சில மாதங்களுக்கு முன்னால் ‘மேக்னம் ஸ்பெஷல்’ எனும் ஒரு கட்டுரையில் முத்து-லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் 30ம் ஆண்டுக் கொண்டாட்டமாக ’தி மேக்னம் ஸ்பெஷல்’ எனும் பெயரில் ஒரு மெகா இதழ் வெளியாகவிருக்கிறது, முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என நினைவூட்டியிருந்தேன்.
எதிர்பார்ப்புகளை விஞ்சும் வண்ணம், இரு தினங்களுக்கு முன்பாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் அவ்விதழ் வெளியாகிவிட்டது. 550 ரூபாய் விலையுள்ள அந்த இரட்டை இதழ்கள் ஒரு விலைமதிப்பில்லா ஓவிய விருந்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஹார்ட் பவுண்ட் அட்டை, வழவழப்பான ஆர்ட் பேப்பர், முழு வண்ணத்தில் 6 காமிக்ஸ் கதைகள், தரமான பேப்பரில் மேலும் 3 கறுப்பு வெள்ளைக் கதைகள் என மொத்தத்தில் 900+ பக்கங்களில் அட்டகாசமான சிறப்பிதழ்களாக மலர்ந்திருக்கின்றன. முந்தைய மோசமான முன்னனுபவம் காரணமாக, குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்களைப் பதிப்பிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறது லயன் நிறுவனம். ஆக, இந்த சிறப்பிதழை ஏறத்தாழ ஒரு எடிட்டர்ஸ் கலக்ஷன் என்றே குறிப்பிடலாம். முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து எஞ்சிய இதழ்கள் எந்நேரமும் விற்பனையாகிப்போகலாம். ஆகவே, உங்கள் காப்பியைப் பெற்றுக்கொள்ள முனைப்போடு விரையுங்கள்.
தமிழில் காமிக்ஸ் ரசிகர்களின் வட்டம் மிகச்சிறிதாயினும், அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் காமிக்ஸை கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டின் ரசிகர்களுக்கும் குறைந்ததல்ல. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய காமிக்ஸ்களின் மொழியாக்கமாகவே நமது முத்து-லயன் வெளியீடுகள் பெரும்பாலும் அமைகின்றன. ஆனால் அந்த நாட்டு ரசிகர்களே கூட கண்டிராத அளவுகளில், தரத்தில் தொகுப்புகளை நமக்கு சாத்தியமாக்கியிருக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் திரு. விஜயனுக்கு இந்நேரத்தில் நமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்துகொள்கிறேன்.
விதம் விதமான கதைகளங்களில் காமிக்ஸ்கள் வெளியாகும் சூழலிலும், ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இருக்கும் இடமே தனிதான். சிறு வயதில் காமிக்ஸ்களை வாசித்து பின்பு கடந்து வந்துவிட்ட வாசகர்களுக்கும் கூட இன்றும் கேப்டன் டைகர், ரேஞ்சர் டெக்ஸ் வில்லர் போன்ற கதாபாத்திரங்கள் நினைவில் நீங்காமலிருக்கும். ’தி மேக்னம் ஸ்பெஷலை’ ஏறத்தாழ ஒரு கலக்டர்’ஸ் ஸ்பெஷல் என வர்ணித்தேன்.. ஆனால் வெகு விரைவில் கேப்டன் டைகர் தோன்றும் ’மின்னும் மரணம்’ எனும் ஒரு காமிக்ஸ் கதை 500+ வண்ணப்பக்கங்களில் ஒரு பெரிய தொகுப்பாக, ஒரு நிஜமான கலக்டர்ஸ் ஸ்பெஷலாக மலரவிருக்கிறது. இத்தொகுப்பு முன்பதிவு செய்யாதவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே (ஒருவேளை கொஞ்ச எண்ணிக்கை ஜனவரி சென்னை புக்ஃபேரில் கிடைக்க வாய்ப்பிருக்கலாம். எதுவும் உறுதியில்லை!) என்பதால் விருப்பம் கொண்டோர் அனைவரும் தவறாமல் கீழ்க்காணும் வழிமுறையில் முன்பதிவு செய்துகொள்ளுகள். காமிக்ஸ் ரசிகர்கள், ஓவிய விருப்பம் கொண்டோருக்குச் இதை நான் சொல்லத்தேவையில்லை, தவிர்த்த பிறரும் காமிக்ஸின் மகத்துவத்தை உணரவேண்டும் என்பது என் பேரவா. இளம் சிறார்க்கும், அடுத்த தலைமுறைக்கும் வாசிக்கும் வழக்கம் குறைந்துவருகிறது என வெறுமனே குறைகண்டு புலம்பிக்கொண்டு மட்டுமே இருப்பவர்கள் புலம்பல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், காமிக்ஸின் மூலமாக தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரிடையே வாசிப்பை ஏற்படுத்த முயலலாம். அவர்களின் ஆதரவும் இதுபோன்ற தமிழ்ச்சூழலிலும் காமிக்ஸ் சாதனைகள் நிகழ உறுதுணையாக அமையும்.
காமிக்ஸ் ஆர்வலர்களின் பெருக்கம் என்பது உண்மையில் ரசனையான சூழலின் பெருக்கமாகும்! ஒரு லக்கிலூக் புத்தகம், லட்சம் பிரதிகள் அச்சாகும் ஒரு நாள் வரவேண்டும்... கனவுதான், கண்டு வைக்கிறேன்.. காசா பணமா?
*******
மேக்னம் ஸ்பெஷலைப் பெறவும்,
மின்னும் மரணம் முன்பதிவுக்கு அணுகவும்..
ரெகுலர் சந்தா, நேரடி வங்கிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட இதழ்களைப் பெறவோ, ரெகுலர் சந்தாதாரராக இணையவோ கீழ்க்கண்ட கூப்பனிலுள்ள வங்கி எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
*