எங்கிருந்தோ ஒருத்தி வந்தாள். அவள் ஏதோ மாயப்பிசாசாக இருக்க வேண்டும்.
ஒரு நாள் பெருமனதைக் கொண்டவள் போலிருந்தாள். அந்தப் பேரன்பும், அவளின் அணைப்பும்தான் இந்த வாழ்வின் இலக்கு, அதை அடைந்துவிட்டோம் என்று தோன்றியது.
ஒரு முறை பேரழகைத் தாங்கிய இளங்கன்னியாகத் தோன்றினாள். தன்னிலை மறக்கச்செய்தாள். தணல் போல இருந்தது அந்நிகழ்வு. இரண்டாவதையும் அடைந்துவிட்டோம், இனிமேல் இன்னொரு நிலையிருக்க வாய்ப்பில்லை என்பதாய் உணர்ந்தேன்.
மற்றொரு நேரத்தில், அலைபாயும் கரிய உருவம் கொண்டிருந்தாள். வதைத்தொழிலின் பிரதிநிதியாகவும், நிபுணராகவும் அவள் இருக்ககூடும். வாழ்வென்பதின் சரிபாதி வலி, யாராவது உனக்கதைத் தந்தேதான் ஆகவேண்டும். அதையும் நானே செய்துவிடுகிறேன் என்றாள். மிக வலிதான், ஆயினும் இந்நிலையையும் எட்டிவிட்டால் இந்தக் கதை முடியலாம் என்பதாய் நம்பினேன்.
அடுத்தொரு நாள், அவள் கண்களில் பாலூட்டிய என் தாயின் கண்களைக் கண்டேன். கருணை என்பதை வார்த்தைகளில் மட்டுமே உன்னால் உணர்ந்துகொள்ளமுடியுமா, அத்தனை கற்பனை உனக்கு இருக்கிறதா என்று சிரித்துவிட்டு அதைத் தந்தாள். இன்னொரு கூறு. அந்தப் பேற்றையும் பெற்றேன். இவ்வாழ்வில் இன்னும் பல இருக்கலாம் எனும் உண்மையையே அப்போதுதான் உணர்ந்தேன்.
’இது உன் முறை! உன் விருப்பம்’ எனும் குரல் கேட்கிறது. இப்போது நிறைமணி கொலுசுகள் கிலுங்க, வலக்கையிலிருந்த ஒரு பொம்மையை கிச்சுகிச்சுவென ஆட்டிக்கொண்டு, ஒரு பச்சை நிற காட்டன் கவுனில் உலகின் பேரழகையெல்லாம் தன் கண்களில் தேக்கிக்கொண்டு நிற்கிறாள். உன் பாற்பற்களால் அந்தப் பொம்மையைக் கடிக்காதேடி. என்னையே கடித்து விழுங்கிவிடேன் என்றேன். கரைந்துபோனேன். இன்னும் மிச்சமிருக்கிறது இந்த வாழ்க்கை.
ஜாய்ஃபுல், ப்ளிஸ், ஹேப்பினஸ், ப்ளெஷர், எக்ஸ்டஸி எதுவும் ஒன்றல்ல என்பதை, நுணுக்கமான அதன் பிரிவுகளை உணரத்தந்தாய் ஒரு பொழுதில். இந்நாளில் உனக்கும் அவையனைத்தையுமே அருளி ஆசீர்வதிக்கிறேன் பெண்ணே!
-எஸ்ஜிக்கான நல்வாழ்த்துகளுடன் கேகே!
.