ஏன் இன்னும் நாம் புத்தகங்களை கொண்டாட வேண்டும்? காரணம் மிக எளிதானதுதான். சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் அனைத்தும் செய்திப்பகிர்வையும், பொழுதுபோக்கையுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆக செய்திகள், அனுபவங்கள் மீதான தொடர் சிந்தனைகள், ஆய்வுகளை நிகழ்த்த நமக்கு இருப்பது புத்தகங்கள் மட்டுமே. அவ்வாறான புத்தகங்களே நாம் கற்க, நம் ரசனையை உயர்த்த, சக மனிதர்களை அவர்களின் இயல்போடு ஏற்க, சூழல்களை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள, நற்பண்புகளைக் கைக்கொள்ள வழிகாட்டுகின்றன. வேறு வழியேதும் இல்லை நமக்கு!
சமீபத்தில் வாசித்த இரண்டு புத்தகங்கள், நாஞ்சிலின், ’பனுவல் போற்றுதும்’, ’காவலன் காவான் எனின்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகள்.
பனுவல் போற்றும் பனுவலாம், ’பனுவல் போற்றுதும்’ பனுவலைப் போற்றும் சிறு கட்டுரை இது!
இது போல புத்தக அறிமுகம் எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாரை யார் எப்படி பாராட்டுவது என்பதைப் பற்றியும், தகுதி பற்றியும் சிந்தனை ஏதுமின்றி சகட்டுமேனிக்கு ’நாஞ்சிலின் எழுத்து நடையும், எழுத்து வன்மையும், சிந்தனையும் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை’ என்று உளறி வைப்பதற்கான சாத்தியம் அதிகம். இருப்பினும் நாஞ்சில் எனக்காக எழுதுகிறார், என் போதாமையை, அறியாமையைப் புரிந்துகொள்வார் என்ற அடிப்படையில் அறிமுகமோ, விமர்சனமோ எழுதுவதிலும் ஒன்றும் தவறில்லை எனத் தொடர்கிறேன். என் போன்ற இன்னும் நான்கு வாசகருக்கு இப்புத்தகங்களும், நாஞ்சிலின் சிந்தனைகளும் சென்று சேர்வது மட்டுமே என் நோக்கம். அது நிகழ்ந்தால் இக்கட்டுரை முழுமை பெறும்.
இரண்டு புத்தகங்களிலுமுள்ள மொத்தம் 43 கட்டுரைகளையும் தனித்தனியே ஆராய்வதோ, வரிகளை எடுத்தாண்டு சிறப்புப் பேசுவதோ என் நோக்கமும் அல்ல, அது அத்தகைய எளிய காரியமும் இல்லை!
ரேண்டமாக சில கட்டுரைகளைப் பற்றி மட்டும் முடிந்தவரை பேசுவோம்.
கல்யாண விருந்தே இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேர்வு. எனக்குப் பாயசம் போன்றது நகைச்சுவை. முதல் புத்தகத்தில் ஐந்தாவது கட்டுரை, ‘பாயிரம் இன்றேல் பனுவல் இன்று’. அவர் அதை சிரித்துக்கொண்டே எழுதியிருப்பாரா? கடுப்பில் எழுதியிருப்பாராவென்றெல்லாம் எனக்குத் தெரியாது. நாக்பூரிலிருந்து ராய்ப்பூர் செல்லும் ஷாலிமர் விரைவுவண்டியில் மொழி தெரியாத சகபயணிகளுக்கு அருகே அடக்கமாட்டாமல் சிரித்து, புத்தகத்தைச் சற்று நேரம் மூடிவைத்தபிறகும் நினைத்து நினைத்து சிரித்து அவஸ்தைப்பட்டதை மறக்கமுடியாது. ஒரு புத்தகத்துக்கு முன்னுரை, அணிந்துரை என்பன எத்தனை முக்கியமானவை என்பதையும், அது இன்றைய பொழுதுகளில் எவ்வாறெல்லாம் இருந்துகொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் அணிந்துரை, பணிந்துரை, கனிந்துரை, கண்கசிந்துரை, மது வழிந்துரை, கோழிக்கறி மணந்துரைகள் பெறப்படுகின்றன என்பதையும் விளக்கும் கட்டுரை. கூடவே, ஒரு பிரபல எழுத்தாளனாகவும் இருப்பதால் இந்த பிரச்சினையில் சிக்குண்டு எப்படியெல்லாம் இம்சைப் படவேண்டியிருக்கிறது என்பதையும் நாஞ்சில் விவரிக்கும் அழகே அழகு!
