இரண்டு விஷயங்களுக்காக இந்தப்படத்தைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒன்று காதலெனப்படும் உறவை இன்னொரு அழகிய கோணத்தில் சித்தரித்தமைக்காக. இன்னொன்று நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சிறுபான்மையினரை முன்னிறுத்தும் அரசியலை அழுத்தமாக பேசியமைக்காக.
எல்லா வகையிலும் சிறப்பான ஒரு படத்தைக் காண்பது அரிது. ’மிஸ்டர் & மிஸஸ் ஐயர்’ (Mr & Mrs, Iyer) அவ்வகையிலான ஒரு படம். இதைப்போன்ற சில படங்களைப்பற்றி எப்போதாவது நண்பர்கள் சிலாகிக்கும்போது அவற்றைப் பார்க்கும் ஆவல் எழும். பெரும்பாலான படங்களை அத்தோடு நாம் மறந்துவிடுகிறோம், அல்லது பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது. இந்தப் படத்தைப் பொருத்தவரை என் நிலையும் அதுவே. சமீபத்தில் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது இந்தப் படத்தைப் பற்றி பேச்சு வந்தது. ‘அட பக்கி, இன்னுமா பாக்கலை’ என்று முதலில் கடுப்பேற்றியவர், அடுத்த நாளே நேரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தபோது அவரிடமிருந்த டிவிடியைத் தந்து அதை ஆற்றுப்படுத்தவும் செய்தார்.
மீனாட்சி எனும் ஒரு பெண், கைக்குழந்தையோடு, பெற்றோர் வீட்டிலிருந்து அவளது வீட்டுக்குப் பயணம் செய்கிறாள். ஆண்கள் துணையோ, பெரியவர்கள் துணையோ இல்லாத சூழல்.. அதுவும் பேருந்தில் கல்கத்தாவை நோக்கி சற்றே நெடும்பயணம். தழையத் தழைய கட்டியிருக்கும் புடவை, படிய வாரிய தலை, குங்குமம் துலங்கும் நெற்றி என மீனாட்சி ஒரு தமிழ் பிராமணப் பெண். தோற்றம் இதுவாயின், மனம் நிறைய ஆச்சார பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடுகளும், பிடிவாதங்களும் கூடுதலாய். அதே நேரம் நற்கல்வி தந்த தைரியமும் என ஒரு சராசரிப் பெண்ணாய் இருக்கிறாள் அவள்.
கூண்டுக்குள்ளிருந்த ஒரு பறவை உலகைக் காணும் தருணமாய் அந்தப் பயணம் மீனாட்சிக்கு அமைகிறது.
காதல் என்பது என்ன?
ரசனையை, மனதை அறிந்த தோழனுடன் ஏற்படுவது? அவனுடனேயே போதும் போதுமென கூடியிருப்பது? பெற்றோரால் தேர்வு செய்யப்பட்டு கழுத்தில் மாலையணிப்பவனுடன் வருவது? பாதுகாப்பை, வளமான சூழலை எப்போதும் தருபவனுடன் கனிவது? காலம் முழுதும் துணை வருபவன் மீதானது? குழந்தையைத் தந்து குடும்பத்தைப் பேணுபவனுடனானது? சுதந்திரத்தை, சுயத்தை மதிப்பவனுடன் கொள்வது? ஆயின்..
ஒரு சின்ன மனமாற்றத்தை, புரிதலை ஏற்படுத்தியவன் மீது வரக்கூடாதா? கடந்துசெல்பவனின் அழகு உள்ளுக்குள் ஒரு குட்டிப்பூவை மலரச் செய்யக்கூடாதா? கண்களை நேர்மையாகச் சந்திக்கும் கண்கள் கொண்டவன் மீது வரக்கூடாதா?
