ஆட்டிஸக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றிப் பேசும் முதல் தமிழ்த்திரைப்படம் என்ற வகையில் ஹரிதாஸ் மிக முக்கியமான ஒரு படமாகிறது. மனநலக் குறைபாட்டின் அத்தனை நிலைகளையுமே ஒரே கண்ணோட்டத்தோடு நோக்கும் சமூகம் நம்முடையது. அறிவியலும், மருத்துவமும் ஆய்ந்து தரும் செய்திகளைக் கொண்டு மனமாற்றத்தை, ஏற்றத்தை அவ்வப்போது செய்துகொள்வதே ஒரு நல்ல நாகரீக சமூகத்தின் குணமாக இருக்கமுடியும். அவ்வாறான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேறெதையும் விட கலைக்கு முக்கிய பங்குண்டு. அதை ஹரிதாஸ் செய்திருக்கிறது.
மனைவியை இழந்த ஒரு போலீஸ் அதிகாரி, பாட்டியிடம் வளரும் ஆட்டிஸக்குறைபாடுள்ள தன் பையனை தன்னுடையே வைத்துக்கொள்ளும் விருப்பத்துடன் சென்னைக்கு அழைத்துவருகிறான். கடுமையான பணிச்சூழல் ஒரு புறம். மகனைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் தந்தைமை ஒரு புறம். மகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவனுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடவேண்டுமென்ற ஆதங்கத்துடன் அவன் போராடுகிறான். இன்னொரு புறம் அவனது ஆபத்தான சமூகவிரோதிகளை வேட்டையாடவேண்டிய கடமை.
குதிரைகளைக் காணும் போது ஏற்படும் ஹரியின் எழுச்சி, மாரத்தனில் அப்பா இல்லாத மானசீக தனிமையை வென்று தன் எதிர்காலத்தை நோக்கி ஹரி எடுத்துவைக்கும் முதல் அடி போன்று குறிப்பிட்டுப்பாராட்டவேண்டிய உணர்வு மிகுந்த காட்சிகள் படத்தில் அனேகம்.
போலீஸ் அதிகாரியாக, பரிதவிக்கும் தகப்பனாக கிஷோர் முழுமையாக அந்தப் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். மகனின் பள்ளி ஆசிரியையாக பொறுப்புமிக்க பாத்திரத்தில் சினேகா. இன்னும் பிற நடிகர்களின் பங்களிப்பு என அனைவரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். இறுதி சண்டைக்காட்சி தவிர்த்து பெரும்பாலும் சினிமாத்தனமில்லாமல் பயணிக்கும் திரைக்கதை. ரத்னவேலுவின் பொருத்தமான ஒளிப்பதிவு. சோகமான, செய்திப்பட உணர்வைத் தந்துவிடக்கூடிய சிக்கலை, சாமர்த்தியமாக எந்த இடத்திலும் சுவாரசியம் கெடாமல் கொண்டு சென்று, ஒரு வித பதைப்புடனே பார்வையாளர்களை வைத்திருந்ததில் இயக்குனர் குமாரவேலன் வெற்றியடைந்திருக்கிறார். டிராஜிடியான கிளைமாக்ஸ் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல கதைகளைக் கொண்ட கமர்ஷியல் படங்கள் சுபமாக முடிவதையே என்னைப்போன்ற ஒரு சாதாரண பார்வையாளன் விரும்புவான் என நினைக்கிறேன்.
தவறவிடக்கூடாத சினிமா ஹரிதாஸ்!
தவறவிடக்கூடாத சினிமா ஹரிதாஸ்!