பாலாவின் படங்கள் மீதான நம் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து ’அவன்-இவனு’க்குப் பிறகு இல்லாமலே போய்விட்டது என்றும் சொல்லலாம். விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளைப் பதிவு செய்வது என்பது இங்கு வேறெவருமில்லாத நிலையில் வரவேற்கப்படவேண்டிய விஷயமெனினும் பாலாவின் தொனியும், அவர் முக்கியத்துவம் தரும் காட்சிகளும் வெற்று அதிர்ச்சியை மட்டுமே தரக்கூடியதாக இதுவரை இருந்திருக்கின்றன. அவ்வாறான சூழலில் பரதேசியின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஆனால் ’பரதேசி’யைப் பார்த்த பின்பு அவரளவில், அவரால் இயன்றதை பொறுப்புடன் செய்திருக்கிறார், அவரது வழியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தோன்றுகிறது எனக்கு. இன்னும் சொல்வதனால் பாலாவின் படங்களுள் இதுவே சிறப்பான ஒன்றெனவும் எண்ணுகிறேன்.
ஒரு வரலாற்றுப் பதிவு. அதுவும் நமது அல்லது நம்மில் ஒரு சாராரின் அடிமைத்தனத்தை, தோல்வியை, நாம் பேச விரும்பாத ஒரு பொருளைப் பதிவு செய்யும் முயற்சி. அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு கதைக்களம். இதைப்போன்ற விஷயங்கள் முற்றிலும் கசடற செய்யப்படவேண்டும். அது இயலாதெனின் அந்தப் படைப்பாளி ‘அலெக்ஸ் பாண்டியன்’ வகைப் படங்களையே செய்யப்போய்விடலாம், அதில் ஆபத்துக்குறைவு. ஆக, பாலா கசடற இதைச்செய்திருக்கிறாரா என்று கேட்டால் பதில் சொல்ல சற்றே தயக்கமாக இருக்கிறது. ஆயினும் இத்தகையக கதைக்களங்களை, நகர்வைக் கைக்கொள்ளும் முயற்சிகளைச் செய்ய இங்கே படைப்பாளிகளே இல்லாத போது, பாலாவை நாம் வரவேற்றே ஆகவேண்டும். சற்றே குறைகளுள்ள முதல் படி எனினும் அடுத்த படியேற, இந்த இயக்கம் அவராலோ, சம காலத்திய படைப்பாளிகளாலேயோ தொடர்ந்து கொண்டு செல்லப்பட இந்தப் படி மிக அவசியமாகிறது. அந்த வகையில் பாலாவையும், அவரது பரதேசியையும் பாராட்டி வரவேற்கிறேன்.
’எரியும் பனிக்காடு’, நாவல் என்ற பெயரிலான ஒரு வரலாற்று ஆவணம். அதையும், ஒரு சாதாரண சினிமாவையும் ஒப்பிடுவதே ஒரு வகையில் தவறுதான். இரு வேறு வடிவங்கள் கொள்ளும் படைப்புகளை ஒப்பிடுவது சரியா என்ற விவாதத்துக்குள் எல்லாம் போக நான் விரும்பவில்லை எனினும் சினிமாவுக்கும், பிற தளங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களை மட்டுமாவது நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் இடலாக்குடி ராசாவுக்கும், பரதேசி ராசாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இடலாக்குடி ராசாவைப் பிடித்திருந்ததால், பாலா தனது ராசாவுக்கும் இடலாக்குடிக்காரனைப் போலவே ஒப்பனை செய்து அழகு பார்த்திருக்கிறார் அவ்வளவே.
