Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

துப்பாக்கி - சிறுகதை

$
0
0
நான் அன்று தாம்பரம் ஏழாவது பாயிண்டில் நின்றுகொண்டிருந்தேன். முழுவதும் லோட் செய்யப்பட்டிருந்த பிஸ்டல் இடுப்பில் அதன் உறையில் உறங்கிக்கொண்டிருந்தது. சக்திவாய்ந்த டார்ச் லைட் ஒன்று என் கையில் இருந்தது. கையில் வாட்ச் இல்லாததால் செல்போனை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். மணி 10.50. இன்னும் பத்து நிமிடங்களில் கிளம்பிவிடலாம். 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இதே பாயிண்டில்தான் ட்யூட்டி. ட்ராக்குக்கு அருகே புதிய ட்ராக் வேலைக்காக போடப்பட்டிருந்த இரும்புத் தளவாடங்கள் தொடர்ச்சியாக திருடு போய்க்கொண்டிருந்தன. அதோடு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதே பகுதியில் ஒரு கொலையும் வேறு நடந்திருந்தது. அதுவும் கள்ளத்துப்பாக்கியால் சுடப்பட்டு அந்தக் கொலை நிகழ்ந்திருந்தது. அதனால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இந்த விஷயத்தில் அதிக தீவிரம் காண்பித்து இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பாதுகாப்பு போடப்பட்டதிலிருந்து திருட்டு என்னவோ நிகழவில்லை. ஆயினும் யாரையும் பிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு அப்நார்மல் நடமாட்டமும் எங்கள் கண்ணில் படவில்லை.

கிருஷ்ணமூர்த்தி சிலரைப் போல விஷயத்தை ஆறப்போட்டு என்ன நடந்தால் நமக்கென்னவென்று நழுவுகிற ஆளில்லை. இந்தப் பிரச்சினையை சமாளிக்க புதிதாக ரெக்ரூட் ஆகியிருந்த எங்கள் டீமிலிருந்து நன்கு பயிற்சிபெற்ற துடிப்பான 4 பேர்களைக் கொண்டு ஒரு சிறிய டீமை உருவாக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த அளவுக்கு பிரச்சினையில் தீவிரம் காண்பிக்கிறாரோ அந்த அளவுக்கு எங்களுடைய பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுபவர். அதற்காகவே இந்த இடத்துக்கு பிஸ்டல், லத்தி போன்றவையே போதுமானவைதான் எனினும் சில அலுவலக சிரமங்களுக்கிடையேயும் ஸ்பெஷல் வெப்பன்ஸும் கூட இரவுப்பணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

ஆறாவது பாயிண்டிலிருந்த ராஜுவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கிருஷ்ணமூர்த்தி முதல் நாள் பேசுகையில், ‘பாய்ஸ், இதெல்லாம் பயன்படுத்துறதுக்கு இல்ல, எமர்ஜென்ஸிக்குதான். முக்கியமா அக்யூஸ்ட்ஸால உங்களுக்கு எந்த பிரச்னையும் வந்துடக்கூடாதுன்னுதான். வெப்பன்ஸ் ஹெவியா இருந்தா மெண்டலி உங்களை நெருங்கப் பயப்படுவாங்க. ஆனா அதுவே அவங்களை பிடிக்கமுடியாம போறதுக்கும் காரணமாயிடும். அதையும் மீறி யாரையாவது ட்ரேஸ் பண்ணமுடியுதா பாருங்க. கடந்த வருஷத்துல சென்னை லிமிட்டுக்குள்ள நிறைய கேஸ்ல கள்ளத்துப்பாக்கி புக்காயிருக்கு. ரொம்ப அலர்ட்டா இருங்க.’ என்று எச்சரித்திருந்தார். 

ராஜுவை நெருங்கியிருந்தேன். அவனது தோளில் இருபது புல்லட்டுகள் கொண்ட மேகஸின் லோட் செய்யப்பட்டிருந்த இன்ஸாஸ் ரைபிள் தொங்கிக்கொண்டிருந்தது. 

