அவளிடமிருந்து இதை மறைக்க வேண்டும் என்று திட்டமெல்லாம் கிடையாது, எனினும் ஏனோ சரியான சந்தர்ப்பம் கிடைக்காமலிருந்தது. கல்யாணம் ஆகி, இதோ ஒரு வருடம் ஆகப்போகும் சூழலில் நேற்று இரவில் கொஞ்சல் பேச்சுக்களூடே சொல்லிவிட்டேன். முன்னதாகவே ஓரளவுக்கு ரசனை சார்ந்தும் என் மனதுக்கு நெருக்கமாகியிருந்தாள் உமா கௌரி. டிகிரி படித்திருந்தாலும் கிராமத்தில் வளர்ந்தவள் என்பதால் இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று முதலில் சற்று தயக்கம் இருந்தது.
இது மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் எந்தப் பிரச்சினையும் அவளால் இல்லை. அம்மாவுடன் அவளுக்கு இதுவரை எந்தத் தகறாறும் ஏற்படவில்லை. இவ்வளவுக்கும் மாதத்துக்கு பாதி நாள் அம்மா இங்கேதான் இருக்கிறார். ’வேலைக்குப் போவதில் இஷ்டமில்லை, வற்புறுத்தாதீங்க ப்ளீஸ்’ என்று வந்த சில நாட்களிலேயே சொல்லிவிட்டாள். ‘புண்ணியமாப் போச்சு’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். சினிமாவுக்கோ, வெளியே வேறெங்குமோ போகவேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. நானாக அதுவும் சமயங்களில் வற்புறுத்தித்தான் அழைத்துப் போகவேண்டியிருந்தது. சமையல், வந்த புதிதில் கொஞ்சம் சோதனையாக இருந்தாலும் இப்போது நன்றாகத் தேறிவிட்டாள். விஷயங்களில் ஆர்வம் இருக்கிறது. எதையும் பாஸிடிவாக எடுத்துக்கொள்கிறாள். எப்போதாவது லேசாக கோபப்பட நேர்ந்தாலும் உடனே எதிர்த்து வாயாடாமல் அமைதியாக எடுத்துக்கொள்வதோடு சற்று நேரத்தில் சகஜமாகிவிடுகிறாள். இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?
இந்த விஷயத்தில்தான் கொஞ்சம் பயமுறுத்திவிட்டார்கள் நண்பர்கள். இதையெல்லாம் சொன்னபோது கூட, ‘என்ன, கல்யாணம் ஆகி ஒரு வருசம் இருக்குமா கேகே.. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்பிடி? பாரு இனிமேதான் இருக்குது’ என்று பில்டப்பை மெயிண்டெயின் செய்கிறார்கள். எனக்கு இப்போது எந்த அவநம்பிக்கையும் இல்லை அவள் மீது. அதோடு மட்டுமல்ல, இரண்டு நாட்களுக்கு மேல் ஊருக்குப் போய்விட்டாளானால் என்னால் இங்கு இருக்கமுடியவில்லை. ’எப்போதடா வருவாள்’ என்று ஆகிவிடுகிறது.
இதுபோன்ற நிலையில்தான் நேற்று எனது பழைய காதலைப் பற்றி அவளிடம் சொன்னேன். உமாவைப் பெண் பார்க்கப்போன நாளைப் பற்றி அந்தப்பேச்சு ஆரம்பித்து கடைசியில் அங்கு வந்துவிட்டது. இயல்பாக ஸ்ரீலேகாவைப் பற்றிச் சொல்லத்துவங்கினேன்.
”நான் பிளஸ் டூ படிக்கும் போது, ஸ்ரீலேகாவின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி அவர்கள் குடும்பத்தோடு எங்கள் ஊருக்கு வந்தார்கள். அதிலிருந்து ஐந்து வருசத்துக்கு முன்னாடி அவருக்கு மீண்டும் பதவி உயர்வோடு கோவைக்கு மாற்றலாகிப் போகும் வரை எங்கள் ஊரில்தான் இருந்தாள். பள்ளி, கல்லூரி எல்லாம் எங்கள் ஊரில்தான். அவங்க உண்மையில் நமக்கு தூரத்துச்சொந்தம்ங்கிறதால அவங்க அப்பாவுக்கு எல்லாமே எங்க அப்பாதான். அவ்வளவு பிரியமா இருந்தாங்க இரண்டு பேரும். ரெண்டு தெரு தள்ளிதான் அவங்க வீடு.
அவள் வந்ததிலிருந்தே எனக்கு குறுகுறுனுதான் இருந்தது. மூணு வருசம் கழிச்சு நான் இன்ஜினியரிங் தேர்ட் இயர் படிக்கும் போது சொல்லிட்டேன். அவளும் சரின்னுட்டா. வீட்டுக்கெல்லாம் தெரியாது. அப்புறம் ஒரு ரெண்டு வருசம்தான் இருக்கும். ஒரு முத்தம் கூட கொடுத்துகிட்டது கிடையாது. நல்லா பழகிக்கிட்டிருந்தோம். ஆனா ஒருநாள், எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதுதான் போச்சு.. போட்டு புரட்டி எடுத்துட்டாங்க. என்னவோ செய்யக்கூடாத வேலை மாதிரி சண்டையாகி வீட்டோட பிரிஞ்சிட்டாங்க. அப்புறம் ஒரு ரெண்டு வருசத்துக்கு ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமப் போயிடுச்சு..”
