கொஞ்ச நாட்களாக ஊரிலில்லாததால், நேற்றுதான் ரெமோ, றெக்க படங்களைப் பார்க்க நேர்ந்தது. அவை சொல்ல வரும் கருத்துகளையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ளாமல் படம் பார்த்தால் கூட அத்தனை போரடிக்கக்கூடிய, சவசவ என இழுவையான, அறுவையான, கடுப்பேற்றக்கூடிய படங்கள்தான் இரண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல!
ரஜினி, கமலுக்குப் பின்பான ஹீரோ வரவுகள் அனைவரிடமுமே எப்படியாவது ரஜினியாகிவிட வேண்டும் என்ற முனைப்புதான் இருக்கிறது. கமல்ஹாசன் போல ஆவது உண்மையில் எளிது. நல்லது. ஆனால், அதைவிடுத்து எல்லோருக்கும் குறி ரஜினியின் இடம்தான். அந்த மாசு இடம் தரும் போதை! ஆனால், அது அத்தனை எளிதான காரியமல்ல! அதற்கான தகுதியை, பயிற்சியை, ரசனையை வளர்த்துக்கொண்டோமா, இல்லையா என்பதையெல்லாம் யாரும் எண்ணிப்பார்ப்பதும் கிடையாது. அஜித், விஜய் இருவரின் பாதையுமே அதுதான். அதில் அவர்கள் இருவருமே ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள் எனலாம். ஆனால், அந்த நெருப்பில் விழுந்து மாய்ந்துபோன விட்டில் பூச்சிகள்தான் அதிகம். சிம்பு, விஷால், ஆர்யா, ஜீவா என உதாரணங்கள் ஏராளம். விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றோரெல்லாம் வேறேதாவது செய்துதான் தங்கள் இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாசு எல்லோருக்கும் கைகொடுப்பதில்லை. அதே வழியில் தப்பாமல் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது இப்போதைய சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஜோடி!
தமிழ்படத்துக்கு ரோப் ஃபைட்டை அறிமுகப்படுத்தியவனைக் கட்டி வைத்து உதைக்கலாம். அப்படிப் படுத்துகிறார்கள். றெக்க படத்தில், ராஜ்கிரண் போல இந்தப்பக்கம் ஒரு உஸ்ஸ், அந்தப்பக்கம் ஒரு உஸ்ஸ் என ஒரே குத்தில் ஃபைட்டர்களை பறக்க விடுகிறார் விஜய்சேதுபதி! ராஜ்கிரணாவது கையிலும், முகத்திலும் கிடுகிடுவென ஒரு கடுமையைக் காண்பித்துக்கொண்டிருப்பார். இவரோ வெயிலில் அலைந்துவிட்டு வந்து பேன் காற்றில் நிற்பது போல நிற்கிறார். ஸ்லோமோஷனில் இப்படி சண்டைக்காட்சிகளை எடுத்துவிட்டால் மாசு வந்துவிடுமென நினைக்கிறார்கள் போலும். முடியல! விஜய்க்கும், லட்சுமி மேனனுக்கும் இடையேயான காதல் காட்சிகளும், ரொமான்சும் தாங்கல! ரெண்டு டூயட்!! படுபாவி டைரக்டர் சார்.. உங்க மனசுல இரக்கமே கிடையாதா? ரொமான்சுக்கும், விஜய்சேதுபதிக்கும் பயங்கரமான வாய்க்காத்தகறாறு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் அடுத்த டைரக்டர் திலகங்களே! ஏதோ ஒரு பிளாஷ்பேக்கும், கொஞ்சம் செண்டிமெண்டும் வந்ததால், பிழைத்தோம்!
