என்பதில் அசட்டையாக இருந்துவிட்டாலோ சிக்கல்தான்.

எம் அம்மாவின் வலது கால் சுளுக்கு, எங்களால் மிக மோசமான முறையில் அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது பரிதாபம்தான். முதலிரு நாட்கள் அம்மா நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தார். மூன்றாம் நாள் மெதுவே தத்தினார். நாங்கள் இந்த நோயை அறிந்துகொள்ளும் முன்னமே கண்களால் கண்டவர்கள், வாயினால் செய்தி பரப்ப.. அது தென்காசி பெரியத்தை காதுகளைக்கூட‌ எட்டிவிட்டது. மெல்ல மெல்ல பார்வையாளர்கள் வரத்துவங்கினர். அதிர்வடைந்த‌ நாங்கள் சுதாரித்துக்கொண்டு அந்த சுளுக்கை போர்க்கால நடவடிக்கை மூலமாக பாவூர்க்காரர் எனும் நீவுதல் நிபுணரை வீட்டுக்கே வரவைத்து, அரிய தைலங்கள் மூலமாக நீவி விட்டு அதை இருந்த இடம் தெரியாமல் போக்கடித்துவிட்டோம்.

ஆனாலும் ஐய்யகோ, ராஜலிங்கம் சித்தப்பாவின் காதுகளுக்கு இந்த தகவல் போய்ச்சேரவே இல்லை. சுமார் பத்து நாட்களுக்குப் பின்னர் அவருக்கு விஷயம் யாரோ மூன்றாம் மனிதர் மூலமாக தெரியவந்தபோது முதலில் ஆடிப்போய்விட்டார். மனது நொறுங்கிப்போய் விட்டது. அதுவே, சில‌ நாட்களுக்குள் தாம் அலட்சியமாக ஒதுக்கிவைக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தி கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திவிட்டது. விரோதம் வேர்பிடித்த வேம்புவைப்போல விடுவிடுவென வளரத்துவங்கிவிட்டது.  
 
'அட ஒண்ணுமில்ல தம்பி, ஒரு சின்ன சுளுக்குதான், இவதான் பிரமாதப்படுத்திட்டா.. நீ நாளை வரப்ப நாடார் கடையில் கருப்பட்டி இருந்தா வேங்கிட்டு வந்திரு.. இங்க இல்லங்காணுவோ'என அப்பா ஒரு சகஜ பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சமாதானம் தன்னைப்போல நிகழ்ந்திருக்கும். ராஜுவும், 'நாலு நாளா ஊர்ல இல்ல, மதுரைக்கு போயிருந்தேன் பாத்துகிடுங்க.. நமக்கு விஷயம் தெரியாம‌ போயிடுச்சி, ஆமா கருப்பட்டி கருப்பா வேங்கணுமா? எளசா வேங்கணுமா?'என பதில் சொல்லியிருப்பார். அப்பா அப்படி ஒரு போன்காலை செய்யவே இல்லை. 'அட, இப்ப என்னாச்சு எங்க போயிரப்போறான்?'என நினைத்தாரோ அல்லது, 'இவ இப்படி நடக்கமுடியாம கிடக்காளே.. விசயம் தெரிஞ்சா வந்து பாக்கிறதுக்கென்ன? தனியா சொல்லணுமாமா? மத்தவங்க‌ல்லாம் சொல்லியா வந்தாங்க'என நினைத்தாரோ எனக்குத் தெரியவில்லை.

ராஜு சித்தப்பாவாவது, இதுல சொல்லிவிட என்னயிருக்குனு ஒரு எட்டு வந்துட்டுப் போயிருக்கலாம். அல்லது, அந்த டாபிக்கையாவது மறந்திருக்கலாம். கதை நல்லபடியாக முடிந்து போயிருக்கும். மறந்து போக காலம் வாய்ப்பளிக்குமா என்ன! அடுத்த பத்தாவது நாளே சித்திக்கு விஷக்காய்ச்சல் வந்துவிட்டது. இது சொல்லவேண்டிய வகையைச் சேர்ந்த நோயாகும். பழிக்குப் பழி! எங்களுக்குத் தகவல் சொல்லாமல் விட்டுவிட்டார். அதற்கும் பெருந்தன்மையாக என் அப்பா போய்ப் பார்த்திருக்கக்கூடும். ஆனால், ஒண்ணத்துக்கும் உதவாத உதவாக்கறை எங்கப்பாவோட கடைசி தம்பி எனது சொந்த சித்தப்பா கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வருகிறது, ஆனால் எங்களுக்கு தகவல் இல்லையாம். என்ன அநீதி!

போச்சு! பனிப்போர் வீரியமாகிக்கொண்டே சென்றது. வாரங்கள் மாதங்களாகின. என் அப்பா பைக்கிலிருந்து விழுந்து கைபிசகிக்கொண்ட பேரிடர் வந்தது ஒருநாள். அதற்கு ராஜுவுக்கு தகவல் மறுக்கப்பட்டது. மாதங்கள் வருடங்களாகின. மூத்த பொண்ணு லலிதாவுக்கு பையனே பார்க்க ஆரம்பித்துவிட்டார் ராஜு சித்தப்பா, அப்பாவை சட்டை செய்யாமல். முடிந்தது. இப்போது வருடங்கள் டிகேட்ஸ் ஆகிவிட்டன. கல்யாணம், காய்ச்சி என விசேஷம் மட்டுமல்ல, மண்ணின் பாரம்பரிய மரியாதையான 'எதிரியானாலும் சாவுக்குப் போவணும்யா'என்பதையும் தாண்டி இருபுறமும் பெருசுகள் மண்டையைப் போட்டதற்கும் அழைப்போ, விசாரணையோ இல்லாது போய்விட்டது.

இப்பவும், அப்பாவைக் கேட்டால், 'பொண்ணுக்க கல்யாணத்துக்கு பத்திரிக்க வைச்சானா அவன்? அந்தப் புள்ள பொறந்தப்ப முதல்ல கையில வேங்குனவன் நான்'எனும் கோபம்தான் கொப்பளிக்கிறது. போலவே, ராஜு சித்தப்பாவுக்கும், 'என்னப் பெத்த தாயி மாதிரி நினச்சிருந்தனே, பெரியாயா சாவுக்கு தகவல் வந்துச்சா எனக்கு?'என‌ப் பொங்க கதைகள் நிறைய இருக்கும். 

ஒண்ணு மட்டும் எனக்கு தெரியும், அரைக்காப்புடி டம்ளரை அங்கணத்துல இருந்து எடுக்கக்குனிஞ்சதால‌ என் அம்மாவுக்கு ஏற்பட்ட அந்த‌ சுளுக்கு மட்டும் ரெண்டு பேருக்கும் நிச்சயம் மறந்துபோயிருக்கும்! 

.

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!