அடுத்தொரு முக்கியமான உள்ளடக்கம். குடி. மது. இரண்டு கட்டுரைகள். அதிலொரு ’உண்ணற்க கள்ளை’ என்ற கட்டுரையே சமீபத்தில் வெளியான அழகியதொரு மாற்று சினிமாவான, ‘மதுபானக்கடை’யின் அடிப்படையாகியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. ஒழுக்கமென்பது யாது, மது ஏன் கைக்கொள்ளப்படுகிறது என்பதில் துவங்கி தற்போதைய தமிழகத்தில் எவ்வாறு இது சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும், அரசு எத்தகைய அநீதியான மதுக்கொள்கையை கொண்டிருக்கிறது என்பதையும் இவை பேசுகின்றன. பிப்.2008ல் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆளப்போகிற கட்சியுமான இரண்டுமே இந்தச்சீரழிவை ஒத்துக்கொண்ட நிலையில் இவற்றிலிருந்து நமக்கு இனி விடுதலையே இல்லை என்ற உண்மை மனதைக் கலங்கடிக்கிறது.
‘காவலன் காவான் எனின்’ எனுமொரு டைட்டில் கட்டுரை. இது என்னுள் மிகப்பெரிய தாக்கத்தையும், பயத்தையும் உண்டு செய்த ஒன்று. ஒரு சமூகத்தின் மேன்மையும், வளர்ச்சியும், சிறுமையும், வீழ்ச்சியும் அச்சமூகத்தின் அங்கத்தினர்களாலேயே உருவாகிறது. ஆயினும் அதற்கான காரணமாக, தூண்டுதலாக இருப்பவர்கள் அவர்களை வழி நடத்திச்செல்லும் தலைவர்களாகவே இருக்கிறார்கள். தலைவன் நெறி தவறினால்?
நமது இன்றைய பரிதாபகரமான சூழல் மனதைக் கனக்கச்செய்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய வேலை வாய்ப்பை மேலும் உருவாக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இருப்பதையும் கூட சிதையச் செய்யும் அரசு. கசடற்று இருக்கவேண்டிய கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மலிந்திருக்கும் ஊழல். அவற்றை அனுமதிக்கும் கயமை. பெரும் வரலாறு கொண்ட சமூகத்தின் சுயமரியாதையை அற்பமான இலவசங்களைக் கொண்டு அழித்த அவலம். இலவசம் என்பது, நான் பெறும் பிச்சை என்ற எண்ணம் போய், அவன் செய்யும் ஊழலில் இப்படியாவது எனக்கும் கொஞ்சம் பங்கு கிடைக்கட்டுமே என்ற எண்ணம். நாம் கேட்பது அநீதியில் பங்கு என்பது ஒரு புறம் இருக்க, அவன் ஊழல் செய்வதே நம்மிடம்தான் என்பதை உணரா அறிவின்மை. டிவிக்கும், மிக்ஸிக்கும், 100 ரூபாய் பணத்துக்கும் அடித்துக்கொண்டு, நெரிசலில் நசுங்கிக்கொண்டு, விலையில்லாப் பொருட்களுக்காக மானத்தை விலை கொடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழல்.
‘மானம் மானம் எனத்துடிக்கும் நல்மாண்பிருந்த தமிழ் வீரர் நெஞ்சம்’ எங்கே?
எதிர்காலம் பயமுறுத்துவதாக இருக்கிறது. நாம் அங்கே இருக்கப்போவதில்லைதான். ஆனால் நம் பிள்ளைகள் இருக்கப்போகிறார்கள். ஊழலின் பின்விளைவுகள் மோசமானவை. தரமற்ற நுகர்பொருட்கள். அடிப்படை உரிமைகளுக்கே கொடுக்கப்பட இருக்கிற அநீதியான விலை. நேர்மை அவசியமற்றுப் போகப்போகிற சூழல். அலட்சியத்தால் நிகழப்போகிற உயிர்கொல்லும் விபத்துகள். திறமையும், தகுதியும் இருப்பவனுக்கு நேரப்போகிற பசி. அதனால், அதன் பின் நிகழப்போவது என்ன?
