அந்த விதை அதற்கு முன்னதாகவே விழுந்துவிட்டது. இளமையின் புத்தம் புதிய சிறகுகள்! உடல் எழுதும் ஓவியம்தான். உள்ளம் செய்ததாய் ஒரு கூடுதல் கற்பனை. செய்வனவற்றுக்கான நியாயங்கள் கற்பிப்பதே.. அதில் திளைத்திருப்பதே.. சுகம்தான்.
உணர்வாய் மனமே, அவள் இன்னும் சின்னப் பெண்தான்!
உனது பதினாறே உற்சாகம் எனில், அவளது பதினாறு? அது கடலை தன்னுள் கொண்டிருக்கும் துளி. காண உனக்கு கண்களும் போதாது. உணரவும் உய்க்கவும் உனது ரசனையும் போதாது. கடுமலையின் மீது பொழியும் பெருமழையில் கொஞ்சமாய் நீ நனைந்துகொள். எத்தனை போதாமை கொண்டது இந்த வாழ்வு? நீ நூறு பேராக இருந்தால் இது சாத்தியமாகுமா?
இத்தனை அழகாகவா ஒருத்தி இருக்கமுடியும்?
உனக்கு பொறுப்பே இல்லை பெண்ணே.. கொண்டாட்டம், பரிபூரணம், வாழ்வு எதுவும் உனக்குப் புரியவே இல்லை. விடு, நீ தவறு செய்தால் கூட அது அழகுதான்!
ஒவ்வொரு முறை உன்னை எழுத முயற்சிக்கும் போதும், ஐந்து வயதிலிருக்கும் என் மகள், சொல்ல வரும் விஷயத்தைச் சொல்ல ஒரு வார்த்தையைத் தேடித் திக்கித்திணறி நிமிடங்களாக போராடி, ’என்ன மொழி இது, இத்தனைக் கடினமா.. சொல்லாமலே புரியாதா உங்களுக்கு?’ என்ற அர்த்தம் தொனிக்க “அப்பா!” என்று முடித்துவிட்டு விலகும் தருணமாகவே எனக்கும் ஆகிவிடுகிறது.
‘புரியாதா உங்களுக்கும்? இது காதல்!’ :-))
இன்று மே 8! இது எனக்கான ஏப்ரல் 14! வாழ்த்துகள் அனைவருக்கும்!
.