நட்பு என்றும், சகோதரத்துவம் என்றும் ஏன் அந்த மெல்லிய உணர்வுகளைக் கொச்சைப்படுத்தவேண்டும்? மனித வரலாறு மிகப் பெரியது. நேற்றைய கற்பிதங்கள் நாளை மறக்கப்படலாம், மறுக்கப்படலாம். சமூக ஒழுக்கங்கள் என்ற நெறிமுறைகள் ஏன் ஏற்படுத்தப்பட்டன என்பதைச் சிந்திக்கலாம். நேர்மையாக இருப்பவர்களுக்கும், அன்பானவர்களுக்கும் வாழ எந்த விதிமுறைகளும் தேவையில்லை. ஆனால் எல்லோரும் அப்படி இருந்துவிடுவதில்லை என்பதுதான் சிக்கலான உண்மை. அதற்காகத்தான் புனையப்பட்ட நெறிகள், ஒழுக்கவிதிகள் எல்லாமும்.
மீனாட்சியுடன் பேருந்தில் சகல விதமான மனிதர்களும். குதூகலமான கல்லூரி மாணவர்கள், குழந்தையைக் கூட இடைஞ்சலாகக் கருதும் மனிதர்கள், வயதான தம்பதி, வாய்கொள்ளாத ’பான்’ மசாலாவுடன் சிலர், மனநலமில்லா சிறுவனுடன் பரிதவிப்புடன் ஒரு தாய், இன்னும் இன்னுமென ஒரு இந்தியச் சமூகத்தின் துளி அந்தப் பேருந்து. கூடவே ஜஹாங்கீர் சௌத்ரி எனும் ஒரு இஸ்லாமிய இளைஞன். நண்பனின் நண்பன் எனும் உரிமையில் பயணத்தில் அவளுக்கு உதவ அவளது அப்பாவால் கேட்டுக்கொள்ளப்பட்ட நபர்.
சக மனிதனை சக மனிதனாக ஏற்பதில் அவளுக்கு இருக்கும் மனத்தடை அந்தப் பயணத்தில் எப்படி உடைபடுகிறது என்பதை மீனாட்சியின் இடத்தில் பார்வையாளனை வைத்துக் காண்பிக்கிறது, கற்பிக்கிறது படம். வாழ்க்கையைக் கற்பதோடு, முடிவில் மனம் கொள்ளா ஒரு பிரிவையும் மீனாட்சி கொள்ளும் போது நமது மனமும் கனத்துப்போகிறது.
ஒரு படம், ஒரு பிரதான விஷயத்தைப் பேச முயல்கையில் அதற்கான தேவையை, அவசியத்தை அல்லது சூழலை உருவாக்குவதற்காக சில சம்பவங்களைப் பேசவேண்டியது, உருவாக்கவேண்டியது நேர்கிறது. ஆனால் அவை இரண்டாம் பட்சம்தான் என்ற மனநிலையில் உருவாக்கப்படாமல் எவ்வளவு ஆழமானதாக, முக்கியத்துவமுடையதாக உருவாக்கப்படவேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். இங்கு மீனாட்சிக்கும், சௌத்ரிக்கும் இடையே ஒரு அழகிய உறவு மலர்வதற்கான காரணமாய் இந்து-இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மோதல் காண்பிக்கப்படுகிறது. மனிதம், மெல்லிய உணர்வுகள், நேர்மை, அன்பு என சமூகத்தின் அழகிய ஒரு பக்கம் விரிந்துகொண்டிருக்கையில், கோரமான மறுபக்கத்தையும் காண்பித்து, எதை நீ தேர்ந்துகொள்ளவேண்டும்? என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ? என்ற ஒரு அத்தியாவசியமான கேள்வி பார்வையாளனை நோக்கி எழுப்பப்படுகிறது. இன்னும் இந்த சமூகம் குறித்தான நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. ஆனால், அற்ப அரசியல்வாதிகளின் சுயலாப தூண்டுதல்களுக்கு விலை போய், சிந்தனையை அடகுவைத்துவிட்டு அடிப்படைவாத, தீவிரவாத செயல்களை ஒரு குழு மேற்கொண்டுகொண்டேதான் இருக்குமெனில் அந்த நம்பிக்கை நம் அனைவருக்குமே விரைவில் சிதைந்துபோகும். பின்பு அமுதிருக்க நஞ்சைக் கைக்கொண்டவர்களாகி விடுவோம் நாம் அனைவருமே.
