இது கடைக்குப் போய் கோழி முட்டை வாங்குவது பற்றிய பதிவு அல்ல. அதிலும் கூட சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன எனினும் இப்போது நாம் பேசவிருப்பது பரீட்சையில் முட்டை வாங்குவது பற்றி.
ரமாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது எப்படியோ பரீட்சையில் மார்க்குகள் எடுப்பதைப்பற்றி பேச்சு திசைதிரும்பியது. நான் ஏதோ வாய்க்கு வந்ததைப் புளுகி வைக்க..
‘சும்மா புளுவாதீங்க.. 100 மார்க்ஸ் எடுக்குதது எவ்ளோ கஷ்டம் தெரிமா? மத்த பாடத்தை விடுங்க, கணக்குல கூட விடிய விடிய படிச்சிட்டுப் போய் எழுதி, எல்லாஞ் சரியா எழுதிட்டு ஒரே ஒரு கணக்குல ஒரே ஒரு ஈக்கோல்ட்டு போடலன்னாக் கூட ஒரு மார்க்கு போயிரும். எவ்ளவு வயித்தெரிச்சலா இருக்கும் தெரிமா?’ என்றைக்கோ வாங்கின 99 மார்க் இப்போது ஞாபகம் வந்து கொஞ்சம் நிஜமாகவே ஃபீல் பண்ணினார் ரமா.
நமக்கெங்க அந்த ஃபீலிங்க்லாம்.? 34 மார்க்கு வாங்கிவிட்டு, ‘படுபாவி, கூட ஒத்த மார்க்கு போட அவனுக்கு என்ன கொள்ளை?’ என்றுதான் பல தடவைகள் ஃபீல் பண்ணியிருக்கிறோம். ஆனால் அதையெல்லாமா ரமாவிடம் சொல்லமுடியும்? அப்புறம் நம்ம ப்ரஸ்டீஜ் என்னாகுறது? அதனால்தான் இரண்டாவது பாராவில், ‘நூறு மார்க்கு வேங்குறதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணமாக்கும்’ என்று புளுகிவைத்ததே.
ரமா பொதுவாக எல்லாப் பாடங்களிலும் 90க்கு மேல் எடுப்பவர் போலிருக்கிறது. இருந்தாலும் அவர் பேசியதைக் கேட்டுவிட்டு சும்மா போனால் நல்லாவா இருக்கும்? அவர் பேசுவதற்கு ஏறுக்கு மாறாக பேசினால்தானே ஒரு நிம்மதி கிடைக்கிறது.
‘90க்கு மேல எடுக்குறதுக்குல்லாம் என்ன கஷ்டம் வேண்டிகிடக்கு? முத நாளு உக்காந்து கொஞ்சம் படிச்சாலே போதும். ஆனா முட்டை எடுக்குறதுதான் கஷ்டம்..’
வழக்கம் போல கிக்கீகிக்கீ என்று சிரித்துவிட்டு, ‘முட்டை எடுக்குததுக்கு எதுக்கு கஷ்டம்? ஒண்ணும் எழுதாம பேப்பரக் குடுத்துட்டு வந்தாதான் முட்டை வேங்கிறலாமே?’ என்றார்.
’அதென்ன அப்பிடி சாதாரணமா சொல்லிட்ட? என் பிரண்டு ஒருத்தன் இருக்கான். அவன் சொல்லுவான்.. 3 மணி நேரம் உக்காந்துட்டு பேப்பரை சும்மாக் குடுக்கமுடியுமா? சூப்பர்வைசிங் பண்ணுவாங்கல்ல, சும்மா நேரத்தப் போக்க கொஸ்டின் பேப்பரப் பாத்து கேள்வியவே அப்படியே ஆன்ஸர் ஷீட்ல எழுதுனாக்கூட பாவம் பாத்து ரெண்டு, மூணு மார்க்கு போட்டுருவாங்க.. அதாவது பரவால்ல, கிளாஸ்ல திருத்துன பேப்பரக் குடுக்கும்போது முட்டை வேங்கியிருந்தா எப்பிடியிருக்கும்னு நினைச்சுப்பாரு? மானம், மரியாத, சூடு, சொரணை ஒண்ணும் இருக்கக்கூடாது. ரேங்க் கார்டுல வீட்ல கையெழுத்து வாங்குறத நினைச்சுப் பாரு.. வாரியப்பூசை வேங்கணும். அதெல்லாம் எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’
சீரியஸாப் பேசும் போது சிரிப்பதும், ஜோக் சொல்லும்போது சீரியஸா திங்க் பண்ணுவதும் ரமாவின் ஸ்பெஷாலிடி. ‘அட ஆமால்ல..’ என்று முட்டை வாங்குபவர்களுக்காக கொஞ்ச நேரம் அனுதாபப்பட்டுவிட்டு என்னைப் பார்த்தார். பொதுவாக எதையும் சொல்றப்போ நாம் சீரியஸாக சொல்வதில்லை எனினும் இந்த ‘முட்டை’ விஷயத்தை கொஞ்சம் பழைய விஷயங்கள் நினைவிலாட உணர்வுப்பூர்வமாக சொன்னதாலோ என்னவோ நாத்தழுதழுத்துவிட்டது என நினைக்கிறேன். அதை சில விநாடிகள் தாமதமானாலும் கண்டுகொண்டுவிட்டார்.
‘ஏங்க, புளுவாதீங்க.. நீங்கதான முட்டை முட்டையா வேங்குனது?’ கிக்கீகிக்கீயென சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.