ட்ரைனிங்கில் இன்ஸாஸ் எல்எம்ஜியில் கோல்டு மெடல் வாங்கியவன் நான். அரை கிமீக்கு அப்பால் உள்ள டார்கெட்டையும் துல்லியமாக தாக்கக்கூடியது இன்ஸாஸ். எங்களிடம் முதல் இரண்டு நாட்கள் இருந்த துறுதுறுப்பு, அப்புறம் மெல்லக் குறைய ஆரம்பித்திருந்தது. தினமும் வருவதும், கையெழுத்திட்டு இந்த துப்பாக்கிகளைப் பெறுவதும், மீண்டும் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு கிளம்புவதுமாக கொஞ்சம் சலிப்பாகிவிட்டிருந்தது என்னை. சமயங்களில் இந்த துப்பாக்கி நமக்கு பாதுகாப்புக்காக இருக்கிறதா? இல்லை, அவற்றின் பாதுகாப்புக்காக நாம் இருக்கிறோமா? உறையிலிருந்த பிஸ்டலை விடுவித்து கையிலெடுத்தேன். ராஜூவை நெருங்கியிருந்தேன்.

“கிளம்பலாமா ராஜூ.?”

“சும்மா ஸ்டேஷன் டூட்டி பார்க்குற மாதிரி ஆயிடும் போலயிருக்கே.. ஒண்ணும் சிக்க மாட்டேங்குதே?”

“அதத்தான் நானும் ஃபீல் பண்ணிகிட்டே வந்தேன்..” சிரித்தேன். ஒன்றாக ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

“இந்த மூணு மாசத்துலயே தெரிஞ்சிபோச்சி. ஏன் சீனியர்ஸெல்லாம் இப்படியிருக்காங்கன்னு.. இப்படியே வருசக்கணக்கில் போனா எப்படி ஃபிட்னஸ் மெயிண்டெயின் பண்றதுக்கு ஆர்வம் இருக்கும்.? இதையும் மீறி ஒண்ணு ரெண்டு பேர் கடமையேனு இன்னும் ஃபிட்டா இருக்காங்க பார்க்கிறியா.. செண்ட்ரல்ல சந்திரமோகன்னு ஒருத்தர் பார்த்திருக்கியா? அவருக்கு 50 வயசாம். ஆளு பாத்தியா.. எப்பிடி இருக்கார்னு..”

“அதெல்லாம் டூட்டியைத் தாண்டி பர்சனலா ஒரு ஆர்வம் இருந்தாத்தான் பண்ணமுடியும்..” கையிலிருந்த பிஸ்டலின் மேகஸினை விடுவித்து அந்த இருட்டிலும் புல்லட்டுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் லோட் செய்து உறையில் போட்டேன். 

“ஒண்ணு பண்ணலாம் ராஜு. நாளைக்கு நாம மஃப்டியில் இங்க சுத்துவோமா? கிருஷ்ணமூர்த்தி சார் இதெல்லாம் சொன்னா கேப்பாரான்னு தெரியலையே.. மஃப்டின்னா கண்டிப்பா ஏதாவது மாட்டும்னு நினைக்கிறேன்..” அவனுடைய இன்ஸாஸை எடுத்து வ்யூ ஃபைண்டரில் தூரத்தில் தெரிந்த ஸ்டேஷனைப் பார்த்தேன்.

“சொல்லிப்பாப்போம்.”

அப்போதுதான் எங்களுக்கு இடதுபுறமாக கடைசி ட்ராக்கைத் தாண்டி இருந்த புதர்களில் ஒரு சலசலப்பை கவனித்தேன். 