உமா ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அப்புறம் கடைசியா அவரு மாற்றலுக்கு ட்ரை பண்ணிகிட்டே இருந்துருக்காரு. கிடைச்சதும் போயிட்டாங்க. இப்போ கொஞ்ச நாளா திரும்பவும் எங்க அப்பாம்மா மட்டும் பேச ஆரம்பிச்சுகிட்டாங்க.. அவ கல்யாணப் பேச்சு வந்தப்போ நான் நல்ல வேலையில இல்ல, ஸ்ரீலேகா அப்பாவும் ஒண்ணும் கேட்கலை, எங்கப்பாவும் ஒண்ணும் சொல்லலை. அவரா வெளிய வரன் பாத்து நிச்சயம் பண்ண, எங்கப்பா முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு வந்துட்டாரு..”
“அப்புறம் என்னாச்சு? நீங்க பாத்து பேசிகிட்டீங்களா?”
“எங்க? பிரிஞ்சதோட சரி. ஒரு பேச்சு வார்த்தை கிடையாது. அவ கல்யாணத்தப்போ கொஞ்சம் குறுகுறுனு எதுனா பண்ணுவோமானு இருந்தது. எதுக்கு பெரியவங்களை கஷ்டப்படுத்திக்கிட்டுனு விட்டுட்டேன். ஒரு ரெண்டு தடவை பார்த்திருப்பேன், ஆனா இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை பேசுனதில்லை..”
உமா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். என் குரல் லேசாக கம்முவதைப்போல இருப்பதாக எனக்கே பட்டதில், சற்றே சுதாரித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே ஜாலியாக இருப்பதைப்போல காட்டிக்கொள்ள முயன்றேன்.
“ஆனா, இப்போ அவளை நினைச்சுகிட்டாலும் தனி கிரேஸ்தான்” என்று சிரித்தேன். அவளும் சிரித்தாள்.
“நான் பார்த்திருக்கேனா?”
“ம்ஹூம். நம்ப கல்யாணத்துக்கு கூட அவ வரலை, ஆனா அவங்க அப்பாம்மா வந்திருந்தாங்க..”
“இங்க, கோவையில எந்த ஏரியா?”
“காந்திபுரம்தான்”
அடுத்த பத்தாவது நாளிலேயே மூன்றாவது முறையாக ஸ்ரீலேகாவை பார்ப்பேன், அதுவும் உமாகௌரி சகிதமாக என்று நான் நினைக்கவே இல்லை. காந்திபுரத்தில் அவளது வீட்டுப் பக்கமிருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு உறவினர் கல்யாணத்துக்கு நானும் உமாவும் போகவேண்டியிருந்தது. அது உண்மையில் ஸ்ரீலேகாவின் உறவினர் வீட்டுத் திருமணம்தான். அப்பா, அம்மா போகவேண்டிய நிகழ்ச்சி. அப்பா வரமுடியாததால் தம்பியை அனுப்பி உடன் எங்களையும் போகச்சொல்லியிருந்தார்.
சிவப்பு நிறப் பட்டுப் புடவையில், கையில் குழந்தையுடன் அவளைப் பார்த்தேன். பலரது நலம் விசாரிப்புகளைக் கடந்து அவளருகே வந்த போது தயக்கமாய் அருகே வந்தவள் ஒரு கீற்றுப் புன்னகையுடன், மெதுவே வரவேற்று, உமாவுடன் நட்பாய் புன்னகைத்துக் கரம் பற்றி நலம் விசாரித்தாள். உமா என்று ஒருத்தி இருந்ததாலேயே இந்த பேச்சு நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. இல்லாவிட்டால் ஒரு தூரத்து முகம் பார்த்தலுடன் முடிந்து போயிருக்கும்.
நான் சற்றே விலகி ஆண்கள் பக்கம் ஒதுங்கி உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதும் இருவரும் தூரத்தில் பேசிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. முதல் முறையாக பார்ப்பவர்களுக்குள் அப்படி என்னதான் பேசிக்கொள்ள விஷயமிருக்கும்?
மதிய உணவுக்குப் பின் வாசலில் நின்று கொண்டிருந்த போதுதான் கவனித்தேன், லேகாவும் அவள் அம்மாவும் எதையோ யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் வாசலில். அவளது அம்மாவின் கையில் குழந்தை. எதையோ யோசித்தவர், என்னை நோக்கி,
“கபிலன், ரெண்டு தெரு தள்ளிதான் வீடு. பிள்ளைக்கு பால்பவுடரை மறந்து வீட்லயே வைச்சிட்டு வந்துட்டா. மாமாவை காணோம். இவளைக் கொஞ்சம் பைக்ல கூட்டிட்டுபோயிட்டு வந்துடறியா?” என்றார்.
யோசனையோடே நடந்து பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோதுதான் உமா என்னை நோக்கி வருவதைக் கவனித்தேன். அருகில்தான் எங்கேயோ நின்று கொண்டிருந்திருக்க வேண்டும்.
“மதுரை சித்தப்பா உங்களை தேடிகிட்டிருக்காங்க பாருங்க..” என்று வண்டியின் சாவியை இயல்பாக பிடுங்கியவள், அவள் பின்னாலேயே வந்த என் தம்பியிடம் அதை எறிந்தாள்.
“அக்காவை நீங்க கூட்டிட்டு போய்ட்டு வாங்க. சீக்கிரம் வந்துடுங்க, நேரமாச்சு.. நாம கிளம்பணும்.” எனக்கென்னவோ உமா அப்படிச் செய்ததும், சொன்னதும் இயல்பாக இருந்ததாகவே பட்டது.