Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

தாங்குதிறன் (Endurance)

$
0
0
ஆங்கில வார்த்தைகளில் இந்த எண்டூரன்ஸ் (Endurance) என்ற சொல் எனக்குப் பிடித்தமான ஒன்றாகும். தாங்குதிறன் என்பது கூட அதன் முழுமையான மொழிபெயர்ப்பல்ல. இந்தச் சொல் உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பழகிய ஒன்றாக இருக்கும்.

ஒரு ஹை வோல்டேஜ் சர்க்யூட் பிரேக்கரை எடுத்துக்கொண்டால் அதன் வாழ்நாளான சுமார் 20 வருடங்களில் சராசரியாக மாதம் ஒரு முறை என்று வைத்துக்கொண்டாலும் கூட (இப்போதைய இந்தக் கேவலமான மின்பற்றாக்குறை காலத்தைக் கணக்கில் கொள்ளாமல்) 240 முறைதான் இயங்குகிறது. ஆனால் அதன் பொறுப்பு கருதி, அது சுமார் 20000 முறை இயங்கினாலும் கூட அதன் பாகங்கள் தாங்கும் படியாக அது வடிவமைக்கப்படுகிறது. அதைச் சோதிக்கும் வழிமுறைதான் எண்டீரன்ஸ் டெஸ்ட் எனப்படுகிறது. ஒரு புதிய வெர்ஷன் உருவாக்கப்பட்டாலோ, உள்ளிருக்கும் பாகங்களில் ஒன்றோ, சிலவோ தொடர் முன்னேற்றம் (Continuous improvement  ) கருதி ஏதோ மாற்றங்கள் செய்யப்பட்டாலோ அந்தத் தொகுதியின் முதல் பிரேக்கர் இப்படியான எண்டூரன்ஸ் சோதனைக்கு ஆளாகும்.

தானியங்கி முறையில் எண்டூரன்ஸ் சோதனைச்சாலையில் வாரக்கணக்கில் அது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும். பெரும்பாலும் அவை வெற்றியிலேயே முடியும். முடிவில் அந்த பிரேக்கர் எப்படியான மாற்றங்கள் அடைந்திருக்கின்றன, எந்தெந்தப்பகுதிகள் இன்னும் நலமாக நீடித்திருக்கின்றன, எவை சேதமடைந்திருக்கின்றன என்பதையெல்லாம் ஆய்வோம். அரிதாக சோதனையின் நடுவே அது தோல்வியடையவோ, வெடித்துவிடவோ செய்யக்கூடும். அப்போதும் அதுபோலவே ஆய்வு நடக்கும். 

இதில் இன்னொரு வகையான சிறப்புச் சோதனையும் இருக்கிறது. 20000 தடவைகள் என்ற கணக்கின்றி, பிரேக்கர் சிதைந்து இயக்கம் நிற்கும் வரையிலான சோதனை.

இதைப்போன்றே, கார்கள் உற்பத்தி, என்ஜின் உற்பத்தி, மெஷின்கள் உற்பத்தி போன்ற பல துறைகளிலும் வாகனங்களும், மெஷின்களும், கருவிகளும் இந்த எண்டூரன்ஸ் சோதனைக்கு ஆளாகின்றன. 

எனக்கு இந்தச் சோதனை, எப்போதும் பல்வேறு விதமான சிந்தனைகளை கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்கும். பல்வேறு விஷயங்களில் மனிதனின் உச்சபட்ச தாங்குதிறன் என்ன? சிந்தனையில்? செயலில்? ஈடுபாட்டில்? உடலை எந்த அளவுக்கு எண்டூரன்ஸ் சோதனைக்கு ஆளாக்கலாம்? மனதை? மனித செயல்பாடுகளுக்கு யாரும் அளவீடுகளைச் செய்துவிடமுடியாது. மனித உடலும், மனமும் அதன் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எத்தகைய எண்டூரன்ஸையும் தாங்கும் வலிமை பெற்றது. எத்தனையோ விதமான மனிதர்களின் கதைகளைச் சொல்லலாம்.

அதையெல்லாம் விடுத்து, நாம் நம்மளவில் யோசித்தால் எந்த நிகழ்வுகளையெல்லாம் எனக்கு நடந்த எண்டூரன்ஸாக நான் கொள்ளமுடியும்?



சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக சுமார் 16 கிமீ நடக்கவைக்கப்பட்டேன். ஒரு இலக்கை அடைந்து மீண்டும் துவக்க இடத்துக்கேத் திரும்ப வேண்டும். செல்கையில் சாலையிலும், திரும்புகையில் கடற்கரை மணலிலும். 16 கிமீ என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மிகச்சாதாரண ஒரு தொலைவுதான். வாகன வசதிகளை அடையும் முன்பு நூற்றுக்கணக்கான கிமீகளை நடந்தேதான் நம் முன்னோர்கள் பயணித்திருக்கிறார்கள். இப்போதும் கூட கோவிலுக்குச் செல்வது போன்ற எத்தனையோ காரியங்களுக்காக எத்தனையோ கிமீகளை நடந்தே பயணிக்கின்றனர் நம் மக்கள். ஆனால் எதனாலோ, எப்படியோ கண்டிஷன் செய்யப்பட்ட எனக்கு 16 கிமீ என்பது சாதாரணமா என்பது முதல் கேள்வி. முதலில் தூரம் அறிவிக்கப்படவில்லை. போக வர 2 கிமீ இருக்கலாம் என்ற கணிப்பில் உற்சாகமாக துவங்கிய என் பயணம் எப்படி முடிந்தது? எனக்குள் என்னென்ன மாற்றங்களை அது உண்டுசெய்தது? 

முதலில் ஏதோ சிறார் மனநிலையில் ஒரு விளையாட்டைப்போலத்தான் நிகழ்வு உற்சாகமாக துவங்கியது. மூன்றாவது கிமீ-ரைத் தாண்டியபோது பரவாயில்லை என்று நினைத்தாலும் அதே அளவு திரும்பவும் நடக்கவேண்டுமே என்ற கோபம் முளைத்தது. என்னது இது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது என்ற எரிச்சல், ஆர்கனைஸர்ஸ் மீது. 4வது 5வது கிமீ கடக்கையில் கடும் கோபம். எவன் ஏற்பாடு செய்தது இதை? கால்கள் துவள ஆரம்பித்திருந்தன. வலியெடுக்கத்துவங்கியிருந்தது. பல வருடங்களுக்கு முன்னர், ஒரு சிறிய விபத்தில் வலது கால் முட்டியிலும், குதிகாலிலும் அடிபட்டிருந்த இடங்களில் வலியெடுப்பதைப்போன்ற ஒரு பிரமை. லேசாக வலி தோன்றியிருந்ததும் உண்மைதான். ஆனால் என் இயலாமைக்குக் காரணம் தேடிக்கொண்டிருந்த மனம், அதையே பூதாகரமாக ஆக்கிக்கொண்டிருந்தது. 7வது கிமீ-யில் வலது கால் பாதம் சுளுக்கிக்கொண்டதைப்போல வலி.

இந்தப் பயணம் இன்னும் பாதி தூரம் கூட வரவில்லை என்ற உண்மை பூதாகரமாக கண்முன்னால் எழுந்தது. குழுவில் எனக்குச் சாதகமாக கருத்துக்கொண்ட நண்பர்களைத் தேடினேன். சுமார் 25 பேர் இருந்த குழுவில் பாதிக்கும் மேற்பட்டோர், விளையாட்டு என்ற உற்சாகத்தை இழந்திருந்தாலும், இதனால் என்ன, பரவாயில்லை என்பது போல சுவாரசியமாக தொடர்ந்து போய்க்கொண்டிருந்தனர். 50 வயதைத் தாண்டியிருந்த இரண்டு பேர் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டதாக செல்போனில் அறிவிக்க, அவர்களை கார் வந்து அழைத்துச்சென்றது. 35 வயதுக்காரனான நான் எப்படி அந்த வண்டியில் ஏறிக்கொள்ளமுடியும். ஒன்றுமே நடவாவதது போல நடந்துகொண்டிருந்தேன். மீதமிருந்த நபர்களில் சிலர் கடுமையாக கோபப்பட்டாலும், திட்டிக்கொண்டே முன்னேறிக்கொண்டிருந்தனர். என்னைப்போலவே  என் வயதையொத்த நபர்கள் தவிப்பும், கோபமுமாய் இரண்டு பேர்தான் மீதமிருந்தனர். அவர்களும் கூட பயணத்தைக் கைவிடத் தயாரில்லை.

‘இப்படி நடக்கவைத்து எதைக் கற்றுத்தரப்போகிறான், அந்தப் படுபாவி?’ என மாறி மாறி திட்டிக்கொண்டே முன்னேறிக்கொண்டிருந்தோம். என்னைவிட வயதில் குறைந்தவர்கள் சிலர் தடுமாறவும் செய்தனர். வயதில் மூத்த சிலர் எந்தக் கவலையுமின்றி எங்களை முந்தி முன்வரிசையில் நடந்துகொண்டுமிருந்தனர். டார்கெட் எத்தனை கிமீ என்பது தெரிந்தாலாவது ஒரு ஆறுதல் இருந்திருக்கும். அதுவும் தெரியாத நிலை, இன்னும் வெறியேற்றுவதாக இருந்தது.  நல்ல உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ஓரிருவருக்கு மட்டும் இந்தப் பயணம் இனிமையானதாக உற்சாகமானதாக இருந்தது. அந்த உற்சாகம் அவர்களால் முடிகிறது என்பதற்காக இல்லை, இத்தனை பேரால் முடியவில்லை என்பதனால்தான். அவர்கள், கூடுதலாக எல்லோரையும் சியர் அப் செய்கிறேன் பேர்வழி என்று சிரித்துப்பேசி உற்சாகமூட்டி, வெறுப்பேற்றிக்கொண்டிருந்தனர்.

