தலைமுடியை நன்றாக நீர் போக உலர்த்திக்கொண்டு, ஸ்டைலாக சீவி தலையை உலுப்பிக்கொண்டு, ஆடைகளைத் திருத்தம் செய்துகொண்டு கண்ணாடியிலிருந்து திரும்பியபோதுதான் கவனித்தேன், என்னைச் சில நிமிடங்களாக என் மனைவி கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அதில் ஒரு கீற்று கோபம் இருந்ததாக எனக்குத் தோன்றியது நிஜமா என்று தெரியவில்லை. அவளை நோக்கி லேசாக ஒரு புன்னகையை, நட்புடன் உதிர்த்துவிட்டு அலுவலகம் கிளம்பும் வேலையைப் பார்க்கத் துவங்கினேன்.
அவளைப் பொறுத்தவரை அவளுடைய கூந்தல் அலங்காரம் சற்று சிரமமான காரியம்தான். முப்பது வயதுகளின் துவக்கத்தில் இருக்கும் அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நரைக்கத் துவங்கிவிட்டது. போன மாதம் வந்த மைத்துனி, ‘என்னக்கா இப்படி நரைச்சுப்போச்சு உனக்கு?’ என்று கேட்டு இவளை வெறுப்பேற்றும் அளவுக்கு அந்தப் பிரச்சினை இப்போது வெளிப்படையாகவும் ஆகிவிட்டது. கூந்தலின் அளவு இன்னொரு புறம். எந்த வகையில், எப்படிச் சீவி, ஜடை தரித்தாலும் கூந்தல் பின்புற ஜாக்கெட்டைக்கூட தொடச் சிரமப்படுகிறது. தடிமன், சட்டென யாரும் சிரித்துவிடும் அளவில்தான் இருக்கிறது.
சிறப்புத் தாவர களிம்புகள், முட்டை, அமேசான் காடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு எண்ணெய்கள் என பலவிதமான கவனிப்புகளை நிகழ்த்தியும், அவளது கூந்தல் வளர்ச்சி என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. நான் அது குறித்து அவளது மனக்கவலைகளை அதிகரிக்கும் துர்மனம் கொண்டவனல்லன். ஆனால், ‘பாப் ஸ்டைலில் நீ ஏன் முடிவெட்டிக் கொள்வது பற்றி யோசிக்கக்கூடாது?’ என்று நல்மனதோடு நான் ஒருநாள் சொன்னதை அவள் கிண்டலாக எடுத்துக்கொண்டு அது சற்று பின்விளைவுகளுக்கும் காரணமாகியதால் அவ்வாறான என் ஆலோசனைகளை நிறுத்திக்கொண்டேன்.
ஆனால், அவள் என் தலையலங்காரத்தை இன்று கூர்ந்து பார்த்தமைக்கு மேற்சொன்ன இந்தப் பிரச்சினையால் எழுந்த பொறாமை காரணமாக இல்லை என்று எனக்குத் தெரியும். அப்படியானால் அது என்ன?
பள்ளிக்காலம் கடந்த பின்பிலிருந்தே எனக்கு தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லை.
எண்ணெய் வைத்துக் கொள்வதென்றால், வாரம் ஒரு முறை ஊற ஊற தலையில் நன்றாக நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு பின்பு சீயக்காய் தேய்த்துக்கொண்டு குளிப்பது, தினமும் தலைவாரிக் கொள்வதற்கு முன்பாக கொஞ்சமாக தேங்காயெண்ணெய் தேய்த்துக்கொள்வது என இரண்டையுமேதான் சொல்கிறேன்.
பள்ளி செல்லும் காலங்களில் காலையில் அம்மா, என்னைப் பிடித்துவைத்து கொஞ்சம் தேங்காயெண்ணெய் தேய்த்து விடுவார். பள்ளிக்காலம் முடிந்த பிறகான என் வாழ்க்கை, என் பிள்ளை பள்ளிக்குச் செல்லத்துவங்கிவிட்ட இன்று வரை விடுதி, வெளியூர், கல்யாணம், வாடகை வீடுகள் என்றே கழிந்துவிட்டதால் அம்மாவின் தேங்காயெண்ணெய்க்கு வழியில்லாது போய்விட்டது. ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை வீடு செல்லும் பொழுதெல்லாம் மறக்காமல், இரண்டு வசவுகளுடன் அருகில் வந்து இரண்டு மூன்று மாதங்களுக்கும் சேர்த்து உள்ளங்கையளவு தேங்காயெண்ணெயை எடுத்து நன்றாக தேய்த்துவிடுவார் அம்மா. என்னதான் ஷாம்பு போட்டு குளித்தாலும் அதன் பலனாய் அடுத்த இரண்டு நாட்களுக்கு முகம் எண்ணெய் மினுமினுப்புடன் இருக்கும். ஏனெனில் எனக்கு முகப்பவுடர் பூசிக்கொள்ளும் வழக்கமும் இல்லை.
இப்படி தேங்காயெண்ணெய் தேய்த்துக்கொள்வது தவிர, தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் வழக்கம் சிறு வயதில் கூட வருடம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டும்தான். அதுவும் கூட சின்ன வயது தீபாவளிகள் போலில்லாமல், இப்போதெல்லாம் தீபாவளிக் குளியல் என்பது சாங்கியத்துக்கு விரலில் தொட்டு, ஒற்றைச்சொட்டு எண்ணெயை உச்சந்தலையில் விட்டுக்கொண்டு, ஓடிப்போய் குளித்துவிடுவதாய் ஆயிற்று.
என் தலைமுடிப் பராமரிப்பு இந்த லட்சணத்தில் இருந்தாலும், என் முடி என்னவோ எந்தக்குறையும் இல்லாமல் செழித்து, காற்றில் அலைபாயும் வண்ணம்தான் கிடக்கிறது.