ராஜுவைத் தோளில் தொட்ட விநாடிக்குள் அவனும் அதை உள்வாங்கியிருந்தான். இருவரின் உடல் முழுதும் ஒரு அவசர அலர்டுக்குள் விழ, ராஜு ஒரு புல்லட்டைப்போல என்னைக் கடந்து பாய்ந்தான். முதல் ட்ராக்கை ஒரு பந்தைப்போல தாண்டி ஓடினான். அடுத்த சில விநாடிகளில் இருவரும் கடைசி ட்ராக்கை நெருங்கியிருந்தோம். எங்களது சலசலப்பும், டார்ச்சின் ஒளி வெள்ளமும் அதற்குள்ளாக இரண்டு பேரை புதரிலிருந்து கிளம்பி வலப்புறமாய் ஓடவைத்திருந்தது. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையேயான தூரம் 150 மீட்டர்களுக்குள்ளாகத்தான் இருக்கும். ராஜுவின் வேகத்துக்கு முன்னால் அடுத்த சில நிமிடங்களில் இரண்டு பேரும் கோழிக்குஞ்சுகளைப்போல எங்கள் கைகளில் சிக்கிவிடுவார்கள். அலர்ட்டாகியபின்னர் இந்த டார்ச்சை அணைக்கவிரும்பவில்லை நான். அவர்கள் தப்பிவிடும் ஒரு சிறுவாய்ப்பையும் நான் தரவிரும்பவில்லை. அப்போதுதான் கவனித்தேன், இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவன் ஓடிக்கொண்டே ஒரு விநாடி திரும்பி எங்களைக் கவனித்தான். தூரத்தையும், சிக்கலின் வீரியத்தையும் அளவிடுவதற்கான முயற்சி. சரியாக அப்போது அவன் கையிலிருந்த துப்பாக்கி வெடித்தது. 

இதை நான் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை, ராஜுவும். அந்த ஒலியையும், வெளிச்சத்தையும் நான் தவறவிடவேயில்லை. சூழலை மனம் முழுதும் உள்வாங்கிக் கொள்வதற்குள்ளாக புல்லட் ராஜுவை வலது தொடையில் தாக்க, அவன் ட்ராக் ஜல்லிக்கற்களுக்குள் புரண்டு விழுந்தான். அவனை நெருங்கி நிலைமையை விநாடிகளுக்குள் புரிந்துகொள்வதற்குள், ராஜு ரத்தவெள்ளத்திலும் என்னைப்பார்த்து,

“கோல்ட், பெரிய ரிஸ்க்.. அடுத்த புல்லட் வர்றதுக்குள்ள முந்திக்குங்க..”

மறைந்துகொள்ள இடமில்லாமல் ராஜுவோடே கற்களில் விழுந்தேன். அனிச்சையாய் பிஸ்டலை எடுத்த வலதுகையை நிறுத்தி ராஜுவின் இன்ஸாஸை எடுத்தேன். பிஸ்டல் ரேஞ்சைக் கடந்துவிட்டார்கள். முகத்தில் பலத்த சோர்வும், வியர்வையும் பொங்கும் நிலையிலும் ராஜு டார்ச் வெளிச்சத்தை ஓடுபவர்களை நோக்கிப் பாய்ச்சினான்.

க்ளீன் ஷாட்ஸ். டிரிக்கரிலிருந்து போதுமான விநாடிகளுக்கு என் விரல்கள் விலகவேயில்லை. துப்பாக்கி வைத்திருந்தவன் விசையினால் உந்தப்பட்டவன் போல தெறித்துவிழுந்தான். மூன்று புல்லட்டுகள். ஒன்று கூட குறி தப்பியிருக்காது. தலையின் கொஞ்சப் பகுதியாவது அவன் உடலில் மிஞ்சியிருந்தால் ஆச்சரியம்தான். விநாடிகளுக்குள்ளாக என் மனம் ஆசுவாசத்தையும், பொறுமையையும் கடைபிடித்ததில் துப்பாக்கி சற்றே கீழிறங்க முன்னதாக ஓடிக்கொண்டிருந்தவன் இடுப்பில் ஒரே ஒரு புல்லட்டை வாங்கிக்கொண்டு சரிந்தான்.

பலப்பல உணர்வுகள் உந்தித்தள்ள படபடப்பாக உணர்ந்தேன். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ?

வாக்கி டாக்கியில் நான் தகவல் சொல்வதற்குள்ளாகவே, எழுந்த துப்பாக்கி ஒலியினால் ஸ்டேஷனிலிருந்து குழு ஓடி வரத்துவங்கியிருந்தது. அடுத்த அரைமணி நேரத்துக்குப் பின்னர் சூழல் கட்டுக்குள் வந்தபிறகுதான் ஒரு செய்தி என் காதுக்கு வந்தது. இருநூறு மீட்டர்களுக்கு முன்பாக ஒரு இளம்பெண் வன்புணர்வுக்கு ஆளாகி, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்திருந்தாள்.

என் கைகளில் இன்னும் லேசாக கதகதப்புடன் இருந்த இன்ஸாஸைப் பார்த்தேன். என் புல்லட்டுகள் தவறு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

.


Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!