1939ன் சாலூர் எனும் தமிழகக் கிராமம். கிராமத்தின் இயல்பும், அதன் மனிதர்களும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அதில் ராசா எனும் நம் கதை நாயகனும் ஒருவன். ஒரு தேயிலைத்தோட்ட கங்காணியின் (Supervisor) பொய் வார்த்தைகளை நம்பி பிழைப்புக்காக, கிட்டத்தட்ட அந்தக் கிராமமே, காத்திருப்பது மீள முடியாத கொத்தடிமை வாழ்வு என்பதை அறியாமல் புலம்பெயர்கிறது. அதில் காதலியைப் பிரிந்து செல்லும் நம் நாயகனும் முதல் ஆளாய் செல்கிறான். பின் தொடர்வது அவலம் மிகுந்த அவர்களின் தேயிலைத்தோட்ட வாழ்க்கை. நெஞ்சைக் கனக்கச்செய்யும் ஒரு கிளைமாக்ஸுடன் படம் நிறைவடைகிறது.
பழங்கால தமிழக கிராமத்தை உருவாக்கி, இந்தக்கதை, முடிந்தவரை எல்லா வகையிலும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அதற்காக பாலாவுக்கு முதலில் வாழ்த்துகளைப் பதிவு செய்வோம்.
ஆனாலும் சில இடர்ப்பாடுகள். எங்கெல்லாம் நாம் பொருந்தமுடியாமல் இடர்ப் பட நேர்கிறது? ஓரிருவர் என்றில்லாமல் ஏறத்தாழ அந்தக்கிராமமே புலம்பெயர்கிறதெனில், அங்கே வறுமை தாண்டவமாடியிருக்க வேண்டுமல்லவா? ஆனால், ஒரு கல்யாண விழாவும் அதையொட்டிய கொண்டாட்டமான மதுவிருந்தும், விருந்தின்போது இறந்துபோகும் ஒரு பெரியவரின் சாவை மறைத்து, கல்யாண நிகழ்வு நடந்தேற ஒத்துழைக்கும் நல் மாண்பு மிக்க பெண்மணிகளும், துறுதுறுப்பான மனிதர்களும், அந்த மனிதர்களின் ஏளனத்துக்கும், விளையாட்டுக்கும் வடிகாலாக இருக்கும் கதாநாயகனும், அவனைச் சீண்டி விளையாடும் கதாநாயகியுமாக முற்பகுதியின் கதை சுகமாக நிரப்பப்பட்டுவிடுவதில் வறுமை நம் கண்களுக்கே தட்டுப்படவில்லை. நாள் முழுதும் விறகு உடைத்துவிட்டு கூலி மறுக்கப்படும் போதுகூட அவன் ஏய்க்கப்படுகிறான் என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர அவனது வறுமை உணரப்படுவதாக இல்லை. இப்படியான கதையின் முக்கியத் தேவை, இங்கே சரிவர சொல்லப்படாமல் போனது பெரிய தொய்வு.
ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாய் இருந்த மக்கள், நெடும்பயணத்தில் மயங்கி வீழ்ந்த தங்களில் ஒருவனை இரக்கமே இல்லாமல் அப்படியே விட்டுச்செல்வது, அதுவும் கங்காணியின் முழுமையான ஆதிக்கத்துக்குள் வரும் முன்னரே என்பது சற்றும் ஏற்கமுடியாத இன்னொரு உறுத்தல். போலவே ஓரிரு பிரதான பாத்திரங்களின் சிரமத்தைத் தாண்டி தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் அடிமை நிலை இன்னும் கூட உணரும்படி சொல்லப்பட்டிருக்கலாமோ என்பது போன்ற போதாமை. ஆனால் வழக்கமாக கொடூர வன்முறைக் காட்சிகள் என்பது பாலாவுக்கு கைவந்த கலையாயிற்றே, இதில் வாய்ப்புகளும், தேவையும் இருந்தும் பொறுப்போடு நடந்துகொண்டிருக்கிறாரே என்ற ஆச்சரியமே எனக்கு மேலோங்கியிருந்தது. அந்த வகையில் அடிமை நிலை இன்னும் விளக்கமாக காட்சிப்படுத்தப்படாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதே!