இந்து தீவிரவாதக் குழு, இஸ்லாமியர்களைத் தேடி பேருந்தினுள் நுழையும் காட்சியில் ஏற்படும் படபடப்பு படம் முடியும் வரை இருந்துகொண்டே இருக்கிறது நமக்கு. இளைஞர் குழுவுக்கு தங்களின் கற்பனைத் தேனிலவு அனுபவத்தை சௌத்ரி விவரிக்கும் காட்சி, இஸ்லாமிய தம்பதியர் வலுவில் பேருந்திலிருந்து இறக்கப்படும் போது ஆண்கள் கூட பயத்தில் உறைந்துபோயிருக்க, ஆற்றாமையால் அழுதுகொண்டே தன் எதிர்ப்பைப் தெரிவிக்கும் கல்லூரி மாணவி, சௌத்ரி ஒரு இஸ்லாமியன் என்று மீனாட்சி அறியவரும் நிகழ்வு, பேருந்து நின்றவுடன் காரணம் தெரிவதற்கு முன்னமேயே சலித்துக்கொண்டு, விபத்தாக இருக்கும் என்று வந்த வதந்தியை விவாதிக்கும் நபர்கள், இரண்டாவதுமுறை சௌத்ரியின் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் மீனாட்சி, இரவுப் பொழுதில் மான்களைக் காமிராவின் வழியே கண்டு குதூகலிக்கும் மீனாட்சியின் கண்கள், மௌனத்தையே அன்பாக்கித் தந்து சௌத்ரியை அவள் வழியனுப்பிவைக்கும் இறுதிக்காட்சி என படம் நெடுக கவிதை அனுபவங்கள் விரவிக்கிடக்கின்றன.
அமைதியான, ரசனையான புகைப்படக்காரன் சௌத்ரியாக வரும் ராகுல் போஸ், அற்புதமான இசை, சினிமாத்தனமில்லாத அழகிய காட்சியமைப்புகள், முழுமையான பிசிறில்லா திரைக்கதை என, சூழலை அப்படியேத் தந்து பல்வேறு சிந்தனைகளில் நம்மை மூழ்கடிக்கும் இயக்குனர் அபர்ணா சென் என படத்தில் அத்தனையும், அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!
இறுதியாக..
கொங்கனா சென் ஷர்மா. என்ன நிறம்! என்ன கண்கள்!
பெண்களுக்கே உரிய அலட்சியம், பரிவு, ஏக்கம், இயலாமை, துணிவு, சார்ந்திருக்கும் குணம், ஆர்வம், பயம் என அத்தனை உணர்வுகளையும் இயல்பாய் பதிந்திருக்கிறார். பிரச்சினைக்குரிய பகுதியைக் கடந்து ரயில் ஏறியவுடன் அத்தனைத் தயக்கத்துடனும், பொங்கும் உணர்வுகளுடனும் ராகுலிடம் அந்த கற்பனைத் தேனிலவு நிகழும் ஊரின் பெயரைக் கேட்கும் கொங்கனாவை இனி எப்போதும் என்னால் மறக்கவே முடியாது. அவரின் முகபாவங்களும், குரல் பாவங்களும் அற்புதமானவை. என்னைப் பொறுத்தவரை இனி கொங்கனா ஒரு பெங்காலிக்காரியே அல்லள், அத்தனை அழகுடனும் கூடிய ஒரு தமிழச்சி, அவ்வளவுதான்!
*