ஒரு பெரிய கிரியேடிவ் ஐகானுடைய பெயரைத் தாங்கிய இந்தப் படத்துக்கும், கிரியேடிவிடிக்கும் இடைப்பட்ட தூரம் பல கிலோமீட்டர்கள். தெனாலியின் சமயோஜித குணத்துக்கு சான்றாக இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாமே குறைந்தபட்சம் 60 வருடங்கள் பழைய நாம் நன்கறிந்த அதே செவிவழிக் கதைகள்தாம். முதலில் 30 வருடங்கள் பழமையான என்று எழுத நினைத்தேன். இதை எழுதும் போது உடனிருந்த என் தந்தையிடம் கேட்டபோது, 'இது நான் சின்னப் புள்ளையா இருக்கும்போதே படிச்சதுதான்'என்று அவர் சொன்னதால் 60 ஆண்டுகள் என்று எழுதியிருக்கிறேன். அவ்வளவு கற்பனை வறட்சி!
பசியிலிருக்கும் வடிவேலு எனும் யானைக்கு இது சோளப்பொறி கூட அல்ல! எழுதி, இயக்கிய இயக்குனரை என்ன செய்தால் தகும்? அவ்வளவு மோசமான திரைக்கதை. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் என புலிகேசியின் வார்ப்பாகவே பல விஷயங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தெனாலியின் உடல்மொழி கூட! ஆனால் புலிகேசிக்கும், தெனாலிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட மன்னனாகவும், பொறுப்பில்லாத காமெடி மன்னனாகவும் இருவேறாக இருக்கிறது இதன் மன்னர் பாத்திரம். ஒரு முக்கியக் காட்சியில் மக்கள் நலன் காண மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் கூட அது சீரியஸாக இருக்கவேண்டுமா, நகைச்சுவையாக இருக்கவேண்டுமா எனப்புரியாது சிதைக்கப்பட்டிருக்கிறது.
யானைக்குள் பானை, கசையடிப் பரிசு என அதே பழைய நிகழ்வுகள் தாண்டி எதையும் நிகழ்த்தாமல் எளிதாக பரிதாபமாக தோற்கிறது தெனாலியின் பாத்திரம். தற்காலிக மன்னர் பொறுப்பு தெனாலிராமனுக்குக் கிடைத்த பின்பும் மக்களே கொதிப்படைந்து சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே, அதாவது கடைகளையும், சீன மக்களையும் தாக்குவதாகவே சிறுபிள்ளைத்தனமாக முடிகிறது. அமைச்சர்கள், சீன வியாபாரிகள், போராளிகள், ராதாரவியின் கதாபாத்திரம், ஹீரோயின் என எந்த ஒரு கேரக்டரும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏதேனும் நிகழ்வுகள் இருந்தாலல்லவா பாதிப்பு எனும் பேச்சு எழுவதற்கு?
இவ்வளவு வீக்கான படத்தை வடிவேலு மட்டுமே தன்னந்தனியாக தாங்குகிறார். பாராட்ட வடிவேலுவைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை, இந்தப் படத்தில்!