ரெமோ! ஓரிரு நகைச்சுவை காட்சிகள் எனில் பரவாயில்லை. படம் முழுதும் வரவிருக்கிற லேடி கெட்டப் என்றால் கொஞ்சம் சிந்திக்க மாட்டீர்களா ஐயா? சிவாவின் லேடி கெட்டப்பும், டப்பிங்கும் சகிக்கலை. இத்தனைக்கும் சிவா ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டும் கூட. வாய்ஸ் மாடுலேஷனை ரிப்பேர் பண்ண இன்னைக்கு டெக்னாலஜியெல்லாம் வேற இருக்குதாமே ஐயா!! றெக்கைய விட சவசவ என ஒரு கதை இதில். ஒரு பெண்ணைக் காதலிக்க வைக்கணும், அதுவும் பூரா ஏமாத்தி, பொய் சொல்லிச் சொல்லியே! எப்புடி.. நல்ல கதைல்ல.. அதுவும் கிளைமாக்சில் அந்தம்மா இவரைக் காதலிக்கத்தான் போகுது என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த பாரெழவுதான். நியாயப்படி, நர்சு வேடத்தில் போய் மனசை மாத்தினதுக்காக அந்த நர்சைத்தான் ஹீரோயின் காதலிச்சிருக்கணும். பதிலாக, வானத்தில் பலூன் விட்ட சாதனைக்கான ஹீரோவைக் காதலித்துத் தொலைக்கிறார். அதைத் தவிர வேற எதுவுமே ஹீரோ செய்யவில்லை. எருமைச்சாணி போல இந்தப்படத்திலும் ஒரு டைரக்டர். படம் வேறு நன்றாக ஓடுகிறதாம்.. ஓடும்! ஓடத்தான் செய்யும்.. நம்மாளுகதான் எதுக்கு ஏன்னே தெரியாம இப்படித்தான் காரியம் பண்ணுவாங்க.. அப்பதானே நாலு பேரை பைத்தியமா அடிக்கலாம்.. அந்த டைரக்டர் இம்மா நேரத்துக்கு நம்மாலதான் படம் ஓடிகிட்டிருக்குன்னு நினைச்சு.. குமோனு இன்னொரு ஸ்கிரிப்ட் எழுதிகிட்டிருப்பார்.
ஒண்ணு மட்டும் நிச்சயம். ரஜினி மாதிரி ஆகிறாரோ இல்லையோ, அஜித், விஜயை விட சிவகார்த்திகேயன் தொடப்போற உயரம் அதிகம்னு மட்டும் நல்லா தெரியுது. எனக்கே இதைச் சொல்ல பிடிக்கலைன்னாலும், அதுதான் உண்மை. அதுக்கு ஒரு மூஞ்சி வேணும். அது இருக்கு இவர்கிட்ட! தைரியமா மாசு படங்கள் பண்ணலாம். எத்தனை டம்மி படங்கள் தந்தாலும், அஜித் போல ஒரு ஓபனிங் இருந்துகொண்டே இருக்கும்னு தோணுது. ஆனா, ரெமோ மாதிரி படங்கள் பண்ணாம, உண்மையில் நல்ல படங்களும் (நல்ல படங்கள்னா லிட்டரலா அப்படியே எடுத்துக்க வேண்டாம். ஆக்ஷன், காமெடினு உருப்படியா பண்றதை சொல்றேன்) பண்ணி அந்த இடத்துக்குப் போனா அவருக்கும் நல்லது, நமக்கும் மகிழ்ச்சி!
சிவகார்த்திகேயன் முன்னாடி விஜய்சேதுபதி மாசு படங்கள் பண்ணியெல்லாம் நிற்கவே முடியாது. மரியாதையாக இப்போதே விழித்துக்கொண்டு உருப்படியாக, சின்சியராக படம் பண்ணவில்லையெனில், போன இடம் புல்லு முளைத்துவிடும். விஜய்சேதுபதி மட்டுமல்ல, தனுஷ், விக்ரம், சூர்யா வகையறாக்களும் ஒழுக்கமாக படம் பண்ணுவது.. அவர்களுக்கு நல்லது! :-)