சில நாட்களுக்கு முன்பாக கேகே நகரின் ஒரு தெருவைக் கடந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு வாசனை என்னைத் தாக்கியது. சரிதான், தாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நிமிடம் சர்வமும் ஆடிப்போய்விட்டேன். சட்டென எங்கெங்கோ அலைபாய்ந்த என் நினைவு, மூளையின் எங்கோ ஒரு அடிமூலையில் பதிந்து கிடந்த ‘அந்த வாசனை எதனுடையது?’ என்ற தகவலைத் தேடியலைந்தது. கூகுள் தேடுபொறி சில மைக்ரோ விநாடிகளுக்குள் கிடைக்கவில்லை எனில் நாம் தேடும் பொருளை, ’அப்படியோன்று இல்லை’ என்று சொல்லிவிடும். அப்படி எல்லாம் தளர்ந்துவிடாமல் எந்தெந்த உணவுகளோடெல்லாமோ மின்னல் வேகத்தில் ஒரு ஒப்பீட்டை நிகழ்த்திக்கொண்டிருந்தது என் நினைவு. சுமார் முப்பது முழு விநாடிகள் போராடி அந்தப்பொருளை மீட்டெடுத்தேன். மகிழ்ச்சியும், துக்கமும் பெருக்கெடுக்கும் ஒரு கணம்.
பூரிக்கிழங்கு எனப்படும் எளிய காலை உணவின் ஒரு பகுதியான கிழங்குதான் அது.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னால், என்னுடைய பத்து, பன்னிரண்டு வயதில், அம்பாசமுத்திரத்தில் ஏதோ ஒரு சிறிய கடையில் என் அப்பா வாங்கித் தந்த பூரிக்கிழங்கின் வாசனைதான் அது. அதன்பின் அந்த வாசனையை, அந்தக் கிழங்கை என் வாழ்க்கையில் நான் எங்குமே சந்தித்திருக்கவில்லை. எப்படியான இழப்பு இது? இனியும் அதற்கு நான் எங்கே போவது? ஒரு நிமிடம், என்ன வாழ்க்கை இது என்றாகிவிட்டது எனக்கு.
சமயங்களில் நானும், ரமாவும் ஆதர்ஸ நண்பர்களைப் போலவும் பழகிக்கொள்வதுண்டு. (அதென்ன ஆதர்ச நண்பர்கள்? ஆதர்ச தம்பதி இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.)
இன்றும் சமையலுக்கு பூண்டு உரித்துக்கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நினைவுக்கு வர, ரமாவிடம் சொன்னேன். கூடவே,
”அதே உருளைக்கிழங்குதான், அதே மசாலாப்பொருட்கள்தானே.. என் அம்மா செய்வதும் அப்படியில்லை, நீ செய்வதும் அப்படியில்லை. அதன்பின் அப்படியொரு கிழங்கை யாருமே என் வாழ்க்கையில் செய்து தரவில்லை.? ஏன் அப்படி?” என்றேன்.
“அதே மாதிரி கை, கால்தான் எங்களுக்கும் இருக்கு. என்னாலயோ, உங்கம்மாவாலயோ பரதநாட்டியம் ஆடமுடியுமா?”
யோசிக்காமல் சட்டென சொன்னாள். என் மாமனாருக்குத்தான் கொஞ்சம் சமத்து பத்தாது, இவளை வக்கீலுக்குப் படிக்க வைத்திருக்கலாம்.
*****
வெஜ், நான் வெஜ் விபரங்களை விளக்கிக்கொண்டிருந்தேன் சுபாவிடம்.
”நான் வெஜ்னா என்னனு சொல்லு பாப்பம்?”
“சிக்கன், மட்டன், ஃபிஷ், முட்டை”
“வெரிகுட். அதோட முயல், நண்டு..”
“முயலா.. அது கடிக்காதா? அத எப்படி சாப்பிடமுடியும்? ஹிஹி!” (முட்டையெல்லாம் ஏதோ மைதா மாவில் செய்த உணவுப்பண்டம் என்று நினைத்திருப்பான் போலும்)
“சரி அதவிடு, வெஜிடேரியன்னா என்னான்னு சொல்லு..”