குறிப்பிட்டுச் சொல்வதானால், தப்பிச்செல்லும் ராசாவின் கால் நரம்பை வெட்டும் கொடூரத்தை நீட்டி முழக்காமல், எளிமையாக, அதுவும் அவனது கதறல் ஒலியிலேயே முடித்துக்கொண்டார் இயக்குனர். ஆங்கிலேயே அதிகாரி, மற்றும் கங்காணிகள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதை பருத்திவீரன் போல கதறக்கதற காட்சிப்படுத்தி, வக்கிரமாக காண்பித்திருக்க்கூடிய வாய்ப்பு இருக்கிறதே என பயந்துகொண்டே இருந்தேன். அதைக் கையாண்ட விதமும் இது பாலா படம்தானா என்று என்னை ஆச்சரியப்படவைத்தது.
மற்றபடி, கதைக்களம், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சியமைப்புகள், பீரியட் படத்துக்குத் தேவையான பிரத்யேக உழைப்பு, சினிமாத்தனமில்லாத அதே நேரம், மனம் கனத்துப்போகும் வேதனையில் ஆழ்த்தும் கிளைமாக்ஸ் என பாலா ஒரு புதிய படத்தைத் தமிழுக்குத் தந்திருக்கிறார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன் குறிப்பிட்டுப் பாராட்டப்படவேண்டியவை. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார்கள். அதர்வா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டியாக வருபவர் எனப் பலரையும் குறிப்பிட்டுச்சொல்லலாம். பிசிறு தட்டிய, பொருந்தாத ஒருவர் உண்டெனில் அது வேதிகாதான். அவருடைய மேக்கப்பும், பர்ஃபாமென்ஸும் படத்தின் திருஷ்டிப்பொட்டு.
நாஞ்சில் நாடன். படத்தின் வசனம்.
ஒரு படத்தின் திரைக்கதாசிரியரின் உணர்வை முழுமையாக புரிந்துகொண்டு இன்னொருவரால் வசனம் எழுதமுடியுமா? அது அவசியமா? அபத்தமா? ஹாலிவுட் படங்களில் அப்படியான ஒருவரே இல்லையே? தமிழில் இப்படி ஒருவரின் பங்களிப்புத் தேவைதானா? எனில், அவசியம் அது தேவைதான் என்பேன். ஏனெனில் தமிழின் மொழிச்சிறப்பு அப்படி. நம் சமூகத்தின் பல்வேறுபட்ட பழக்க வழக்கங்கள், சிந்தனையோட்டங்கள், வட்டார வழக்குகள் அவ்வாறானவை. குறிப்பாக பிற படங்களை விடவும், பரதேசி போன்ற கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு தமிழறிவும், சமூக அறிவும், வரலாற்றின் மீதான ஆர்வமும், முக்கியமாக பொறுப்பும் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார் என்பதில் வேறு கருத்துக்கு இடமே இல்லை. இதை பாலாவால் செய்துவிடவே முடியாது. ”மூல வியாதிக்காரனுக்கு பேள்றதே கஷ்டம்..”, “தாயத்தை இடுப்புல கட்டுறதா, புடுக்குல கட்டுறதா..”, “பெரிப்பா, உங்க மந்திரி வெளிய தெரியுது..” போன்ற ’கிரித்துவம் புடிச்ச’ வசனங்களை மேற்கோள் காட்டி நாஞ்சிலைப் பாராட்டுவது என்பதோ, நாஞ்சிலின் வசனங்கள் பரவாயில்லை ரகம் என்பதோ, கெட்டவார்த்தைகள் அதிகம் என்று இகழ்வதோ நிச்சயம் நாஞ்சில்நாடனுக்கு நாம் இழைக்கும் துரோகமேயாகும். இதைப்போன்ற பளிச் ரக வசனங்களே ஒரு வசனகர்த்தாவை நினைவுபடுத்துபவை என்பது அநீதி.