கட்டுரை ’நமது காவலன் காவார், மழை எங்கே பெய்யும்? ஆ எப்படி பயன்தரும்? மக்கள் எங்ஙனம் செழிப்புறுவர்? எங்ஙனம் ஆளும் அருள்?’ என்று முடிந்தாலும்.. சுய பச்சாதாபத்தை மட்டுமே உருவாக்காமல் கொடுங்காவலனுக்கும் உறைக்கும்படியான விஷயங்களையும் சொல்கிறது. ஆயினும், கட்டுரை நம் தலைவர் பெருமக்களின் கருணைப் பார்வைக்குள் விழவேண்டுமே என்பது நம் கவலை.
இரண்டாவது புத்தகத்தில் ஒரு கட்டுரை ஐம்பதாண்டு கால தமிழ் நாவல் வரலாறு நாஞ்சிலின் பார்வையில். புதுமைப்பித்தன் துவங்கி சுதேசமித்திரன் வரையான நீண்ட பட்டியல், அவர்களின் பிரதான படைப்புகள் பற்றிய குறிப்புகள். நிரம்ப பிரமிப்பாக இருந்தது, அவர் இவ்வளவு வாசித்திருக்கிறாரே என்பதால் அல்ல, இதில் குண்டூசி முனையளவு கூட நாம் வாசிக்கவில்லையே, எப்போது செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தால். இது நம் சம காலத்திய இலக்கியம், இதையே தவறவிட்டுக்கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சம் வெட்கத்தைத் தரும் போதே, சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள். ‘உன் தாத்தன் உனக்காக விட்டுச்சென்ற பெருஞ்செல்வமிது நண்பனே. நீ இதன் மீது நின்றுகொண்டு தமிழ் சினிமா எனும் ஒட்டடையை சிலாகித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று நாஞ்சில் சொல்வதாய் எனக்குத் தோன்றிற்று.
உயிர்காக்கும் மருந்தாம் உணவைப் பாழடிக்கும் நமது அலட்சிய மனப்பாங்கு, நம்முன்னோர்கள் ஏற்படுத்திய – சூழல் நலம் பேணிய - நம்மைச்சுற்றியிருந்த நீர்நிலைகளின் அழிவு, எறும்பு முதலான சிற்றுயிர்கள், மரங்கள், செடி, கொடிகள் பற்றிய நமது அறிவின்மை மற்றும் அதற்கான தேவை, குணங்குடி மஸ்தான் சாகிபு மற்றும் பாரதியின் மூத்தாள் செங்கோட்டை ஸ்ரீ ஆவுடையக்காள் குறித்த பகிர்வுகள், வெங்கட் சாமிநாதன் எனும் திறனாய்வு மேதை பற்றிய எண்ணங்கள்.. தவிரவும் நாஞ்சிலின் சில அழகான பர்சனல் அனுபவங்கள் என.. புத்தகங்கள் நமக்கு சிந்திக்கத் தருவது நிறைய.! அவற்றைப் பெறுவோம், நிறைவோம்!
அச்சு, இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகள் மட்டுமின்றி, விழாக்கள், கருத்தரங்குகளில் நாஞ்சில் ஆற்றிய உரைகளின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது இப்புத்தகங்களின் சிறப்பானது. ஆயினும் மாற்றுக்கருத்து ஒன்றுண்டு, சில புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளும், குறிப்பாக அவருடைய ’திகம்பரம்’ புத்தகத்துக்கு அவரே எழுதிய முன்னுரையும் கூட இவற்றோடு தொகுக்கப்பட்டுள்ளது ஏற்புடையதாக இல்லை. முன்னுரைகள் அந்தந்தப் புத்தகங்களுக்கானவை, அவற்றோடு இணைந்து அவற்றை வாசிப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
காவலன் காவான் எனின் – 168 பக்கங்கள் – விலை ரூ. 100
பனுவல் போற்றுதும் – 216 பக்கங்கள் – விலை ரூ. 130
இரண்டுமே ‘தமிழினி’ வெளியீடுகள்.
நன்றி: சொல்வனம் இணைய இதழ்
(இதழ் எண் -82ல் வெளியானது).
.