ஏன் நான் எண்ணெய் வைத்துக்கொள்வதில்லை, முகப்பவுடர் பூசிக்கொள்வதில்லை என்பது பற்றியெல்லாம் விளக்கி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. சுருக்கமாக சொல்லி முடிப்பதென்றால், கை, கால், நகங்கள் போன்றனவெல்லாம் வளர்வதற்கு உணவு போதுமென்றால், இந்த முடி வளர்வதற்கு மட்டும் ஏன் வெளியிலிருந்து ஒரு போஷாக்கு என்பதாய் என் மூளையில் உதித்த சிறப்பான அறிவியல் சிந்தனையாக இருக்கலாம். முகப்பவுடர் பூசிக்கொண்டால் சாக்பீஸ் பவுடர் பட்ட கைகளைப் போல கன்னத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும் கழுத்தும், கைகளும் ஒரு நிறத்தில் இருக்கையில், முகம் மட்டும் அந்நியமாய் ஒரு வெளுப்போடு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான்.
எப்போதாவது குளிர்காலங்களில் கை,கால்களும், தலையும் வறண்டு கிடப்பதாய் ஓர் உணர்வு எழுந்தால் சற்றே எண்ணெய் பூசிக்கொள்ளலாமா என்று தோன்றும். அப்படியே தோன்றினாலும் அதை செயலாக்கம் செய்வது சிரமம்தான். நான் ஒன்றும் அந்தளவில் சோம்பேறி இல்லையெனினும், இதென்ன கைகளை பிசுபிசுப்பாக்கிக்கொண்டு இப்படியொரு வேலை என்ற எண்ணம். அப்படியான ஒரு பொழுதில் மனைவியிடம் தலையை நீட்டி,
’சற்றே எண்ணை தேய்த்துவிடேன்மா’ என்றேன்.
பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் எங்கள் புத்திரனின் தலையில் உழக்கு தேங்காயெண்ணையை அவள் தேய்த்துக்கொண்டிருந்த ஒரு அழகிய காலைப் பொழுதுதான் அது. ஆயினும்,
‘ஆமா, சின்ன நொள்ளை பாருங்க..’ என்று திட்டிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
என்னைச் சின்ன நொள்ளையாக கருதிக்கொண்டு அவள் இன்னும் கூட பல காரியங்களை எனக்காகச் செய்துவரும்போது இதற்கு ஏன் இப்படி விழுகிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது.
சமீபத்தில் அவளது அண்ணனும், மதினியும் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.
‘என்ன மாப்ள, பாத்து நாலு மாசம் இருக்குமா? அதுக்குள்ள உங்களுக்கு முடி இப்படிக் கொட்டிப்போச்சு. அடாடா, கல்யாணத்துல எவ்ளோ முடி இருந்துச்சே. என்னாச்சு?’ என்றேன்.
அவர் என்னவோ, அமைதியாக ‘அதான் கல்யாணம் ஆயிடுச்சே, அதான்..’ என்று ஒரு அசட்டு ஜோக்கை அடித்து, சிரித்து மழுப்பிவிட்டுப் போய்விட்டார். ஆனால் அவர்கள் போனபின்பு இவள் என்னைப் பிடித்துக்கொண்டாள்.
‘அதென்ன கேள்வி, அவரைப் பார்த்து? ஏன் உங்களுக்கு நிறைய இருக்கேன்னு கொழுப்பா?’
‘இதிலென்னம்மா இருக்கு? இயல்பா, சும்மாதானே கேட்டேன்? வேறென்ன பேசறது நான் அவர்கிட்ட?’
‘முப்பது வயசுக்கு மேல ஆம்பளைக்கு தலையில முடி இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? என் மயினி முகத்தைப் பாத்தீங்களா?’ என்று என் தலையைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டபோது கூட நான் அவளைச் சந்தேகப்படவில்லை.
பின்பொரு நாள் பக்கத்து வீட்டு நீலாவுடன் இவள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தற்செயலாகக் காதில் விழுந்தது.
‘அன்னிக்கி நீங்களே பாத்தீங்கதானே நீலா.. இத்தனை வயசுக்குப்பிறகும் அதென்ன பழக்கம்? அவரு என்ன சின்ன நொள்ளையா? அவருக்கு தேய்ச்சுக்கத் தெரியாதா? இல்லைன்னா எனக்குத் தெரியாதா? பேச்சப்பாத்தீங்களா.. என்னாப் பேச்சுன்னு? ஊர்ல எவனுக்கெல்லாமோ வழுக்கை விழுது.. ஹும்’
போன மாதம் வீட்டுக்கு வந்திருந்த அம்மா என்னை இழுத்துப் பிடித்துவைத்து தலையில் தேங்காயெண்ணெய் தேய்த்துவிட்ட சம்பவம் நினைவிலாடியது. கூடவே, ‘இத்தனை வயசுக்குப் பிறகும் நாந்தான் பண்ணனும் உனக்கு எல்லாம்!’ என்று ஒரு டயலாக் வேறு. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது, நாங்கள் ஊருக்குச்செல்கிறோமோ, அல்லது அம்மா இங்கே வருகிறாரோ எங்கள் கல்யாணம் ஆன இந்த 5 வருடங்களாக வருடம் ஒரு முறையாவது இப்படி ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது என.
அம்மா எனக்காக இன்னும் வேறென்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என சிந்திக்கத் துவங்கியிருக்கிறேன் இப்போது. வழுக்கை விழுந்தால் பரவாயில்லை, போனால் போகிறது. வேறெதுவும் தலையாய பிரச்சினை என்றால்.. சமாளிக்கவேண்டாமா?
*