மாற்றானின் தெலுங்கு வெர்ஷன் ‘பிரதர்ஸ்’ பார்த்ததால தலைப்புல ஒரு லு எக்ஸ்ட்ரா.. ஹிஹி! அதாவது நான் இன்னும் வேலை விஷயமாய் தெலுகு தேசத்திலேயே சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்பது இதன் உட்பொதிந்திருக்கும் சேதி! சரி, படத்தைப் பற்றிப்பார்ப்போம்..
சூர்யாவிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனா அது என்னன்னுதான் எனக்கும் புரியவில்லை. நிறைய வெரைட்டி காண்பிக்க மனிதர் மெனக்கெடுகிறார். ஆனால் அதுவே ரிவர்ஸாகி, நமக்கு ஏற்படுற ஃபீலிங்க்ஸ் என்னவோ ரொம்ப மொனாடனஸா இருக்கு. எந்த காரெக்டர்ல அவரைப் பாத்தாலும் சஞ்சய் ராமசாமி மாதிரியே ஒரு ராயல்+கேனை ஃபீல்தான் வருது. அவர் சரியில்லையா? அல்லது அவரை நம்ப டைரக்டர்ஸ்ங்கதான் சரியா பயன்படுத்தறதில்லையானு கொழப்பமாவே இருக்கு. மேலும் அவர் இந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ ஸ்டைல்லயே வசனம் பேசறதைக் குறைச்சுக்கிறது நல்லது. நடிப்பை விட உழைப்பு சமயங்களில் பிரமிக்கவைக்கும். தசாவதாரம் கமல், எந்திரன் ரஜினி மாதிரி. சூர்யாவின் உழைப்பும் அத்தகையதுதான். அதற்காகவேனும் பாராட்டத்தான் வேண்டும். மேலும், சில ஸோலோ காட்சிகளில், ஆக்டிவா, ஜிவ்வுனு இருக்கிறார். லாஜிகல் ஆக்ஷன் படங்கள்ல ஜொலிப்பார்னு தோணுது. கிடைக்கணுமே. பாப்போம்.
கேவி.ஆனந்த்+சுபா கூட்டணி ஓரளவு நல்ல பொழுதுபோக்கைத் தரும்னு நம்பலாம், என்ன இந்த வாட்டி ஜஸ்ட் மிஸ்ஸு. செம்ம மொக்கை போட்டுருக்காங்க. சுபாவின் நாவல்கள் படிக்கிறப்போ படம் பாக்குற அனுபவத்தைத் தரும். இந்தப்படம் அப்படியே ரிவர்ஸ். நாவல்ல மட்டுமே படிக்கமுடியக்கூடிய கண்டெண்ட்ஸ் படத்தில் நிறைய. முடியலை.. அதுவும் இவர் ஃபாரின் போய் ‘எனர்ஜியானின்’ பின்னணியை கண்டுபுடிக்கிறாரு, கண்டுபுடிக்கிறாரு (அதுவும் எப்பிடி? ஒவ்வொரு ஆளா விசாரிச்சிகினே இருக்காரு, கூட சின்மயி.. ஸாரி காஜல்) படம் முடியுற வரை கண்டுபுடிச்சிகினே இருக்காரு. கதைதான் இப்படி ஜவ்வு மிட்டாய்னு பாத்தா, அதெல்லாம் என்ன பிஸாத்துனு.. மட்டமான ஆக்ஷன் கோரியோகிராஃபி, மட்டமான மியூஸிக், மட்டமான காஸ்ட்யூம்னு எல்லோரும் கூட்டு சேர்ந்து கும்மியிருக்காங்க. முன்னாடில்லாம் வில்லன்கள், ஹீரோ போற காருக்கு ரெண்டு சைட்லயும் வெடிக்கிறா மாதிரி கரெக்டா வெடிகுண்டு போடுவாங்க. இப்போ ராக்கெட் லாஞ்சர் வரைக்கும் முன்னேறியிருக்கோம். மிஸைல்ஸ் கரெக்டா சைட்லயே விழுந்து வெடிக்குது. என்ன பண்றது? காஜல் அகர்வாலுக்கு காஸ்ட்யூம் டிஸைன் பண்ணியவரை கூப்பிட்டு வைச்சு மண்டையிலயே கொட்டலாம். இவ்வளவு அழகான ஹீரோயினையும் எப்படிய்யா கஷ்டப்பட்டு இப்படி அசிங்கப்படுத்துனேன்னு.
எல்லாத்துக்கு முக்கியமா ஒண்ணு. மற்றவங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இந்த டிவின்ஸ் லாஜிக் பிடிக்கவே இல்லை. ஒட்டிய ரெட்டைனா அது எவ்ளோ காம்ளிகேஷன். இவங்க ரெண்டு பேரும் ஏதோ விலாவுல சூயிங்கம் வைச்சு ஒட்டினா மாதிரி இருக்காங்க. அதுலயும் அவங்க இஷ்டத்துக்கு, ஒரு நேரம் நெருக்கமா ஒட்டிகிட்டிருக்காங்க, இன்னொரு நேரம் அரையடி, ஒரு அடினு முடிஞ்சவரைக்கும் விலகிக்கிறாங்க. எங்க சூயிங்கம் பிச்சிக்குமோனு நமக்கு அப்பப்போ ஒரு பயம் இருந்துகிட்டேயிருக்கு. இந்த அழகுல ஒருத்தருக்கு இதயமே இல்லையாம். இன்னொருத்தருக்கும் சேர்த்து ஒரு இதயம்தான் வேலை செய்யுதாம். ப்ளட் சர்குலேஷன்லாம் இந்த சூயிங்கம் வழியாத்தானாம். அதுலயும் இதயமில்லாதவர் தெம்பா எக்ஸர்ஸைஸ் பண்ணி, சிக்ஸ் பேக்ல வேற இருக்காரு. என்னவோ போங்க! டெக்னிகல் வளர்ச்சியையும், சூர்யாவின் உழைப்பையும் கூட மெச்ச மனம் வரவில்லை நமக்கு, இந்த லாஜிக் பிரச்சினையில்.
ஒருவரைப் பிரிந்த பின் இன்னொருவர் கொள்ளும் வேதனை போன்ற சில இடங்களில் சூர்யா மனம் கவர்கிறார். ஆனால் அதற்குக் கூட நேரம் கொடுக்காமல், இயக்குனர்தான் ஜெனிடிக்ஸ், இரட்டை, பிரிவு, காதல், அப்பா, ஆராய்ச்சி, பசுமாடு, எனெர்ஜியான், ராக்கெட் லாஞ்சர்னு எல்லாவற்றையுமே ’ஜஸ்ட் லைக் தட்’ டா ஹேண்டில் பண்ணியிருக்கிறார்.
மொத்தத்தில் மாற்றான்.. ஏமாத்றான்!