ரொம்ப கஷ்டமான கேள்வி மாதிரி ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அடச்சே, இது கூட பிள்ளைக்குத் தெரியலையே, என்ன சொல்லிக்கொடுக்கிறோம் நாம்னு சலித்துக்கொண்டு பதில் சொல்ல வாயைத்திறப்பதற்குள், பதிலைப் பிடித்துவிட்டவன் போல,
“ஆங்.. கோயிலுக்குப் போகும்போது இப்படி இப்படி (காற்றில் வரைந்து காண்பித்து) ஒரு குட்டி இலை குடுப்பாங்களே.. அது!”
குட்டி இலையா, கோயில்லையா, குட்டி இலைல குடுக்குற சர்க்கரைப்பொங்கலா இருக்குமோ?
“பொங்கல் இல்லைப்பா, குட்டி இலைப்பா.. என்னப்பா நீங்க?”
அப்புறம்தான் பிடித்தேன்.
அது துளசி! தெய்வீகத்துக்கும், வெஜிடேரியனுக்கும் எப்படி தொடர்பு கிடைக்கிறது பார்த்தீர்களா? Be வெஜிடேரியன்!
*****
புத்தகமும் படிக்காமல், இணையத்திலும் மேயாமல், டிவியையும் போடாமல் இன்று மதிய உணவுக்குப் (மோர்க்குழம்பும், உருளைப் பொரியலும்) பின்பு படுக்கையில் படுத்து சோம்பேறியாய் உருண்டு கொண்டிருந்தேன். கூட கம்பெனிக்கு, சுபாவும்.
நாக்கு கொறிக்க ஏதாச்சும் கேட்டது. ரமா அருகில் வந்ததும்,
“ஏதாச்சும் பண்டம் செஞ்சி தரலாம்லம்மா..” (பண்டம் என்றால் பொருள் என்று பொருள்பட்டாலும், நெல்லை வழக்கில் இனிப்புத்தின்பண்டம் என்பதே பொருளாம்.)
“பண்டமா?”
”அந்தக் காலத்துலல்லாம் வீட்ல செய்ற மாதிரி, இப்போ வீட்ல செய்யக்கூடாதுனு சட்டம் ஏதும் போட்டிருக்காங்களா? அதிரசம், தேன்குழல் இப்படி ஏதாவது செய்யலாம்ல..”
”தேன்குழல்னா முறுக்குங்க, பண்டம் இல்ல”
“ஓகோ, எனக்குத் தெரியும், உனக்குத் தெரியுதானு பாத்தேன். சரி, அதிரசம், உம்.. ம்ம்ம்.. (அவசரத்துக்கு ஒண்ணும் ஞாபகம் வந்து தொலைக்காது).. ஆங்.. முந்திரி கொத்து, சுசியம், பொரிவிளங்கா உருண்டை இப்படி ஏதாச்சும்.. அதெல்லாம் மறந்தே போச்சு”
“ஆமா, நீங்க பெட்ல படுத்து உருண்டுகிட்டு கிடங்க.. நான் ட்ரஸ்ஸ மாத்திகிட்டு கடைக்குப் போய், மாவு, மண்ணாங்கட்டி இதெல்லாம் வாங்கிட்டு வந்து, கரைச்சு, அரைச்சு, குனிஞ்சி, நிமிந்து, நெய் விக்கிற விலையில அதை வம்பாக்கி, அடுப்புக்குள்ள அரைமணி நேரம் உக்காந்து, வெந்து வேக்காடாகி எதையாச்சும் செஞ்சி எடுத்துகிட்டு வந்தா ஒண்ணே ஒண்ணை எடுத்து எலி கரும்புன மாதிரி கரும்பிட்டு.. நாளைய இயக்குனர்ல சுந்தர் சி சொல்றமாதிரி, இது சுமார், அது நல்லால்லனு சொல்லிட்டு அப்படியே போட்டுருவீங்க.. எனக்கு இதெல்லாம் தேவையா?”
நான் இப்ப அப்படி என்ன கேட்டுட்டேன்? அவ்வ்வ்வ்!!
*****