ஷாஷங் ரிடம்ஷன் (The Shawshank Redemtion) எனும் இந்தப் படத்தைப் பற்றி எந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தாலும், ‘எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காத ஒருவனுடைய கதை, நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டிய கருத்து’ என்ற வரிகள் தவறாமல் இருக்கும். ’அடச்சே, ஏதோ ஆர்ட்ஃபிலிமாக இருக்கப்போவுது’ என்பது போலவே ஃபீல் ஆகி, படம் பார்க்கும் ஆர்வத்தையே இழந்துவிடுவோம். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
’எப்படித்தான் இவ்வளவு அழகான, சுவாரசியமான, விறுவிறுப்பான கதையைப் பிடிக்கிறான்களோ இந்த ஹாலிவுட்காரனுக..’ என்ற வியப்புதான் முதலில் ஏற்படுகிறது. அதன் பின்னர்தான் அதிலிருக்கும் தன்னம்பிக்கைச் செய்தியெல்லாம்.
விதவிதமான குற்றங்களுக்காக அதிகபட்சம், நாற்பதாண்டுகள், ஐம்பதாண்டுகள் என கிட்டத்தட்ட முழு வாழ்நாளையுமே சிறையில் கழித்தாக வேண்டிய நிலையில் ஷாஷங் சிறைச்சாலையினுள் கைதிகள். கூண்டிலடைபட்ட பறவைகளுக்கு ஒரு கட்டத்தில் வானம் வசமிழந்து போய் பறப்பதே வலி தருவதாய் மாறிவிடக்கூடும். சிறைக்கூட வாழ்க்கை மட்டுமே எல்லாமாகிவிடும். விடுதலை என்பது நோக்கமானாலும், அது கிடைக்கும் போது அது இன்னொரு வகையான தண்டனையாக இருந்துவிடலாம். அப்பேர்ப்பட்ட நிலையில் ஒரு கைதி ’ரெட்’.
மனைவியை கொலை செய்யத்துணிந்து, கடைசியில் மனம் மாறி விலகிச்சென்ற பின்பும், அவரின் மனைவியைக் கொலை செய்த பழியில் சிக்கி, ஷாஷங் சிறைச்சாலை வருகிறார் ‘ஆன்டி’ எனும் ஒரு வங்கி அதிகாரி.
ஷாஷங் சிறைக்கூடம், அதுவரை எவருமே தப்ப முடிந்திராத ஒரு வேற்றுலகம்.
ஆன்டி, ஒரு சாதாரண கைதியாக இல்லை. வேறு யாரையும் போல, அவனிடம் சிறையின் துவக்க நாட்கள் எந்தவித பயத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. செய்யாத குற்றத்துக்காக தண்டனை பெறுகிறோமே என்ற சுய பச்சாதாபம் அவனிடம் இல்லை. அவனது அமைதியை யாரும், எந்தச் சூழலும் கெடுக்கமுடியவில்லை. ஒரு சூழலில் ரெட்டும், ஆன்டியும் நண்பர்களாகின்றனர். சிறைக்கூட அதிகாரிகளுக்கான வரி ஏய்ப்பு வழிகளைச் சொல்லித்தருவதால் அவர்களுக்கும் நட்பாகிறான். அந்த நட்பில், அதிரிகாரிகளின் சுயநல நோக்கே தூக்கலாக இருக்கிறது. அவனது, நியாயமான ஓரிரு அத்து மீறலுக்காக அவன் வீரியமாகத் தண்டிக்கவும் படுகிறான். இருப்பினும் ரெட்டுக்கும், இன்னும் சில கைதிகளுக்கும் பாலையிலும், சோலையிலிருப்பதைப் போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தித்தருகிறான் ஆன்டி.
ஒரு நாள் ரெட்டிடம் இப்படிக் கூறுகிறான், ‘என்றாவது ஒரு நாள் நாம் விடுதலை பெறுவோம். நான் முதலில் விடுதலையடைந்தால் உனக்கான ஒரு செய்தியை ஓரிடத்தில் விட்டுச்செல்வேன். மீதமிருக்கும் நல்வாழ்க்கையை உன்னைப்போல ஒரு நண்பனுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறேன்’. சொல்லிவிட்டு அந்த இடத்தைப் பற்றியும் குறிப்பு தருகிறான்.
காலங்கள் உருண்டோடுகின்றன.
இருபதாண்டுகள் கழிந்த ஒரு நாளின் இரவுப்பொழுதில், ’ஆன்டி’ ஷாஷங்கின் காற்றோடு கலந்து காணாமல் போகிறான்.
எப்படி?
ஒரே ஒரு நாளின் சில மணி நேர தப்புதல் நிகழ்வுக்காக, 20 ஆண்டுகளாக ஆன்டி ஒவ்வொரு நாளும் தயாராகிக்கொண்டிருந்தது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. அவன் சிறைக்குள் செய்த ஒவ்வொரு காரியமும் அவனது நோக்கம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. திட்டமிடலும், உழைப்பும், நம்பிக்கையும் ஒரு மனிதனிடம் செதுக்கியிருக்கும் பேரழகைக் கண்கள் விரியக் காண்கிறோம்.
பின்னர், பெயிலில் வெளியேறும் ரெட், நண்பனைத் தேடியடைகிறார். அடையாளங்கள் மாறிய சூழலில் அவர்களுக்கான மீதமிருக்கும் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.
இந்தக் கதை முழுதுமே ரெட்டின் மூலமாக ஓவர்லாப்பில் நமக்குச்சொல்லப்படுகிறது. ரெட் காரெக்டரில் மார்கன் ஃப்ரீமேன். அவருடைய வசீகரிக்கும் குரல், முதல் காட்சியிலிருந்தே நம்மைக் கட்டிப்போடுகிறது. ஃப்ரீமேன் மற்றும் டிம் ராபின்ஸ் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் நாம் கதையுடன் திளைக்கிறோம். முதல் காட்சியிலிருந்தே நம்மைத்தொற்றும் விறுவிறுப்பு, இறுதியில் நம்பிக்கை தந்த மகிழ்ச்சி, உற்சாகப்புன்னகையுடன் நிம்மதிப் பெருமூச்சுடன் நிறைவடைகிறது.
’எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காத ஆன்டியின் கதை, நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டிய கருத்தாகும்’.
.