எட்டாவது கிமீயில் டார்கெட்டைத் தொட்டபோது மகிழ்வதா, வருந்துவதா என்றே புரியவில்லை. மீண்டும் 8 கிமீ, கடற்கரை மணல் காத்திருக்கிறது என்ற உண்மை சுட்டது. அங்கே, சற்றேனும் ஓய்வெடுக்கக் கால்களும், மனதும் கெஞ்சியது. ஆனால் அந்தச்சூழலில் உட்காருவது, தொடர்ந்து பயணிப்பதில் சிக்கல் உண்டாக்கும் என்பதை அறிந்திருந்தேன். மேலும், யாரும் அமர்வதாய்க் காணோம். 

அவரவர்களின், அத்தாட்சியைப் பெற்றுக்கொண்டு குழு மேலும் முன்னேறிக்கொண்டிருந்தது. குழுவில் கடைசியாக சென்றுகொண்டிருந்த மூவர் அணியில் நானும் இருந்தேன். 10வது கிமீரைத் தாண்டியபோது கால்கள் நிஜமாகவே வீங்கியிருந்தன. ஏற்பாட்டாளர்கள் முன்னமே எச்சரித்திருந்தும், தகுந்த காலணிகளை அணியாமல் அசட்டையாய் இருந்ததில், பாதங்களுக்குள் ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. வெய்யில் நன்கு உறைக்கத்துவங்கியிருந்த 14 வது கிமீ-ல், வியர்வையில் குளித்துக்கொண்டே, மணலில் கால்கள் புதையப்புதைய நடந்துகொண்டிருந்தேன். இப்போது எனக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லை, விளையாட்டு, பயிற்சி எதுபற்றியும் சிந்தனை இல்லை. கால்கள் மரத்துப்போயிருந்தன. எனது ஒரே நோக்கம், இந்தச்சோதனையில் தோல்வியுறாது, திட்டப்படி மீண்டும் நடந்தே அறைக்குத் திரும்பிவிடவேண்டும். அவ்வளவுதான். அதில் வெற்றியும் அடைந்தேன்.

நான் அறைக்குத் திரும்பி ஷூக்களைக் கழற்றியபோது கால்கள் சற்றே வீங்கியிருந்தன, தொடைகள், மூட்டுகள் வலியெடுத்துக்கொண்டிருந்தன. வலது கால் பாதம் சுளுக்கி வீங்கியிருந்தது. இரண்டு பாதங்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்தக் காரியத்தை என்னால் செய்யமுடிந்தது என்ற மகிழ்ச்சியைத் தவிர வேறெந்தக்குழப்பமோ, யார் மீதும் கோபமோ இல்லை. அன்று மாலை மீண்டும் பயிற்சியின் வேறொரு நிகழ்வில் பங்குபெற வந்தபோது, வழக்கமாக நடக்கும் முந்தைய நிகழ்வின் ரிவ்யூ கூட இல்லாமல், அனைவரும், நான் உட்பட அந்த அடுத்த நிகழ்வில் ஆர்வத்தோடு பங்குபெறத்துவங்கினோம்.

நன்றாக யோசித்தால், உடலுக்கும், மனதுக்கும் அவ்வப்போது எண்டூரன்ஸ் சோதனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. அதுவே முதிர்ச்சியையும், முழுமையையும் நமக்குத் தருகிறது.

நாட்கணக்கில், மாதக்கணக்கில் தனித்தீவில், காடுகளில், பாலையில் சிக்கிக்கொண்ட மனிதர்கள் மீண்டும் திரும்பிய கதைகளையெல்லாம் கேள்விப்படுகையில் அவர்களது மனமும், உடலும் எத்தகைய எண்டூரன்ஸுக்கு ஆளாகியிருக்கும் என்ற பிரமிப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

ஹிஹி.. கல்யாணம் செய்துகொண்டு ஒரு புதிய பெண்ணுடன், முதல் சில வருடங்களை வாழ்ந்து கடப்பதைக் காட்டிலும் ஒரு மனிதனின் மனதுக்கு மிகச்சிறந்த எண்டூரன்ஸ் சோதனை வேறொன்று இருக்க இயலாது என்பதை நாம் ஏற்கனவே அறிவோம்.. இல்லையா.?!

.

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


Passengers (2016) Tamil Dubbed Movie HQ DVDScr Watch Online (HQ Audio)


அளவு ஜாக்கெட்


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சின்ன வயசுலயே விறைப்புத்தன்மை குறைய என்ன காரணம்? எப்படி சரிசெய்யலாம்?...


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்


கூரைகத்தாழை மீன்கள் அதிகளவில் சிக்கின காரைக்காலில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு...


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...