தலைவாசல் படிக்கட்டில் சூடம் எரியவிட்டு பேரன் மீதான கந்திருஷ்டியைக் கழித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு ஆச்சி. படிக்கு இந்தப் புறம் அவள், அந்தப்புறம் சிறு குழந்தையான அவன். சட்டென கண்ணில் தூசு விழ, அழுதுகொண்டே அவளை நோக்கிப் பாய்கிறான் அவன். சூடம் எரிகையில் படி தாண்டக்கூடாது. அவன் தாண்டும் முன்பே, அவனுக்காக இவள் படிதாண்டி அவனை அள்ளிக்கொள்கிறாள். படி தாண்டியதற்கான பழி ஏதாகினும் அது அவளையே சாரட்டும், பேரன் மீது வேண்டாமெனும் பாசம் அது. அவ்வாறான ஒரு காட்சி இந்தப் படத்தில். ராசா, பஞ்சாயத்தில் எரியும் கற்பூரத்தட்டை அணைத்து, ’இனி அங்கம்மாவை-காதலியை- பார்க்க மாட்டேன் என் சத்தியம் செய்’ என நிர்ப்பந்திக்கப்படுகிறான். போராடும் அவனது ஆச்சியோ, விஷயம் நடக்கிறதோ, இல்லையோ சத்தியம் செய்து மீற நேர்ந்தால் அந்தப் பழி தன் பேரனை வந்தடையுமே என, அந்தச் சூழலை உழப்பி விட்டு, யாரும் கேட்குமுன்பே தானே கற்பூரத்தை அணைத்து, “சத்தியம்தானே.. அதெல்லாம் பண்ணியாச்சு பண்ணியாச்சு, போங்கடா பொழப்பப்பாத்துகிட்டு” என்று பஞ்சாயத்தை சட்டென கலைத்துவிடும் போது அவளது பொறுப்பும், பாசமும் வெளிப்படுகிறது. அப்போது அவள் பேசும் பேச்சும், அதன் தொனியும் நாஞ்சிலின் பேனா தந்தது என்பதுதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும், பிரத்யேக மண் சார்ந்த, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் அவன் குணம் முதலாக, ஒவ்வொரு சூழலில், மகிழ்ச்சியில், சோகத்தில், உணர்வுக் கொந்தளிப்பில் எதை எப்படிப் பேசுவான் என்பது உணர்ந்து எழுதப்படுவதே நல்ல வசனப்பணி. அப்படிப்பட்ட காரியத்தைத்தான் செய்திருக்கிறார் நாஞ்சில்.
தவிரவும், சரியாக இது 1939ல்தான் நடந்ததா? 1920 இல்லையா? ஏன் அப்போதே தொழிற்சங்கங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்கிவிடவில்லையா? அப்போதைய தமிழக அரசியல் கூறுகள் எதுவுமே கண்ணில் படவில்லையே? ஏன் 48 நாள் பயணம்? மதுரையிலிருந்து மாஞ்சோலைக்குப் பயணம் என்று கொண்டாலும் கூட இரண்டு நாள் போதுமே? 48 நாட்களில் தாடி வளர்ந்தது சரி, ஏன் முடி வளரவில்லை? வருடக்கணக்கில் அங்கே வாழ்பவர்ளுக்கு தப்பிச்செல்ல ஒரு வழியுமா கிடைக்கவில்லை? மலை முழுதும் செய்யப்பட்டிருந்த அப்பேர்ப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு எப்படிப்பட்டது? நீலக்கலர் சட்டை போட்ட நான்கைந்து அடியாட்கள் அதற்குப் போதுமா? என வாய்ப்பிருக்கும் நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்தான். இவையெல்லாமும் கவனம் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் கூட முழுமையான ஒரு சினிமாவாக பரதேசி உருவாகியிருக்கலாம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும் இந்தக் குறைகள், மையக்கருத்துக்கு பங்கம் செய்வதாக இல்லை என்பதால் இவற்றைத்தவிர்த்தும் செல்லலாம்.
தன்னைத் தொடர்ந்து பாலாவும், சம கால இயக்குனர்களும் பொறுப்போடும், இன்னும் முழுமையைத் தேடியும் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய வகையில் பரதேசி தவிர்க்க இயலாதவனாகிறான். நம் அன்பும், நன்றியும் அவனுக்கு!
.